இன்று ஒரு தினசரியின் வாசகர் கருத்து பக்கத்தில் ஒரு கட்டுரை பிரசுரிகரகப்பட்டிருந்தது.
அந்த வாசகரின் பெயர், ரா.செல்வகுமார்.
முகவரி: தூக்குதண்டனைக் கைதி,
மத்திய சிறைச்சாலை,
திருநெல்வேலி.
அதைப் பார்த்ததும் எனக்குள் ஏதோ சிறிய தாக்கம்.
ஒரு கைதி, அதுவும் தூக்கு தண்டனை கைதி என்றால், தன் வாழ்நாளை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு ஆள்.
அவர், ஒரு தினசரிக்கு தனது மனதில் பட்ட உண்மையான கருத்தை எழுதி இந்த உலகத்தோடு உறவாட நினைக்கிறார். நினைத்தாலே நெகழ்ச்சியாக உள்ளது.
அவர் கட்டுரை எழுதியிருந்தது, சமீபத்திய தெரு நாய் பிரச்சினைகள் பற்றி.
அவரது முதன்மையான கருத்து,
நாய் எப்படித் தெரு நாய் ஆனது?
ஆம் முன்பெல்லாம் நகரங்களில் நாய் வளர்ப்பது என்பது பழக்கத்தில் இல்லை. கிராமங்களில் தான், அதுவும் நாட்டு நாய்கள் தான்.
இங்கே இப்போது இருக்கும் நாய்கள் போல, வீட்டுக்குள்ளே எல்லாம் இடம் கிடையாது.
நாய்கள் எப்போதும் வீட்டின் வெளியே தான்.
கிருமிகள் வரக்கூடாது என்பது கருதி இந்த வழக்கம்.
மிச்ச மீதி சாப்பாடு தான் அவற்றுக்கு உணவு.
வேட்டைக்குப் போகும் போது மட்டுமே அவிழ்த்து விட்டு வெளியே சுதந்திரமாக நடமாடும்.
மீதி நேரங்களில் வீட்டில் தான்.
இனப்பெருக்கம் என்பது வளர்ப்பவர்களுக்குத் தெரியாமல் நடப்பது அரிது.
தேவையான நேரங்களில் அவற்றுக்கான சுதந்திரம் உண்டு. ஆனால் இனப்பெருக்கம் முடிந்து குட்டி ஈன்ற உடன், அதில் நல்ல ஆண் குட்டிகளை எடுத்துத் தேவையான ஆட்களுக்குத் தருவார்களாம்
பெண் குட்டி தேவை என்றால் வைத்திருப்பார்களாம்.
இல்லாவிட்டால் மீதி இருக்கும் குட்டிகளை, ஆண் பெண் பேதமின்றி பாழடைந்த கிணற்றில் வீசி விடுவார்களாம். இது நாய்களின் இனப்பெருக்கம் அளவோடு இருப்பதற்காக செய்யப்பட்ட நடைமுறை என்று விளக்குகிறார்.
இந்த ஒரு விஷயம் நம் மனதை பாரமாக்கினாலும், அவர்கள் இதைச்செய்த்தற்கான காரணம், அவர்கள் அந்த நாய்களைத் தெரு நாய்களாக கட்டுப்பாடின்றி விட மனமில்லாமல் செய்ததாகச் சொல்கிறார்.
இப்போது அந்த வழக்கம் இல்லாமல், நாய்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போன காரணத்தால் தான், எண்ணிக்கை இல்லாமல் பெருகி, ஒழுக்கமில்லாமல் குப்பையைப் கிளறி உணவு உண்ணும் தெரு நாய்களாக மாறிப்போனதாக அவர் கருத்து சொல்கிறார்.
ஒரு இனம் ஒழுக்கமில்லாத இனமாக மாறுவதை விட, சில குட்டிகளை பலி கொடுப்பது பெரிய பாவச்செயல் இல்லை என்பது அவர் கருத்து.
இதே கருத்தைத் தானும் ஏற்றுக் கொண்ட காரணத்தினால் தான், தூக்கு தண்டனையை ஏற்றுக்கொண்டு, முகவரி எனும் இடத்தில் தூக்கு தண்ணனைக் கைதி, மத்திய சிறைச்சாலை, திருநெல்வேலி என்று போட்டாரோ தெரியவில்லை.
கவனிக்க ஆளில்லாத குட்டிகளைக் கொல்வது சரியா? அல்லது உயிரோடு போகட்டும், ஒழுக்கமில்லாத தெரு நாய் இனமாக மாறட்டும் என விடுவது சரியா?
இதில் சரியான கருத்து என்பது எதுவென சொல்ல எனக்குத் தெரியவில்லை.
தங்களுக்கு உடன்பாடானதைச் சொல்லவும்!