நாம் இலங்கை அணியுடனான ஆட்டத்திற்குப் பிறகு எழுதியிருந்த்தைப் போலவே இன்று இந்திய அணியின் ஆட்டக்காரர்களின் தடுமாற்றம் நம்மை கடைசி ஓவர் வரை திகிலிலேயே வைத்திருந்தது. எளிமையாக அடைய வேண்டிய இலக்கு ஒரு கட்டத்தில் கடினமான சந்தேகத்திற்குரியதாக மாறி பிறகு ஒரு வழியாக திலக் வர்மாவின் திறமையான ஆட்டத்தினால் அடைய நேர்ந்தது .
நாம் குறிப்பிட்டிருந்தது போலவே சூர்யகுமார் யாதவ் அவர்களால் ரன் சேகரிப்பில் எந்த பிரயோஜனமும் இல்லை. மேலும் கில், சஞ்சு சாம்சன் ஆகியோர் வழக்கம் போல சொதப்பல்.
எல்லா ஆட்டங்களிலும் சிறப்பு காட்டிய அபிஷேக் சர்மா இறுதிப்போட்டியில் நம்மை சோதனைக்கு உள்ளாக்குவார் என்பதை நினைத்தது போலவே செய்து விட்டார்.
எதிரணிகளால் அதிலும் இருமுறை ஆடித்தோற்ற பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் நன்கு கணிக்கப்பட்டிருந்த அவரது ஆட்டத்திற்கு ஏற்றாற்போலவே பந்து வீசப்பட்டு அவரது விக்கெட் எளிதில் வீழ்த்தப்பட்டது.
அதையடுத்து கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பெரிதாக சோபிக்கவில்லை.
பொறுப்பை உணர்ந்த திலக் வர்மா, உயிரில்லாத நிலையில் இருந்து உயிர் கொடுத்தார் இந்திய அணிக்கு.
அவருக்கு பக்கபலமாக அந்தப்பக்கம் ஆடிய சஞ்சு சாம்சன் ரொம்பப் பெரிதாக சோபிக்காவிட்டாலும் மோசமில்லை.
எதிர்பாராத நேரத்தில் தனது நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய சிவம் தூபே கடைசி நேரத்தில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை கதி கலங்கச் செய்தார்.
ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்துத் தந்தார்.
இறுதி ஓவரில் ஒரு அருமையான சிக்சரை விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார் திலக்.
அவரில்லாவிடில் இன்று இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறியே!
இது இந்திய அணிக்கு நல்ல வெற்றி ஆனாலும் நல்ல பாடமும் கூட.
எதவும் எளிதாகக் கிடைத்து விடாது என்ற பாடம்.
பாகிஸ்தான் அணியும் கடைசி வரை போராடினார்கள்.
அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் செய்த வேலையை அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் செய்தருந்தால் நமது கதி அதோ கதி தான்.
மொத்தத்தில் தோல்வியை சந்திக்காத தொடராக முடித்து ஆசிய கோப்பையை 9 ஆவது முறையாக கைப்பற்றியிருக்கும் இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!