சக்தித் திருமகன் என்ன சொல்கிறார் பார்க்கலாம்.
சமீபத்தில் வெளியான விஜய் ஆன்டணி அவர்களின் 25 ஆவது படமான சக்தித் திருமகன் பெருவாரியான ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெறாவிட்டாலும், ஒரு முறை பார்த்து ரசிக்கக்கூடிய படம் தான்.
என்ன பழசு?
என்ன புதுசு?
பழசு என்றால், அதே ஊழல், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பித்தலாட்டம், ஏமாற்றப்படும் சுரண்டப்படும் வஞ்சிக்கப்படும் பொதுமக்கள் , இவர்களைக் காப்பது கதாநாயகனின் கடமை.
அவன் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், சாவும் நிலையே வந்தாலும் பொதுமகக்ளைக் காப்பாற்றுவதே தனது தலையாய கடமை என்று போராடும் கதாநாயகன்.
அதில் அவனுக்கு ஒரு பெரிய ஆதாயமும் இருக்கிறது என்பது புதுசு.
கதை என்னவோ நாம் பார்த்துப் பழகிய ஊழல், லஞ்சம், அரசியல் சுரண்டலுக்கு எதிரான கதைதான் என்றாலும் திரைக்கதையும் , காட்சிகளும் , கதை நகரும் பின்புலமும் , கதாநாயகனுக்கான பாத்திரமும் முற்றிலும் புதியது.
இதுவரை நாம் கண்டிராத திரைக்கதைப் பின்புலமும் கதாபாத்திரமும்.
சுவாரஸ்யத்திற்கு எள்ளளவும் பஞ்சமில்லை.
கதாநாயகன் தான் நினைத்த காரியத்தை முடிப்பதற்காக செய்யும் நகர்வுகள் அனைத்தும் கைதட்டலைப் பெறும் அட்டகாசமான காட்சிகள்.
வில்லனும், நாம் எதிர்பார்க்காத அளவிற்குப் பெரிய அளவில் நம்மை ரசிக்க வைத்தது மேலும் சிறப்பு.அந்த கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அருமை.
தலைமைச் செயலகத்தில் ஒரு சாதாரண இடைத்தரகராக பணியாற்றும், அதிலும் எடுபுடியாக வேலைக்குச் சேர்ந்து இடைத்தரகராக பணி செய்யும் கதாநாயகன், ஒரு ஐஜியின் பணிமாறுதல், ஒரு பெரிய மனிதரைக் கொலை செய்தல், பல ஆயிரம் கோடி பணத்தை கைமாற்றுதல், தனக்கு சொத்தமாக சில ஆயிரம் கோடிகளை சேர்த்து வைத்தல், பல்வேறு மக்களுக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய நல்ல திட்டங்களைச் செய்தல் என நாம் எண்ணிப் பார்க்க இயலாத பல இமாலய காரியங்களை அவர் எப்படி சாதிக்கிறார் என்பதை திரைக்கதையாக அமைத்து அதை நம்மால் ஏற்றுக் கொள்ளும்படி பரபரப்பான காட்சிகளோடு அமைத்ததில் அருவி இயக்குநர் வென்று விட்டார்.
என்னப்பா சிவாஜி படத்துல ரஜினி இதைத்தானே செய்தார் என்று தோன்றலாம்!
ஆனால் அது அதிரடி அடாவடி ரகம்.
இது சதுரங்க ஆட்டத்தில் காய் நகர்த்துதல் போன்ற புத்திசாலித்தனமான ரகம்.
கதாநாயகனின் அறிமுகமே அசத்தல் தான்.
அந்த கதாபாத்திரத்தின் புத்திசாலித்தனத்தை, நகர்வுகளைப் பற்றி விவரிக்கும் காட்சி .
அரசு வேலை பெறுவதற்காக 40 லட்சம் பணத்தை அமைச்சரின் உதவியாளரிடம் கொடுத்து ஏமாந்தவர்களிடம் இவர் எப்படி பணத்தைத் திரும்ப வாங்குகிறார் என்பதை விளக்கும் காட்சிகள் அருமை.
பள்ளி முதல்வரைக் கொலை செய்யும் போதும் சரி, நிலம் கைமாற்றும் சம்பவத்திலும் சரி, கதாநாயகன் எவ்வளவு புத்திசாலி என்பது நம்மை வியந்து பார்க்கச் செய்யும் காட்சிகள் .
மிகப்பரபரப்பான முதல் பாகம்.இரண்டாம் பாகத்தில் என்ன இருக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
முதல் பாகத்தில் உருவான சில கேள்விகளுக்கு பதிலும், கதாநாயகனின் முன்கதையும் வருகிறுது.
முன்கதையும் கூட ரசிக்கத் தகுந்த வகையில் அமைந்தது ஆறுதல்.
பிறகு பழிவாங்குதல் படலத்தில் நாம் பார்த்துப் பழகிய ஹேக்கிங் ரக காட்சிகள்..மிகப்பெரிய பாராட்டத் தகுந்த காட்சிகளாக இல்லாவிட்டாலும், மோசமில்லை.
கதாநாயகி நல்ல தேர்வு.செல்முருகன் , அடிக்கடி விவேக்கை நியாபகப்படுத்துகிறார்.
மொத்தத்தில் நல்ல பொழுதுபோக்கான மசாலாவோடு ஆழமான கருத்தும் சொன்ன சக்தித் திருமகன் பாராட்டத் தகுந்தவன் தான்!