வாய்ப்புக் கிடைக்காத வரை எல்லோரும் நல்லவர்கள் தான் என்றொரு சொல்லாடல் உண்டு.
நாம் அடிக்கடி காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை வசை பாடுவது உண்டு.
அவர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் அவர்கள் மோசமானவர்கள் என்று.
வாங்குற சம்பளம் போதாதா, பதவியில இருக்கிற திமிரு என்று வலுவாக என்னென்ன சொல்லி வசைபாட முடியுமோ அதை அத்தனையையும் மறக்காமல் செய்கிறோம்.
ஆனால் அந்த இடத்தில் நாம் இருந்தால் யோக்கியனாக இருப்போமா என்று கேட்டால் பதில் ?
இல்லை என்பது தான் ஆணித்தரமான உண்மை.
சந்தர்ப்பம் கிடைக்கும் வரை எல்லாரும் யோக்கியன் தான் என்ற சொல்லாடலை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் டெல்லியில் நிகழ்ந்த சம்பவம்.
டெல்லியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காவல் ஆய்வாளாராகப் பணிபுரியும் ஒருவர், சாமானியர் ஒருவரை மிரட்டி உன்மீது பொய் வழக்குப் போடாமல் இருக்க எனக்கு ரூ.15000 லஞ்சமாகத் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு முன்கதை எல்லாம் தெரியவில்லை.
அந்த காவல் ஆய்வாளருக்கும் இவருக்கும் என்ன வில்லங்கம், ஏன் இந்த பொய் வழக்கு சமாச்சாரம் என்பதெல்லாம் விளக்கமாக இல்லை.
இந்தக் கதையைத் தொடரலாம்.
காவல் ஆய்வாளர் தன்னிடம் 15000 லஞ்சம் கேட்டதை விரும்பாத அந்த சாமானியர், அவரை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க நினைத்திருக்கிறார். அதனால் லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார் அளித்து அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை காவல் ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார்.
அந்தப்பணத்தைப் பெற்றுக் கொண்டு காவல் ஆய்வாளரோ, அது ரசாயனம் தடவப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையின் பணம் என்பதை அறிந்து கொண்டு , லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று எண்ணி அந்தப் பணத்தைப் பறக்க விட்டு விட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
பணத்தை எறிந்து விட்டு ஓடிய காவல் ஆய்வாளரைப் பிடித்து விட்டார்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்.
ஆனால் காவல் ஆய்வாளர் பறக்க விட்ட 15000 ரூபாயில் 5000 ரூபாயை அலேக்காக அபேஸ் செய்த ஆசாமியைத் துரத்திப் பிடிக்க இயலவில்லை.
அந்த சந்தர்ப்பம் கிடைக்கும் வரை, அந்த சாமானியனும் தன்னை யோக்கியனாகவும், நேர்மையானவனாகவும், அந்த காவல் ஆய்வாளரை மோசமான லஞ்சப் பேர்வழியாகவும் வசை பாடிய ஆளாகத்தான் இருந்திருப்பான்.
ஆனால் ஒரு சந்தர்ப்பம் அமைந்த உடனே அத்தனை காவலையும், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் மிரட்டலையும் மீறி தான் அந்தப்பணத்தோடு தப்பித்தால் போதுமென ஓடித் தப்பித்தும் விட்டான்.
இவன் அந்தக் காவல் ஆய்வாளரை விட பலே திருடனல்லவா?
நம்மில் பலரும் அப்படித்தான்.தப்பு செய்யும் பலரையும் வசைபாடிக் கொண்டும், திட்டிக்கொண்டும், மோசமானவன் என்று பேசிக் கொண்டும் யோக்கியனாக நாடகமாடிக் கொண்டிருக்கிறோம்.
இதெல்லாம் ஒரு நல்ல சந்தர்ப்பம் அமையாத வரையிலும் தான்.
ஆனால் சந்தர்ப்பம் அமைந்து விட்டால்? நாமும் திருடன் தானா?
நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.