Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

இசை அரசன் 👑-50

ராஜாவுக்கு இன்னொரு மணிமகுடம்- இளையராஜா 50.

இசையால் வசமாகா இதயம் உண்டோ, இறைவனே இசை வடிவம் எனும்போது, தமிழ் இசையால் வசமாகா இதயம் உண்டோ என்ற பாடல் வரிகள் உண்டு.

இந்தப் பாடல் வரிகளை ஊர்ஜிதப்படுத்தியது இசைஞானி, இசை அரசன், பெயரிலேயே ராஜாவைக் கொண்ட இளையராஜா என்றால் அது மிகையாகாது.

தமிழ் சினிமா உலகின் சிறந்த பாடல்கள் என்றால் அதில் தவிர்க்க முடியாத, தலைசிறந்த பல பாடல்களில் இவர் பாடலும் இடம்பெற்றிருக்கும் என்பதும், இரண்டு அல்ல மூன்றாவது தலைமுறை ரசிகர்களும் மீண்டும் மீண்டும் மெய் மறந்து ரசிக்கும் பாடல்கள் என்றால் அதுவும் இவரது பாடல்கள் என்பதும் மறுக்க முடியாத மாற்றுக் கருத்து இல்லாத உண்மை.

அரை நூற்றாண்டு காலமாக இரண்டு தலைமுறை சினிமாவிற்கு உயிர் நாடியாக விளங்கும் இசை மற்றும் பின்னனி இசையின் மன்னனாக விளங்குபவர். கறுப்பு வெள்ளை காலம் துவங்கி இன்றைய டிஜிட்டல் யுகம் வரை, மோனோ , ஸ்டீரியோ, டிஜிட்டல், ஆரோ 3டி என இசை பல பரிமாணங்களை அடைந்தாலும் அது அத்தனையும் தாண்டி இன்றளவிலும் இசையில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு கோலோச்சிக் கொண்டிருப்பவர்.

புது ராகம் படைப்பதாலே இவரும் கடவுள் தான் என்று பாராட்டினாலும் தகும்.

இரவுப் பயணம் என்றால் சுகமாக பாடல்கள் கேட்க வேண்டுமென்றால் அதில் இவரது பாட்டுகள் இல்லாத பாடல் வரிசை இருக்காது என்பது 100 சதவீத உண்மை.

தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாள மக்களின் மனதிலும் கொடிகட்டுப் பறப்பவர்

இவரது சர்ச்சையான சில பேச்சுகள் மற்றும் சில செயல்களின் காரணமாக சில விமர்சனங்களைப் பலர் இவர் மீது வைத்திருந்தாலும் கூட, தமிழ்நாட்டில் இளையராஜா அவர்களின் பாடல்களின் ரசிகனாக இல்லாதவரென்று எவரும் இருக்க முடியாது.

சிம்பொனி இசையமைப்பின் மூலமாக தமிழ்நாட்டின் பெருமையை உலகறியச் செய்த இவருக்கு, இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று இவரது பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் பேசியிருப்பது வரவேற்க்கத்தக்கது.

அந்தப் பட்டத்திற்கான கலைப்பங்களிப்பை அளித்த பெருமை இவருக்கு உண்டு.

ஓயாமல் வாசித்த இவரது விரல்களுக்கு அளிக்கப்படும் மோதிரம் போன்றது கலைத்துறையில் இவரது சாதனைக்கான பாரத ரத்னா விருது.

இசை அரசன், இனிமையான பாடல்களின் நாயகன், இன்னொரு தலைமுறையும் ரசிக்கும்படியாக இன்னிசை அமைத்து இன்னும் பல சாதனைகள் புரிய நாமும் வாழ்த்தி வணங்கலாம்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.