Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

விளையாட்டுப் போட்டிகள் இதற்குத்தானா?

பண்டிகைகள், விளையாட்டு , பொழுதுபோக்கு இப்படி பல விஷயங்களை நாம் மதிப்பளித்து, செலவு செய்து கொண்டாடுவதும், போற்றுவதும் நம்மை பண்படுத்தவும், நமக்கு ஒரு மன ஆறுதலுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் தான்.

உலகின் மிக முக்கியமான ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டதற்கு முழுமுதற்காரணமே , நாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கத்தான்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள், கிட்டத்தட்ட இந்திய இராணுவத்திற்கும், பாகிஸ்தான் இராணுவத்திற்கும் நிகழும் சண்டைகளுக்கு ஈடாக நிகழ்ந்து முடிந்தது என்று சொன்னால் மிகையாகாது.

இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களோடு கைகுலுக்காதது , பாகிஸ்தான் வீரர்கள் தேவையில்லாத செய்கைகளைச் செய்து வெறுப்புணர்வைத் தூண்டியது, அடித்து துவம்சம் செய்யப்பட்டு தோற்றுப் போன பிறகு பாகிஸ்தான் வீரர் பரிசைத் தூக்கி எறிந்தது .
அதன்பிறகு வரலாற்றுச் சம்பவமாக வெற்றி பெற்ற இந்திய அணி வெற்றிக் கோப்பையே வாங்கிக் கொள்ளாமல் வெற்றிக் கொண்டாட்டங்களை நிகழ்த்தியது என்று எல்லாமே ஒரு கொண்டாட்ட மனநிலையிலேயே முடிந்திருந்தாலும், உள்ளர கவனிக்கும் போது, நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் என்ன காரணத்திற்காக உருவாக்கப்பட்டதோ அது இல்லாமல் , இப்படி போர் போல, இரு நாட்டு வீரர்களும் மாற்றி மாற்றி அமர்க்களம் செய்வது, அவர்களுக்கு ஆதரவாக மக்களும் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் வசைபாடித் தாக்கிக் கொள்வது என எல்லாமே முரணாகத்தான் நிகழ்கிறது.

நாம் உண்மையிலேயே விளையாட்டுப் போட்டிகளானது நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக நிகழ்வதை உணர்ந்து திருந்த வேண்டும்.

சோயப் அக்தரின் பந்தை சச்சின் ஓட ஓட அடித்த காலத்தில் இவ்வளவு வன்முறையோ , வெறுப்புணர்வோ கிடையாது. இரு அணி வீரர்களுக்கு இடையே ஒரு அன்பு இருந்தது.

ஆனால் இப்போது பல்வேறு புறச்சூழல் மற்றும் அரசியல் சூழல் காரணமாக இரு நாட்டு வீரர்கள் இடையிலும் சரி மக்களிடையிலும் சரி நல்லிணக்கம் என்பது இல்லை…
இதை அப்பாவி மக்களைக் காவு வாங்கும் தீவிரவாதிகள் உணரப்போவதில்லை…ஆனால் அந்தத் தீவிரவாதிகள் நினைத்தது நிகழும் விதமாக நமது இரு நாடுகளும் இப்படி நாளுக்கு நாள் மோதிக் கொள்வது அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதே ஆகும்.

உணர்வோமா?

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.