Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

கனவுகளை சிதைத்த விபத்து!

நாம் சரஸ்வதி பூஜை அன்று வாகனங்களுக்குத் தேவை பூஜை மட்டுமல்ல, பராமரிப்பும் தான் என்று எழுதியிருந்தோம்.

அதை நிரூபிக்கும் விதமாக நெஞ்சை உலுக்கும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

கனவுகளோடு வாழ்க்கையை வாழக் காத்திருக்கும் நான்கு இளைஞர்களின் வாழ்வை முடித்திருக்கிறது பாழாய்ப்போன தறிகெட்டு ஓடிய லாரி ஒன்று.

ஓசூர் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முன்னே சென்ற காரின் மீது தறிகெட்டு ஓடிய லாரி மோதி அந்தக்கார் அதற்கு முன்னே சென்ற ஒரு சரக்கு வாகனத்தில் மோத, காரில் இருந்த நான்கு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர்.

அந்த இளைஞர்களில் ஒருவர் கனடாவில் வசிக்கும் ஈரோடு மாநகரைச் சேர்ந்தவர்.
ஐந்து மாநங்களுக்கு முன்பு திருமணமாகி இருக்கிறுது.
தனது தலை தீபாவளியைக் கொண்டாட கனவுகளோடு வந்த அந்த இளைஞரும், அவரை பெங்களூரு விமான நிலையத்திற்கு வரவேற்கச் சென்ற மூன்று நண்பர்களும் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அவர்களது வாழ்வு இப்படி அஸ்தமனமாகிப் போகக் காரணம், பாழாய்ப்போன அந்த லாரி தானே?

ஒரே நேரத்தில் நான்கு குடும்பங்களில் மரண ஓலத்தை ஏற்படுத்தியது கவனமின்மை மட்டுமல்ல, சரியான பராமரிப்பின்மை, அளவை மீறிய பாரத்தை ஏற்றிப் பயணித்தல் , மது போதையில் வாகனத்தை இயக்குவது, வேகமுடுக்கியின் அடியில் கல்லை வைத்து வாகனத்தை இயக்குவது, சரியான தூக்கமின்றி சோர்வுடன் வாகனத்தை இயக்கி, சீக்கிரம் இலக்கை அடைய நினைப்பது, இப்படியான ஏதோ ஒரு காரணம் தான்.

பாவம், இப்போது ஆராய்ந்து என்ன செய்வது?
தலை தீபாவளிக்குக் கணவர் வருகிறார் என்று காத்திருந்த மனைவியின் ஆற்றொணாத் துயரம்தான் தீருமா?
நண்பனை அழைக்கச் சென்ற மகன் காலையில் வீடு திரும்பி விடுவான் என்று காத்திருந்த பெற்றோர்களின் புத்திர சோகம் தான் மாறுமா?

எத்தனை எத்தனை இன்னல்களில் இருந்து தப்பி கனவுகளைச் சுமந்து கொண்டு வாழ்கிறோம்.
இந்த ஈடு செய்ய இயலாத மனித வாழ்வு அற்ப காரணங்களுக்காக அழிய வேண்டுமா?

இதற்குத்தானா இத்தனை கட்டமமைப்புகளும் சாலை வடிவமைப்புகளும் , வசதிகளும்?

விபத்து என்பது ஒரு நாள் நிகழ்வல்ல.
வாழ்நாள் முழுதும் தீராக் காயத்தை அளித்து விடும், தாங்க இயலாத துயர சம்பவம்.

விபத்துகள் நிகழாமல் தவிர்க்க, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவனமாக செயல்படுவோம்.

இன்னொரு உயிர் சாலையில் போக வேண்டாமே?

வாகன ஓட்டிகளே , வாகன உரிமையாளர்களே!
வாகனப் பராமரிப்பும், சாலை விதிகளும் வாழ்விற்கு மிக அவசியம்.

தயவு செய்து கடைபிடிப்போம்!

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.