என்ன சொல்கிறார் மதராஸி?
மதராஸி என்பது நாம் இந்தி பேசும் மக்களை வடக்கன் என்று சொல்வது போல, இந்தி பேசாதவர்களை அவர்கள் அழைக்கும் பெயராகும்.
இப்போதெல்லாம் அது வழக்கொழிந்து விட்டது.
ரொம்ப பழைய பெயர் இந்த மதராஸி என்பது.
ஒருவேளை படத்திலும் புதிதாக பெரிய சரக்குகளைக் களமிறக்கவில்லை என்பதை சொல்லாமல் சொல்வதற்காகத் தான் இந்த மதராஸி என்ற பெயரை முருகதாஸ் தேர்வு செய்தாரா என்று தெரியவில்லை.
எடுத்த எடுப்பிலேயே முழுமையாகக் குறை சொல்வது போல இருந்தாலும், உண்மை அதுதான். ஒரு நல்ல மசாலா படம். அதிரடி சண்டைக் காட்சிகள் எல்லாம் அருமை தான். ஆனால் கதைக்களம் மிகப் புதிதல்ல. நாம் ஏற்கனவே கடந்து வந்த கதைக்களங்களைப் போலவே அமைக்கப்பட்ட கதை தான்.
ஆமாம். தீவிரவாதம் என்பதல்லாமல் அதற்கு ஒரு படி கீழே, துப்பாக்கி மாஃபியா, அதற்கான பின்புலமான சின்டிகேட் அதைத் தடுக்கும் சிறப்புப் புலனாய்வுப் படை, அந்தப் படைக்கு உதவி புரியும் கதாநாயகன். கதையின் சாராம்சம் என்னவோ பழசு தான் என்றாலும், சில காட்சியமையப்புகள் ஏ.ஆர்.முருகதாஸ் பாணியில் தரமான காட்சிகளாக அமைந்திருந்தது.
திரைக்கதையும், பளாஸ் பேக் தவிர்த்து, மீதி நேரத்தில் விறு விறுப்பாகத் தான் நகர்கிறது.
கதாநாயகன் எப்படி பயிற்சி பெற்ற காவலர்களுக்கு, அடியாட்களுக்கு இணையாக சண்டை செய்யப்போகிறார் என்பதற்காக, அவருக்கு மனப்பிறழ்வு நோய் இருப்பதாகவும், அந்த சமயத்தில் மிருக பலம் வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இது நாம் ஏற்கனவே 3 என்ற தனுஷ் படத்தல் பார்த்து விட்ட காரணத்தால், புதிதாக இல்லை.
ஆனால் இந்த மனப்பிறழ்வு காட்சிகள் உற்சாகமளிக்கும் விதமாக அமைந்திருந்தது.
வில்லன் வித்யுத்க்கு ஆரம்ப காட்சி சண்டை அற்புதமாக அமைக்கப்பட்டிருந்தது.
பிறகு மிக நீண்ட நேரம் கோமாவில் படுக்க வைத்து விட்டாலும், இறுதியில் அவருக்கு ஒரு கம்பேக் இருக்கும். அது அவ்வளவு அருமை.
கதாநாயகி நல்ல தேர்வு. கதையில் சொல்லப்படும், ப்ளாஷ்பேக்கின் சோகத்தைத் தாங்கி சுகமளிக்கும் தேவதையாக சித்தரிக்கப்பட்டதைத் தன் இயல்பான நடிப்பால் நியாயப்படித்தியிருக்கிறார். அவரையும் படம் முழுக்க நீட்டிக்க வேண்டும் என்று இறுதிக்காட்சி வரை ஆளாளுக்குத் தூக்கிச் சென்று துப்பாக்கிச் சண்டைகளுக்கு நடுவே ஓட விட்டிருக்கிறார்கள்.
அதையும் நன்றாகவே செய்திருக்கிறார்.
இடைவேளை காட்சி, சிவகார்த்திகேயன் ஸ்பெஷல் மற்றும் முருகதாஸ் ஸ்பெஷல்.
நல்ல விசில் பறக்கும் காட்சி.
இப்படி ஆங்காங்கே படம் நெடுக, ஆளாளுக்கு ஒரு காட்சியில் நம்மிடம், கைதட்டல் பெறுகிறரார்கள்.
கதை பற்றி எல்லாம் கவலை இல்லை. நல்ல பொழுது போக்கு, மற்றும் 3 மணி நேர ஆக்ஷன் படம் என்றால் எனக்கு விருப்பம் என்பவர்கள் தாராளமாக, 2-3 தடவை பார்க்கலாம்.
சண்டைக்காட்சிகள் அருமை. பல சண்டைக்காட்சிகளில் நல்ல உழைப்பு. சிவகார்த்திகேயன் சண்டைக்காட்சிகளை எல்லாம் ஒரே ஒரு ஸ்டைலான வித்யுத் தின் சண்டைக்காட்சி தூக்கி சாப்பிட்டு விடுகிறது.
கதாபாத்திரங்கள் என்ற ரீதியில் பிஜூ மேனன், சிவகார்த்திகேயன் சந்திப்பும், அதைத் தாண்டிய நடவடிக்கைகளும் ஆரம்பத்தில் செயற்கைத் தனமாகத் தோன்றினாலும், படத்தின் ஓட்டத்தில் இருவரின் பிணைப்பு போல, நாமும் அதோடு இணைந்து கொள்கிறோம்.
ஒரு நல்ல பொழுதுபோக்கு மசாலா ஆக்ஷன் படம். படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் தான். கத்தரித்திருக்கலாம்.
திரும்ப திரும்ப வெடிக்கும் துப்பாகிகளால் சின்ன எரிச்சல். இசை, பாடல் இன்னும் எரிச்சல்.
ஆனால் மொத்தத்தில் மோசமில்லை.