படித்ததில் பிடித்தது!
கிளினிக்கில்
மூன்றரை வயது பெண் குழந்தைக்கு
தொடர்ந்து மூன்று நாட்களாக காய்ச்சல்
கூடவே வாந்தி
பரிசோதித்ததில்
சீசனல் ஜூரம் என்று கண்டறிந்து
அதற்குரிய சிகிச்சை பரிந்துரைத்து அனுப்பினேன்.
மறுநாள்
குழந்தையின் அம்மா
“காய்ச்சல் சரியாகிடுச்சு சார்.. பாப்பா மோஷன் கருப்பா போறா சார். பயமா இருக்கு.. அதான் கூட்டிட்டு வந்தேன்”
காய்ச்சல் மூன்று நாட்களாக இருந்து
நான்காவது நாள் குணமாகி கூடவே
மலம் கருப்பாகச் சென்றால்
நம்ம புத்தி நேராக
டெங்குவுக்குத் தான் செல்லும்.
பரிசோதனை செய்தேன்.
பாப்பா நன்றாக இருந்தார்.
வாந்தி குணமாகி இருந்தது.
வயிற்று வலி இல்லை.
ஆனாலும் மலம் கருப்பாக் செல்கிறது.
டெங்குவில் முதல் மூன்று நாட்கள் காய்ச்சல் இருக்கும். அதற்குப்பிறகு காய்ச்சல் குணமாகி விடும். ஆனால் அப்போது தான் பிரச்சனைக்குரிய நாட்கள் ஆரம்பமாகும்.
தட்டணுக்கள் குறையத் துவங்கும்.
ரத்த உறைதலில் பிரச்சனை ஏற்படும்.
ரத்த நாளங்களுக்குள் நீர் இருப்புக் கொள்ளாமல் வெளியேறி வயிற்றிலும் நுரையீரலிலும் நீர் சேர்ந்து கொள்ளும்.
மலத்தில் ரத்தம் வெளியேறுவதால் கருப்பாகச் செல்லும். இதை மெலீனா என்று கூறுவோம்.
குழந்தை பரிசோதனை செய்ததில் சற்று தேறி இருந்தாள். எனினும் குழந்தை என்பதால்
ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
எதற்கும் சோதனை செய்து பார்த்து விடுவோம் என
ரத்த அணுக்கள் சோதனை செய்தேன்
அனைத்தும் நார்மல்.
மலத்தில் ரத்தத்தைப் பரிசோதிக்கும் அக்கல்ட் ப்லட் பரிசோதனையும் நெகடிவ்
நான் டெங்கு எலிசா பரிசோதனை கேட்கவில்லை
ஆனால் குழந்தையின் அம்மாவே தானாகக் கூறி
டெங்கு பரிசோதனையும் சேர்த்தே செய்து வந்து விட்டார்.
அதுவும் நார்மல்.
இந்த டெஸ்ட்களையெல்லாம் காட்டி விட்டு குழந்தையையும் என்னிடம் காட்டி விட்டுப் போக வந்திருந்த போது
குழந்தை முரண்டு பண்ணி அழுது கொண்டே இருந்தது.
அப்போது தாய் குழந்தையிடம்
“அமைதியா இரு பாப்பா..
சமத்தா இருந்தா உனக்கு இன்னைக்கும் பிரவுனி கேக் வாங்கித் தருவேன்” என்றார்
நான் கேட்டேன்
“பிரவுனி கேக்கா?”
“ஆமா சார். இவளுக்கு புடிச்ச கேக்”
“பிரவுனி கேக் சாப்ட்டா மோஷன் கருப்பா போகும் மா. அதுல கருப்பு நிறத்த கொண்டு வர்றதுக்காக கோக்கோ பவுடர் சேர்ப்பாங்க. அதுனால மோஷன் கருப்பா போயிருக்கு.
தயவு செஞ்சு கொஞ்ச நாளைக்கு கருப்பு கலர் கேக் கொடுக்காதீங்க.
மோஷன் நார்மல் கலருக்கு வந்துடும்”
என்றேன்.
கருப்பா மோஷன் போனா
அக்கல்ட் ப்லட்டா தான் இருக்கணும்னு இல்ல
பிரவுனி கேக்காகவும் இருக்கலாம்…
மிலீனியம் மதர்ஸ்
காய்ச்சல் கார பேபீஸுக்குக் கூட
பிரவுனி கேக் வாங்கிக் கொடுத்து
நம்மள சுத்தல்ல விடுறாங்கம்மா…
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை




