அரசியல் என்பது மக்கள் சேவை, மக்களின் நலன், பொது சிந்தனை , பொது வாழ்வு என்பதெல்லாம் மாறி வியாபாரமாகிப் போனது.
10 ரூ போட்டு 100 ரூ சம்பாதக்க, பதவி போகத்தை அனுபவிக்கத் தான் இன்றைய அரசியல்வாதிகளும் அரசியலும்.
உயர்மட்டத்தில் துவங்கி அடிமட்டம் வரை இன்று இதுதான் நிலை.
ஒரு காலத்தில் கொள்கை ரீதியான அரசியல் முன்னெடுப்பு, கொள்கை ஈர்ப்பு, பொது சிந்தனை என்ற காரணத்திற்காக பணக்காரர்கள் முதல் பாமரன் வரை அரசியலில் ஈடுபட்டனர்.
அவரவர் தாங்கள் உழைத்த பணத்தில் ஒரு பங்கை கட்சிக்கு நிதியாக அளித்து, வேலை நேரம் போக மீதி நேரத்தில் கட்சிக் கூட்டம், பேரணி , மாநாடு என்று கலந்து கொண்டு பொது சேவை செய்து வந்தனர்.
அவர்களுடைய நோக்கம் பொது சிந்தனையாக இருந்தது .
கட்சியில் ஏழை பணக்காரன் பாகுபாடு இல்லாமல் பதவிகளும், பொறுப்புகளும் வழங்கப்பட்டது.
ஆனால் இன்றைய அரசியலோ, அதற்கு முற்றிலும் நேர்மாறாக உள்ளது.
சாதாரண கவுன்சிலர் பதவிக்கே பல இலட்சங்களை வாரி இறைக்க வேண்டி இருக்கிறது.
அப்படி பணம் கொடுத்து வென்றவர்கள் பொது சேவையா செய்வார்கள்?
5 லட்சம் செலவு செய்தால் பத்து லட்சம் சம்பாதிக்கத்தானே செய்வார்கள்.
இன்றைய நாளில் கட்சிப் பதவிகளே பணம் சம்பாதிக்கும் கருவி தானே?
நேற்றைய நாளிதழில் அடுத்தடுத்து இரண்டு பெட்டிச் செய்திகள்.
திமுக வைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் , 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை.
பாஜக நிர்வாகியின் மகன் கஞ்சா விற்ற கதை என இரண்டு செய்திகள்.
இவர்கள் இது மாதிரியான தவறுகளைச் செய்வதே கட்சி பின்புலத்தில் இருக்கும் அதிகாரத் தமிழில் தானே?
காவல்துறை பிடித்து மட்டும் என்ன மாறிவிடப் போகிறது?
கட்சி பதவிதான் காப்பாற்றி விடுமே?
அரசியல் என்பது மக்களின் சேவைக்கானது.
அது புனிதமானது.
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு.
கேவலம் இந்தப் புனிதமான அரசியல பயன்படுத்ததாதீங்கனு ரஜினிகாந்த் அண்ணாமலை படத்துல ஒரு வசனம் பேசியிருப்பார்.
அன்றைய சூழலில் இருந்து இன்று வரை அரசியல்வாதிகளின் அந்தப் போக்கு அதிகரித்து தான் வருகிறது.
குறைந்தபாடில்லை, குறையப்போவதும் இல்லை.
நல்ல அரசியல்வாதியை மக்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்.
அதுவரை அரசியல் என்பது வியாபாரம் தான்.
அரசியல்வாதிகள் என்பவர்கள், கஞ்சா விற்பவர்களாகவும், பாலியல் தொழில் புரோக்கர்களாகவும் இருக்கப் போகும் உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
பணம் வாங்கி ஓட்டுப் போடும் வரை நாடும் நாட்டு மக்களும் இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும்.