நாங்கலாம் புயல்லயே உக்காந்து பொரி சாப்புடறவங்க என்று வசனம் வேண்டுமானால் பேச எளிதாக இருக்கலாம்.
ஆனால் புயல் அடித்தால் கதிகலங்கிப் போய்விடுவோம் என்பதை சமீபத்திய தானே, வர்தா , கஜா ஆகிய புயல்கள் நமக்குப் பாடம் நடத்திச் சென்றிருக்கின்றன.
புயல் ஏன் உருவாகிறது எப்படி உருவாகிறது?
நாம் பள்ளிக்கல்வியில் படித்த பகுதி தான்.
கடல்நீர் வெப்பம் அதிகரிக்கும் போது அதன் மேல்பகுதி காற்று சூடாகி மேலே எழும்.
இதை நாம் பல நேரங்களில் உணர்ந்திருக்கலாம். கிணற்றிலோ குளம் குட்டையிலோ நல்ல வெயில் காலத்தில் மேற்பரப்பு நீர் சூடாக உணரப்படும்.உள்ளே கைவிடும் போது உள்ளிருக்கும் நீர் குளிர்ந்த தன்மையோடு உணரப்படும்.
இதைப்போன்ற நிகழ்வு தான் கடல்நீரிலும் நடைபெறுகிறது.
மேலிருக்கும் சூடான நீர் மேலே எழும்போது கீழே குறைந்த காற்றழுத்தம் உருவாகும் காரணத்தால் சுற்றியுள்ள குளிர்ந்த காற்று அதனை நிரப்ப வரும் போது வலுவான சுழற்சி ஏற்பட்டு புயல் உருவாகிறது.
நம் நாட்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவக்காற்று என இரண்டு வகை பருவகாலங்கள் உண்டு.
அரபிக் கடலில் புயல் உருவாகும் போது அங்கிருந்து கிளம்பும் காற்று உள்நோக்கியும் வட இந்தியப் பகுதிகளை நோக்கியும் பயணித்து மேற்குத் தொடர்ச்சி மற்றும் இமய மலைகளில் மோதி கேரளா மற்றும் வட இந்தியப் பகுதிகளில் மழைப்பொழிவைத் தருகிறது.
அப்போது நாம் மழை மறைவுப் பகுதியாக இருப்பதால் பெரிய அளவில் நமக்கு மழை இல்லை.

பூமியின் சுழற்சி காரணமாக அந்தக் காற்று மழை பொழிந்து வலுவிழந்து வடகிழக்காகப் பயணித்து வங்காள விரிகுடாவை அடைந்து வடகிழக்குப் பருவமழைக்காலமாக தமிழ்நாடு , புதுச்சேரி , ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் மழைப்பொழிவைத் தருகிறது.

உலகின் அதிக வெப்பமயமாதல் காரணமாகவும், அணுக்கதிர் கழிவுகள் கடலில் கலப்பது போன்றவற்றின் காரணமாகவும் கடல்நீர் மிக விரைவாக வெப்பமடைந்து கொண்டே இருப்பதால் புயல் அதிகமாக உருவாகிறது.
வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைப்பது என்பது அந்தந்தப் பருவத்தின் முடிவல்ல.
2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்கு ஒரு முறை பின்பற்றப்படுகிறது.
வங்காள விரிகுடா புயலினால் மழைப்பொழிவையும் பாதிப்பையும் பெறும் 7 நாடுகள் ஏற்கனவே அவர்கள் பரிந்துரைத்த பெயர்களை சுழற்சி முறையில் வைக்கிறார்கள்.
இதில் உள்ள நாடுகளாவன.
இந்தியா,பங்காளதேஷ், இலங்கை, தாய்லாந்து, மியான்மர், ஓமான், பாகிஸ்தான்.
ஒவ்வொரு நாடும் தனது சார்பில் 8-10 பெயர்களைப் பட்டியலில் பரிந்துரைத்துள்ளார்கள்.
அவற்றை சுழற்சி முறைப்படி ஒவ்வொரு புயலுக்கும் வைக்கிறார்கள்.
ஏதாவது ஒரு புயல் மிகப்பெரிய சேதங்களை விளைவித்தால் அவற்றின் பெயர் நீக்கப்பட்டு புதிய பெயர்கள் சேர்க்கப்படும்.
அப்படியென்றால் கஜா , வர்தா புயல்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதா என்ற ஆர்வம் நமக்கு ஏற்படலாம்.
ஆனால் இல்லை.
காரணம் கஜா , வர்தா புயல்கள் ஏற்படுத்திய சேதம் இங்கே குறிப்பிட்டப்பட்ட அளவில் இல்லை.
கணத்த பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் இருந்தால் தான் அந்தப்புயல்களின் பெயர்கள் நீக்கப்படும்.
உதாரணம், Eta மற்றும் lota புயல்கள்.
புயல்களின் பெயர்கள் ஒவ்வொரு ஆறு ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.
அதிலும் கஜா என்ற பெயர் பட்டியலில் தரப்பட்டால், மீண்டும் எப்போதாவது இந்தப் பெயர் உபயோகிக்கப்படலாம்.
கூடுதல் தகவலாக , கஜா என்ற பெயரை வழங்கிய நாடு இலங்கை.
இதற்கு யானை என்று அர்த்தம்.
வர்தா என்ற பெயரை வழங்கியது பாகிஸ்தான் .
இதற்கு உருது மொழி அர்த்தத்தில் சிவப்பு ரோஜா என்பது பொருள்.
தற்போது உருவாகியுள்ள புயல் மோந்தா.
இந்த மோந்தா என்ற பெயர் தாய்லாந்து நாடு வழங்கியது.
இதற்கு அழகு மலர் என்று பொருளாம்.
புயல் மழை வெள்ளம் என்பதையெல்லாம் நம்மால் தடுக்க இயலாது.
ஆனால் குறைக்க இயலும்.
மரம் நடுதல் , உலக வெப்பமயமாதலைக் குறைப்பதற்கான வழிகளைப் பின்பற்றுதல் போன்றவற்றால் இந்தப் புயல்கள் அடிக்கடி உருவாகாமல் குறைக்க இயலும்.



