Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பசுந்தோல் போர்த்திய ஓநாய்கள்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ஒழுக்கம் என்பது உயிரினும் மேலானது என்ற வள்ளுவனின் வாக்கு புத்தகத்திலும், தேர்வில் எழுதி இரண்டு மதிப்பெண் பெறுவதற்கும் தான் என்று மாறிப் போனது.

கோவில், கடவுள், பக்தி , இறை நம்பிக்கை என்பது மனிதன் தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று பயந்து ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான்.
ஆனால் இன்று அது ஒரு அன்றாட செயலாகவும், போட்டி மனப்பான்மையிலும், பகை மூட்டுவதற்கும் தான் பயன்படுகிறது.

மத அமைப்புகளின் தலைவர்களாக இருக்கும் பலர் , அந்தப் பதவியை தவறான வழியில் பயன்படுத்தி , தன் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளவும், பணம் சம்பாதிக்கவும் செய்கின்றனர்.

இதில் அந்த மதம் இந்த மதம் என்ற பாகுபாடுகள் எதுவும் இல்லை.

ஒழுக்கமாக ,புனிதமாப் போற்றப்பட வேண்டிய பதவிகள், மனிதனின் ஆசையைத் தீர்ப்பதற்கும் பணம் சம்பாதிப்பதற்குமான கருவியாக மாறிப் போனது.

இன்றைய செய்தியில் , இந்து மகா சபா தலைவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்திற்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது என்ற தகவல் இருந்தது.

இவர் தனது வீட்டுப் பணிப்பெண்ணுடன் தகாத உறவு கொண்டிருந்தததோடு அல்லாமல், அந்தப் பெண்ணின் துணையோடு , அவளது உறவுக்கார சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்.

சாதாரண ஒரு மனிதன் கூட செய்வதற்கு அஞ்சும் மாபாதகச் செயல், பாலியல் வன்கொடுமை, அதிலும் சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய இவர் மனிதனாக இருப்பதற்கே லாயக்கில்ல்லாதவர், ஆனால் பார்த்தால் இந்து மகா சபா வின் தலைவராக இருக்கிறார்

இவரின் செயல் இவருக்கு மட்டுமல்லாது இந்து மதத்திற்கும் பெரிய பழி தான்.

இந்த மாதிரி காமுகர்களால் தான் இந்து மதத்தில் காலம் காலமாக புனிதமாக பின்பற்றப்பட்ட தேவதாசி முறை ஒழிந்தது.

மதத்தின் பெயரால் பசுந்தோல் போர்த்திக் கொண்டு இப்படி ஒழுக்கம் கெட்ட தரமற்ற செயல்களைச் செய்பர்களை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது.
இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை அடுத்து பதவியேற்கப் போகும் ஆட்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.

இவர்களெல்லாம் தோட்டத்தில் விதைக்கப்படும் பயிர்களுக்கு ஊற்றும் தண்ணீரையும், தெளிக்கும் உரத்தையும் உறிஞ்சுக் குடித்து வளரும் களை.
இவர்களை ஈவு இரக்கமின்று களைய வேண்டும்.
இல்லாவிட்டால் மதத்திற்கும் , கடவுளுக்கும் , பக்திக்கும் உள்ள மதிப்பு காணாமலே போய்விடும்.

ஆனால் யதார்த்தம் என்னவென்றால், இவர் யோக்கியன் என்றும், பழிவாங்குகிறார்கள் ஒரு கூட்டம், அதுவும் மதத்தின் பெயரையும் கடவுளின் பெயரையும் சொல்லிக் கொண்டு அவருக்காக கொடி பிடிக்கும்.

இது மாதிரியான சம்பவங்கள் தான் பல மனிதர்களுக்கு கடவுளின் மீதும் ,பக்தியின் மீதுமான நம்பிக்கையை அறுத்து எரிகிறது.

பார்க்கலாம்.என்ன நடக்கிறது என்று.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.