ஒரு குற்றவாளியைப் பிடிப்பது முக்கியமல்ல, அவர் என்ன குற்றம் செய்தாலும் பரவாயில்லை.
ஆனால் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தகுந்த சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாவிட்டால், அவர் விடுவிக்கப்படுவார் என்பது சாதகமா? பாதகமா?
ஒரு சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து தூக்கி எறிந்து மறுநாள் அதே இடத்திற்குச் சென்று அந்தக் குழந்தையின் சடலத்தை எரித்தார் என்று பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டு, கீழ் நீதிமன்றத்திலும் , உயர் நீதிமன்றத்திலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தண்டனைக் குற்றவாளி தன்னுடைய பணபலத்தால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து , இன்று குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டு, விடுதலையும் செய்யப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே அவர் ஜாமீனில் இருந்த போது அவரது தாயாரை கொலை செய்ததாக இன்னொரு வழக்கும் உள்ளது.
அப்படியிருக்க இந்த நபர் எப்படி அந்தக் குற்றத்தை செய்திருக்க மாட்டார் என நமது நீதி அவரை விடுதலை செய்தது?
சரி அவர் செய்யவில்லை என்றால் அந்தக் குழந்தையும் , அந்தத் தாயும் இறந்தது எப்படி?
குழந்தை தானாகவே பாலத்திலிருந்து விழுந்து குதித்து இறந்து பிறகு மறுநாள் தீயும் வைத்துக் கொண்டதா?
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் , ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டனை அனுபவிக்கக் கூடாது, தகுந்த சாட்சியங்களும் , ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவல்லை என்றெல்லாம் இன்னும் எத்தனை குற்றவாளிகள் தப்பிக்கப் போகிறார்களோ?
இவர் ஒருவேளை நிரபராதி என்றால் இத்தனை வருட தண்டனை எதற்கு?
இவர் தான் குற்றவாளி என்று காவல்துறையும், இரண்டு நீதிமன்றங்களும் உறுதி செய்த பிறகு, தன்னுடைய பணபலத்தைக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு திறமையான வக்கீலை வைத்து வாதாடி , தான் நிரபராதி என்று சொல்லி அவரால் வெளியே வர இயல்கிறது என்பது ஜீரணிக்க இயலாத கசப்பு.
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் எப்படி சரிவாரதோ, அதேபோல , கடுமையான மன்னிக்க இயலாத குற்றவாளிகள் தகுந்த சாட்சியம் இல்லை என்று சொல்லித் திறமையான வக்கீல்களை வைத்து வாதாடி வெல்வது அநியாயம்.
பாவம் அந்தப் பிஞ்சுக் குழந்தை..எப்படி துடிதுடித்து இறந்திருக்கும்.
கேவலம் அந்தப்பிள்ளையை க் கொன்னவனைக் கண்டறிந்து தண்டிக்க இயலாத நிலையில் இருப்பது தலைகுணிவு.
நீதியின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டது.