Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வீக் எண்ட் (வீக்) பிரச்சார வியூகம்.

அரசியல் களம் மிக அதிகமாக சூடு பிடிக்கிறது.

2026 சட்டமன்றத் தேர்தல்போட்டி மும்முனைப் போட்டி என்பது உண்மையா அல்லது மாயையா என்பது ஊர்ஜிதமாகாவிட்டாலும், மிகப்பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் தவெக என்ற அரசியல் கட்சியை மூன்றாவது போட்டியாளராக பதிவிட்டிருக்கிறது.

ஆனால் அந்தக் கட்சியின் சார்பாக தொடர்ச்சியாக பெரிய செயல்பாடுகள் இல்லாதது அதற்கு மிகுந்த பின்னடைவைத் தான் ஏற்படுத்தி வைக்கிறது.

மாநாடு முடிந்து ஓரிரு நாட்கள் தவெக தவெக என்று பேசிய வாய்கள் எதுவும் இப்போது அதைப்பற்றி பேசுவதே இல்லை..காரணம் அந்த கட்சியின் நடவடிக்கைகள் எதுவும் பிரதானமாக பேசுபொருளாக அமையவில்லை.
குறைந்தபட்சம் ஏதாவது அறிவிப்புகள், கூட்டணி முயற்சி என்ற ரீதியில் கூட நடவடிக்கைகள் இல்லை.

இவ்வளவு நாள் கழித்து இப்போது தான் அந்த கட்சித் தலவைர் விஜய் அவர்களின் பிரச்சார அறிவிப்பு பற்றிய செய்தி வந்துள்ளது.

ஏற்கனவே ஆட்டத்தில் இருக்கும் அணிகளை விட, ஆட்டத்திற்குள் புதிதாக நுழையும் அணிதான் மிக அதிகமாக செயலாற்ற வேண்டும்.ஆனால் இந்த அணியோ அப்படி செயலாற்றுவதாகத் தெரியவில்லை.

இரண்டாவது பெரிய கட்சியான அதிமுக வில் மிகப்பெரிய அளவில் பிளவுகளும், விரிசல்களும் சண்டை சச்சரவுகளும் மூண்டுள்ள இந்த நேரம் ஒரு புதிய கட்சி உள்ளே வர மிக நல்ல நேரம்.

போட்டி குறைய வாய்ப்புகள் அதிகமுள்ளது.
அந்தக் கட்சியின் கூட்டணி குளறுபடிகளில் துவங்கி உள்கட்சி பூசல் குளறுபடிகள் வரை, அதன் எதிராளியான திமுக விற்கு என்ன பலம் சேர்க்குமோ, அதே போன்ற பலனை புதிதாக உருவெடுக்கும் கட்சிக்கும் உண்டு.

ஆனால் சந்தர்ப்பத்தை தவெக எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதே இங்கே முக்கியம்.

வீக் எண்ட் பிரச்சாரம் என்று வீக்கான அரசியல் நடவடிக்கைகள் மீண்டும் அந்தக் கட்சியை மக்கள் மனதில் வெறும் காட்சிப் பொருளாகத்தான் ஆக்குகிறதே ஒழிய நம்மை ஆள வந்த கட்சி, ஆட்சியைப் பிடிக்க வந்த கட்சி என்ற உணர்வைத் தருவதில்லை.

3 மாத காலத்தில் வார இறுதி நாட்களில் அதிலும் ஞாயிறு விடுமுறை.
சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம். பகுதி நேர வேலையாள் போல இது பகுதி நேர அரசியல் திட்டமாக அல்லவா தோன்றுகிறது?

சரி சனிக்கிழமை சனிக்கிழமை போகட்டும்.ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான பிரச்சாரம், 15 நாட்களில் முடியும் என்றால் அது எப்படி ஆகும்?

உதாரணத்திற்கு கன்னியாகுமரி , நெல்லை , தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களுக்குச் சேர்த்து ஒரே ஒரு நாள் பிரச்சாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா பாணியில் சொல்ல வேண்டும் என்றால் , வாமா மின்னல் என்ற வடிவேலு காமெடியில் மணப்பெண் யார் கண்ணுக்கும் தெரியாமல் , மின்னல் போல வருவதும் போவதுமாகத் தான் இருக்கும் இந்தப் பிரச்சாரம்.

சற்று விளங்கப் பார்க்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி என மாநகராட்சிகள் மட்டுமே 3 உள்ளது.

ஒரு மாநகராட்சிக்கு இரண்டு நாட்கள் கணக்கு செய்தாலே 6 நாட்கள் தேவை.
அதில்லாமல் நகராட்சிகள், அதிலும் எதிரணியின் பலம் மிகுந்த சங்கரன்கோவில், கோவில்பட்டி போன்ற நகராட்சிகள்.

சொல்லப்போனால் அவர் மாநகராட்சி , நகராட்சி , ஊராட்சி, கிராமங்கள் என்று இந்த மூன்று மாவட்டங்களில் அவர் குறைந்தது , 15-20 நாட்களும், அந்த மாவட்டத்தில் பிரபலமான அவரது சகாக்கள் இரண்டு முதல் மூன்று மாதங்களும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அவரது துரதிருஷ்டம், அப்படியான மாவட்டப் பிரபலங்கள் அவரது கட்சியில் இல்லை.

அவர் ஒருவர் தான் முகம் காட்டியாக வேண்டும்.
அந்த ஒருவருக்குத் தான் இப்போதைக்கு ஆதரவு.

அதனால் அவர் இப்படி பகுதி நேர அரசியல் செய்வதெல்லாம் வேலைக்கு ஆகாத ஒன்று.

பார்க்கலாம்.தளபதியின் நடவடிக்கைகளை.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.