சுங்கச் சாவடி கொள்ளை பற்றி நாம் முன்னரே ஒரு கட்டுரை விரிவாக எழுதியிருக்கிறோம்.
நமது கட்டுரையில் எழுதப்பட்ட பல சாராம்சங்களின் அடிப்படை மாறாமல் இன்று ஒரு தினசரி நாளிதழில் தலையங்கத்தில் சமீபத்திய சுங்கச் சாவடி கட்டண உயர்வு பற்றியும், மற்ற ஒளிவு மறைவுகள் பற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது.
முதல் விஷயம், முக்கியமான விஷயம் என்னவென்றால் சுங்கச்சாவடி என்பது நெடுஞ்சாலைகளில் 60 கிமீ தொலைவிற்கு ஒன்றுதான் இருக்க வேண்டும்.
அந்த வகையில் கணக்கிட்டால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 20 சுங்கச் சாவடிகள் தான் இருக்க வேண்டும் என்பது அந்த்த் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் தமிழ்நாட்டில் இருப்பது மொத்தம் 78 சுங்கச்சாவடிகள்.
அதில் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு 40 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது.தற்போது மீதமிருக்கும் 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.
சுங்கச் சாவடிகளின் கட்டண வசூலிப்பு என்பது அந்த குறிப்பிட்ட பகுதியின் சாலை அமைப்புக்கான பணம் வட்டியும் முதலுமாக வசூலான பின்பு, வெறுமனே பராமரிப்புக்கான தொகை மட்டும் தான் வசூலிக்கப்பட வேண்டும்.அதாவது மொத்த நிர்ணயத் தொகையிலிருந்து 40 சதவீத கட்டணம் தான் வசூலிக்கப்பட வேண்டும்.
நமக்கு விவரமறிந்து தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த சுங்கச்சாவடியும் கட்டண வசூல் காலம் முடிந்தது என்று கட்டணத்தைக் குறைத்ததாகத் தெரியவில்லை.
மாறாக ஆண்டுதோறும் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்ந்துகொண்டு இருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்த உடனே இந்த சுங்கச்சாவடி பிரச்சினையை மத்திய அரசிடம் வாதிட்டு எண்ணிக்கைக்கு அதிகமாக இருக்கும் சுங்கச்சாவடிகளை மூடபபோவாதாக அறிவித்தது.
ஆனால் மத்திய அரசும் இதை சரிசெய்யவில்லை.
மாநில அரசும் அதை செய்து காட்டவில்லை.
அரசியல் வாதிகளும் ஓரிரு நாள் அறிக்கை விடுத்து ஓய்ந்து விடுகின்றனர்
இந்த சுங்கச்சாவடி கட்டண வசூலிப்பு மர்மங்கள் மக்களைப் பொறுத்த வரை மர்மமாகத்தான் உள்ளன.
ஒரே ஒரு மன ஆறுதல் என்னவென்றால் ,3000 ரூ கட்டினால் ஓராண்டு பயணிக்கும் திட்டம்.
நியாயமான முறையில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுமாயின், இந்த 3000 ரூ சலுகை எல்லாம் யாரும் சட்டை செய்யப்போவதில்லை.
இந்த தாயத்த கட்டியிருந்தா ராத்திரி 12 மணிக்குக் கூட சுடுகாட்டுக்குப் போகலாம் என்ற கதையாக, 3000 ரூ கட்டினால் ஆண்டு முழுக்க எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
3000 ரூ கட்டினாதுக்காக நாங்க எதுக்குங்க தேவையில்லாம தேசிய நெடுஞ்சாலைக்குப் போகப்போறோம்?
அதுவும் பெட்ரோல் விக்கிற விலையில?
ஒரு நல்ல அரசாங்கம் என்பது மக்களுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் நல்லது செய்யும் அரசே ஒழிய சுரண்டும் அரசு அல்ல.
சரிசெய்யப்படுமா இந்த சுங்கச்சாவடி கொள்ளை.