Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

எப்போது விடியுமோ?

இத விட மோசமான சூழ்நிலை வரவே வராதுல அப்படின்னு நாம நம்ம வாழ்க்கையில சில நேரங்களைக் கடந்து வந்திருப்போம்.

அப்படியொரு சம்பவம் தான் இது.
ஆனால் இவருக்கு இது புதிதல்ல..
இதைப் போன்ற பல மோசமான சூழ்நிலைகளை அவர் சந்தித்திருந்தாலும், விடாப்பிடியாக மனம் தளராமல் எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து தனக்கு மனநிறைவான வேலையைச் செய்பவர்.

வேறு யார்?
தன் வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயி தான்.

இது வழக்கமாக நிகழ்வது தானே?

பயிர் போட்டு வானத்தைப்பார்த்தால் மழை வராது, ஆற்றில் தண்ணீர் வராது, அல்லது மழைபெய்து மொத்த பயிரும் மூழ்கி விடும்.
இது தானே வாடிக்கை, இதிலென்ன புதிதாக இருக்கிறது என்று தானே யோசிக்கத் தோன்றுகிறது?

இதுவும் அதுபோல ஒன்று தான், ஆனால் கணக்கு அதாவது பணமாக கணக்கு போட்டு எவ்வளவு நஷ்டம் என்பது இந்த விஷயத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.

நஷ்டம் என்றால் 10 ரூபாய்க்கு பொருள் உற்பத்தி செய்து 8 ரூபாய்க்கு விற்பனை செய்து 2 ரூபாய் நஷ்டப்பட்ட கதை அல்ல.

66000 ரூபாய் செலவு செய்து 65400 ரூபாய் நஷ்டமடைந்த கதை.

நினைத்துப் பாருங்களேன், அவரது பணம் போனது ஒரு புறமிருந்தாலும், உழைத்த உழைப்பெல்லாம் வீணாகிப் போன பிறகு மீண்டும் அந்த வேலையைச் செய்யத் தோன்றுமா?

நாம் செய்வோமா?

இத செஞ்சா மட்டும் என்ன ஆகப்போகுது ஒரு பைசாக்குப் பிரயோஜனமில்லை என்று சொல்லும் நம்மைப்போன்ற ஆட்களுக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் நஷ்டமடைந்து மனம் உடைந்தாலும் விவசாயமே கதி என்று வாழும் விவசாயிகள் எவ்வளவு போற்றுதலுக்குரியவர்கள்?

இந்த விவசாயி புனே மாநிலத்தின் புரந்தர் பகுதியைச் சார்ந்தவர்.
வெங்காய சாகுபடி செய்து பயிருக்காக காத்திருந்த காலத்தில் இடைவிடாத மழையால் பெரும்பாலான பயிர்கள் சேதமடைந்திருக்கிறது.
எஞ்சிய 7.5 குவிண்டால் வெங்காயத்தை அவர் சந்தைப்படுத்திய போது அதற்கான மதிப்பு 1729 ரூபாய்.

ஆள் கூலி வண்டி வாடகை எல்லாம் போக மீதி கையிருப்பு 600 ரூ.

இவர் செலவு செய்த தொகையோ 66000 ரூபாய்.

இவ்வளவு பெரிய ஏமாற்றம் அடைந்த பிறகும் அவர் விவசாயத்தை விட்டு ஓட நினைக்கவில்லை.

எஞ்சிய மழையில் வீணாகிப் போன வெங்காயத்தை உரமாக்கி, மீண்டும் அந்த நிலந்தில் விவசாயம் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

10 ரூ செலவு செய்தால் 5 ரூபாய் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் இந்தக் காலத்தில் இப்படி விவசாயமே கதி என்று வாழ்பவர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறப்பதே இல்லை.

வெங்காயம் விலை உயர்ந்தால் வயிற்றில் அடித்துக் கொள்ளும் நாமும், பதட்டப்படும் அரசாங்கமும், வெங்காயம் போட்டு 100 சதவீதம் நஷ்டமடைந்த விவசாயிகளுக்காக ஒன்றும் செய்வதில்லை.

பயிர் காப்பீடு இருக்கே என்று சொல்லலாம்.
ஆனால. அதில் என்ன தந்து விடப்போகிறார்கள்?
படித்த மக்களையே காப்பீட்டு நிறுவனங்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகின்றன.
பாவம் விவசாயிகள் என்ன செய்வார்கள்?

எப்போதுதான் இவர்களுக்கு ஒரு விடிவு காலம் வருமோ?

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.