ஏதோ ஒரு படத்தில் நடிகர் விவேக் அவர்கள் நகைச்சுவையாக ஒரு விஷயம் சொல்வார்.
எங்க ஊரிலெல்லாம் மருத்துவமனைக்குச் சென்றால் தான் இறந்து விடுவோமோ என்ற பயம் இருக்கிறது என்று.
அதை அப்போது இருந்த கால கட்டத்தில் வெறும் நகைச்சுவையாகக் கடந்து செல்ல இயலவில்லை.
ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றைய நவீன மருத்துவ உலகில், சளி இருமலுக்காக டானிக் உட்கொண்ட 11 குழந்தைகள் உயிர்பலி ஆகி உள்ளது என்பது மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை உண்டு செய்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இன்றைய தினம், அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் குழந்தைகளிக்குத் தர வேண்டாம் என்று அறிவித்த கோல்ட்ரிஃப் என்ற இருமல் டானிக் சம்பந்தமான வருத்தம் தான்.
அதெப்படி ஒரு மருந்தை, அதுவும் குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாகத் தயாரிக்கும் மருந்தை விஷத்தன்மையோடு தயாரிக்க முடியும்?
எங்கிருந்து வந்தது இந்த அலட்சியம்?
இறந்த குழந்தைகளின் சிறுநீரக திசுக்களில் டை எத்திலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் இருப்பதாகத் தகவல்.
இறந்த பிறகு இந்தத் தகவல் இந்த ஆராய்ச்சி எல்லாம் செய்து என்ன பலன்?
தயாரிக்கப்பட்ட மருந்தின் தரம் பரிசோதிக்கப்படாமல் அந்த நிறுவனமோ, மருத்துவக் கழகமோ எப்படி அதை வியாபாரத்திற்குப் பரிந்துரைத்தது?
பாமர மற்றும் ஏழைக் குழந்தைகள் தான் சாகப் போகிறது என்ற மெத்தனமா?
ஒரு மருந்து தயாரிக்கப்படும் போது அதன் வேதி மூலப்பொருட்களின் தரத்தில் துவங்கி மருந்து தயாரான பிறகு ஒவ்வொரு தொகுப்பிலும் ஒன்று பரிசோதிக்கபட்டு தரம் முடிவான பிறகே சந்தைப்படுத்தப்படுகிறது என்று நம்பி வாங்கிய அப்பாவி மக்களுக்கு கிடைத்த பரிசா இது?
அப்படி என்றால் அந்தப் பரிசோதனை தர ஆய்வு எல்லாம் பெயரளவிற்கு தான் நிகழ்கிறதா?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற ரீதியில் ஒரு தொகுப்புக்கு ஒன்றை சரியான முறையில் தரப் பரிசோதனை செய்யாமல் விட்ட அலட்சியம் தான் இத்தனை உயிர்பலிக்கு மூல காரணம்.
மக்களிடம் இதைப் பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவுரை எல்லாம் நல்லது தான்.
ஆனால் இதற்குக் காரணமானவர்களைக் கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும், அந்தத் தொழிற்சாலை முடக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கும்!