Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இன்னும் எத்தனை போலி?

டாக்டர் கிட்டயும் , வக்கீல் கிட்டயும் பொய் சொல்லக்கூடாதுனு சொல்லுவாங்க, ஆனா உங்ககிட்ட சொல்லக்கூடாத இன்னொன்னு, ” எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல”.
கறந்துருவீங்களே?

இப்படி கேப்டன் விஜயகாந்த் ரமணா படத்தில் ஒரு வசனம் பேசியிருப்பார்.

ஒரு தனியார் மருத்துவமனையில் நிகழும் மிகப்பெரிய அநியாயத்தை எதிர்த்து அவர் பேசிய வசனம் இது.

அவரது குழந்தை சைக்கிளிலிருந்து கீழே விழுந்து அடிபட்டதற்காக மருத்துவமனை சென்ற அவருக்கு 40000 ரூபாய் வரை மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படும்
பிறகு ஒரு இறந்தவரின் சடலத்தைக் கொண்டு சென்று, எங்க அண்ணன் மயங்கி விழுந்துட்டாருன்னு சொல்ல, இறந்த சடலத்திற்கு மருத்துவம் பார்ப்பது போல, நாடகமாடி மருத்துவக் கட்டணமாக 4 லட்ச ரூபாய் வரை வசூலித்ததோடல்லாமல். பாக்கி 3 லட்சம் தர வேண்டும் என்று சொல்வார்கள்.இந்த காட்சிகளை நாம் எந்த எதிர்ப்பும் இல்லாமல், ஏற்றுக் கொண்ட மனநிலையில் தான் பார்த்தோம்.
ஏனென்றால் நமக்கும் மருத்துவமனைகள் மீதான எண்ணம் அந்தக்காட்சிகளில் இருந்ததோடு ஒத்துப் போயிருந்தது.

என்னதான் மருத்துவமனையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்றாலும், இப்ப இருக்கிற மருந்து மாத்திரை எல்லாம் நம்ப முடியலப்பா, எல்லாம் ஏமாத்து வேலை, பக்க விளைவுகள் , ஆனா வேற வழியில்ல, இப்ப இருக்கிற இந்த வாழ்க்கை முறைக்கு , ஆங்கில மருந்துகளை உட்கொண்டு தான் காலம் தள்ள வேண்டியுள்ளது என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு தான் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

இரு வாரத்திற்கு முன்பு , பிரபலமான சளி மருந்தை உட்கொண்ட சில பிஞ்சுக் குழத்தைகள் உயிரிழந்த செய்தியை அறிந்து சொல்லொணாத் துயரத்தை அடைந்தோம்.

அந்த ஆத்திரமும், சோக வடுக்களும் அடங்கும் முன்பே, இதோ அடுத்த போலி. பொதுவாக காய்ச்சல் , உடல்சோர்வு என்றாலே உடலுக்குத் தேவையான ஆற்றல் வேண்டும் என்று மருத்துவர்களால் பரிந்துரைப்பட்டது என்று நம்பி நாம் வாங்கிப் பருகிய ORS இன்று தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

எனக்கு நினைவிருந்து நான் வாந்தி காய்ச்சல் என்று பாதிக்கப்பட்ட போதெல்லாம் ORS குடித்திருக்கிறேன்.

அது என் உடலில் என்ன மாற்றத்தைச் செய்ததோ தெரியவில்லை. இது மாதிரி இங்கு இப்போது சிந்திக்காத மக்கள் 100 ல் ஒன்றோ இரண்டோ தான்.
ஏனென்றால் அந்த அளவிற்கு ORS விற்பனை ஜோராக நிகழ்ந்துள்ளது.

இப்போது அது போலி என நிரூபணமாகியுள்ளது.

இங்கே குறிப்பிடப்பட்டது தடை செய்யப்பட்ட குளிர்பான வகை ORS தான்.

ஏனென்றால் இந்த குளிர்பான வகை ORS வந்த பிறகு பெரும்பாலான மக்கள் பொடி வாங்கி கலந்து குடிக்கும் வகை ORS பொடிகளை வாங்குவதில்லை.

சில காலம் முன்பு அதாவது 20-25 வருடங்களுக்கு முன்பு மதுரைப்பக்கம் எல்லாம், காய்ச்சல் என்று மருத்துவர்களை அணுகும் போது, ஊசி மாத்திரை கொடுத்து விட்டு, உடலில் சோர்வு நீங்க டெரினோ வாங்கிக் குடிங்க என்று சொல்வார்களாம்.
அதாவது ஒரு குளிர்பானம் அந்த அளவிற்கு நம்பகத்தன்மையோடு இருந்திருக்கிறது.
இதெல்லாம் குளுக்கோஸ் ஏற்றும் கலாச்சாரம் வருவதற்கு முந்தைய காலம்.
குளுக்கோஸ் க்கு பதிலாக உடலில் தெம்பு தருவதற்காக தான் டொரினோவை குடிக்கச் சொல்வார்களாம்.

அப்போதெல்லாம் வியாபாரம் என்பது நம்பகத்தன்மையோடு இருந்தது.
கொடுப்பவனும் வாழ வேண்டும், வாங்குபவனும் வாழ வேண்டும் என்ற ரீதியில்

இப்போதெல்லாம் காசு கொடுத்து விஷத்தை வாங்கி உபயோகக்கிறோம்.

வியாபாரி மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற நிலை வந்து விட்டது.

உஷாராகத் தான் வாழவேண்டும்

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.