தீபாவளி.
பண்டிகை என்றாலே மகிழ்ச்சி தான்.
அதிலும் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம்.
புத்தாடைகளும், மத்தாப்பும், பட்டாசும், பலகாரமும், என அது தரும் நினைவுகளும் மகிழ்ச்சியும் ஏராளம்.
குழந்தைப் பருவத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்து திகட்டத் திகட்டக் கொண்டாடும் பண்டிகை என்றால் அது தீபாவளி தான்.
அதிலும் குறிப்பாக 90 களின் குழந்தைகளுக்கு தீபாவளி என்பது தன் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத திகட்டாத இன்பத்தை அள்ளித் தந்த பண்டிகை தான்.
எனது வாழ்விலும் தீபாவளியைப் பற்றிய மகிழ்ச்சிப் பகிரல்கள் ஏராளம் உண்டு..இப்போது அது மாதிரியான மகிழ்ச்சியான தீபாவளியைக் கொண்டாட இயலவில்லையே, தீபாவளியைத் திருநாள் ஆக்கிய அப்பா என்னோடில்லையே என்ற வருத்தத்தைத் தாண்டி ஒவ்வொரு தீபாவளிப் பண்டிகையின் போதும் , பழைய தீபாவளி கொண்டாட்ட நினைவுகள் மனதில் வந்து போகத் தவறுவதில்லை.
இப்போது பல வீடுகளில் புதுத்துணி என்பது நினைத்த நேரமெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்.
ஆனால் அப்போதெல்லாம் நாங்கள் ஜவுளிக்கடைகள் பக்கம் போவதே, தீபாவளிக்கும், பள்ளி சீருடைக்கும் தான்.
அதிலும் குறிப்பாக தீபாவளி தான் முக்கியமானது. அதைத் தவிர்த்து ஏதாவது ஒரு உனவினரின் திருமணத்திற்கு துணி எடுத்துக் கொடுத்தாலொழிய புதுத்துணி என்பதே கிடையாது.
அதனால் ஒவ்வொரு வருட தீபாவளி துணியும் எங்களுக்கு மிகப்பெரிய சொத்து தான்.
கிட்டத்தட்ட பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு, எந்த வருட தீபாவளிக்கு எந்த சட்டை எடுக்கப்பட்டது என்பதை மறக்காமல் நினைவில் வைத்திருப்போம்.
துணிக்கே இந்த நிலை என்றால் ,பட்டாசு? சொல்லவே வேண்டாம்.
ஓரளவு வசதியான வீட்டுக் குழந்தைகளுக்கே பட்டாசுகள் என்பது நிஜம்..மற்ற குழந்தைகளுக்கு அது கனவு தான்.
ஆனாலும் அந்த வசதி படைத்த வீட்டுக் குழந்தைகளுடன் மற்ற வீட்டுக் குழந்தைகளும் இணைந்து கொண்டு, தேங்காய் சிரட்டைக்கு அடியில் பட்டாசு வைப்பது, ட்ரம்க்கு அடியில் வைப்பது, பட்டாசை கொளுத்தி கிணற்றில் வீசி வெடிக்க வைப்பது இப்படி பல வகையிலும் அந்த பட்டாசு வெடிக்கும் நிகழ்வைக் கொண்டாட்டமாகத் தான் செய்தோம்.
மிளகாய் வெடி எனப்படும் பிஜிலி வெடிகளை இரண்டு மூன்று சேர்த்துக் கொளுத்துவது, இரண்டு மூன்று புஷ்வானங்களை ஒரு நேரத்தில் கொளுத்துவது என்று பட்டாசு வெடிப்பதையே ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியாகக் கொண்டாடிய நாட்கள்.
ரெடிமேட் ஆடைகள் வருவதற்கு முன்பு , துணிகளை எடுத்துத் தைக்கும் வழக்கம் தான்.
வழக்கமாக இரவு 9 மணிக்கெல்லாம் தூங்கும் பருவம் தான், ஆனாலும் தீபாவளிக்கு முந்தைய இரவு தூக்கமே வராது.
வீட்டிலிருக்கும் பட்டாசு ஒரு புறம் நம்மைத் தூங்கவிடாது, இன்னொரு புறம், டெய்லர் எப்போது துணியைத் தைத்துத் தருவார் என்ற ஏக்கம்.
மாலை 6 மணியிலிருந்தே பலமுறை டெய்லர் கடைக்கு நடையோ நடை என நடப்போம்.
ஒவ்வொரு முறையும் ஏதாவது சொல்லுவார். பட்டன் வைக்கனும், காஜா போடனும், அயர்ன் பண்ண போயிருக்கு என்று சொல்லி சொல்லி அலைக்கழித்து ஒரு வழியாக இரவு 11-12 மணிக்கு புதுத்துணியைத் தருவார்.
அப்போதே மனதில் ஒரு பேராவல் ஏற்படும்.
இப்போதே துணியைப் போட்டு விடலாமா என்று.
அப்பா உடனே அதட்டுவார்.காலையில சாமி கும்பிட்ட பிறகு தான் புதுத்துணி போட வேண்டும், அதை எடுத்து உள்ளே வை என்று.
அதற்குப் பிறகு ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகத் தோன்றும்.
அதிகாலையிலேயே எழுந்து பட்டாசுகளை எடுத்துக் கொண்டு, கூட்டாளிகளையும் உசுப்பி வெடிக்கத் துவங்குவோம்.
டீ குடிக்க வா , எண்ணெய் மாய்த்துக் கொள்ள வா என்று
வீட்டிலிருந்து மாறி மாறி அழைப்பு வரும்.
அம்மா ஒரு புறம் வடை சுட்டுக் கொண்டிருக்க, அப்பா நம்மை இழுத்துப் பிடித்து உடல் முழுக்க எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்ட, குளித்ததற்கும் அதற்கும் பசி குடலைக் கிள்ளும்.
வடை குடும்மா என்று கேட்டால், அதற்கான பதிலும் சாமி கும்பிட்ட பிறகு என்று தான் பதில் வரும்.
அந்தப் பொறுமை காத்தலும் ஒரு சுகம் தான்..
வீட்டில் அனைவரும் குளித்து முடித்து சாமி கும்பிட்டு முடித்து புத்தாடை உடுத்தி, வடையை சாப்பிடும் போது வரும் மகிழ்ச்சி வாழ்நாள் முழுக்க நினைவில் இருக்கும் நீங்கா நினைவுகள் தான்.
இப்படி தீபாவளி என்றாலே ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நினைவு தான்.
பருவங்கள் மாறி , காலங்கள் ஓடி விட அனைத்தும் மாறிவிட்டது.
இன்று ஏனோ அந்தப் பழைய மகிழ்ச்சி இருப்பதாகத் தோன்றவில்லை.
பண்டிகைக்கு ஊருக்குப் போக பேருந்து கட்டணத்தைப் பார்த்தாலே கதி கலங்கிப் போகிறது.
அதையும் தாண்டி பேருந்தில் பதிவு செய்து ஊருக்குக் கிளம்பினால், ஏன்டா கிளிம்பினோம் என்று வருந்தும் அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி நம்மை பாடாய்ப்படுத்துகிறது.
எல்லாம் அந்தந்தப் பருவத்தில் தான்.
அதனால் குழந்தைகளை இனியைமாகக் கொண்டாடச் செய்யுங்கள்.
மறக்க முடியாத நல்ல நினைவுகளை ஏற்படுத்திக் கொடுங்கள்.
பண்டிகைகள் மகிழ்ந்து சிரித்துக் கொண்டாடத் தானே?
நாம் நமது குழந்தைப் பருவத்தில் எப்படி எதிர்பார்த்து ஏக்கத்தோடு மகிழ்ச்சியோடு தீபாவளியைக் கொண்டாடினோமோ அதே போல், அடுத்த சந்த்திக்கும் நல்ல நினைவுகளைத் தருவோம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்🙏🏼