Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இதெல்லாம் தப்பு ப்ரோ!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு.

ஆனா இந்த விஷயத்தைக் கேளுங்க.
எதிர்பார்த்ததை விட அதிக வரவு.

வெற்றி என்றால் இப்படி இருக்க வேண்டும்.
ஊர் உலகமே வியக்கும் அளவிற்கு மாபெரும் வெற்றி.

சும்மா நாங்களும் வென்றோம், நாங்களும் வசூலித்தோம்னு பேசுகிறவர்கள் மத்தியில் , வசூல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், வெற்றி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் , இலக்கைத் தாண்டிய மாபெரும் வெற்றி என்பது இதுதான் என்று நிரூபணமாகி இருக்கிறது.

இதை வாசித்த உடனே பலரும் மனதில் நினைத்திருப்பீர்கள், நான் ஏதோ காந்தாரா திரைப்படத்தின் வெற்றியைப் பற்றி எழுதயிருக்கிறேன் என்று.
அதுதான் இல்லை.
அதாவது கடின உழைப்பு, விளம்பரம், ஒருவர் சொல்லி இன்னொருவருக்குப் பரவி இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.

நான் குறிப்பிட்ட இந்த வெற்றி எந்த ஒரு விளம்பரமும், முயற்சியும் இல்லாமல் மக்கள் தேடித் தேடி கொடுத்த வெற்றி.

எந்த ஒரு மெனக்கெடலும் இல்லாமல், நிர்ணயித்த இலக்கைத் தாண்டி சாதிப்பது என்பது இந்த ஒரு விஷயத்தில் மட்டுமே நிகழும்.

இதுக்கு மேல குழப்பினா , டென்ஷன் ஆகி கட்டிங் போடலாமானு தோணலாம்.

நான் சொன்ன மாபெரும், இலக்கைத் தாண்டிய வெற்றி கட்டிங் போடுவதில் கிடைத்தது தான்.

சென்ற ஆண்டு தீபாவளி வியாபாரம் 438 கோடி, இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 600 கோடி.

ஆனால் விற்பனை ஆனது 789 கோடி. .85 கோடிய விட்டுட்டு ரவுண்டு பண்ணியிருக்காங்க.

789 கோடிய ஒப்பிடும் போது 85 லட்சம் லாம் ரவுண்ட் அப் பண்றது நியாயம் தானே?

இதுலயும் வழக்கம் போல, முதல் பரிசு பெற்ற மதுப்பிரியர்கள் எந்தெந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் என தேர்ச்சி சான்றிதழும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த முறை மதுரை மதுப்பிரியர்கள் முதலிடம்.
சென்னையிலிருந்து பெரும்பாலான மக்கள் ஊருக்குப் போய்விட்டதாலோ என்னவோ சென்னை பந்தயத்தில் இரண்டாமிடம் பிடித்துள்ளது.

ஆகவே அடுத்த முறை அதாவது பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகளைப் போல பயணத்தின் போது குடியுங்கள் குதூகலமாகக் கொண்டாடுங்கள் என்ற ரீதியில் ஏதாவது திட்டங்கள் வந்தால் சென்னை முதலிடம் வர வாய்ப்புகள் அதிகம்.

மதுக்கடைகளை மூடுவோம், படிப்படியாக ஒழிப்போம், ஏழைத்தாயின் கண்ணீரைத் துடைப்போம் என்று பேசி ஆட்சியைப் பிடிக்கும் எந்த கட்சியும் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தப் போவதில்லை.
மாறாக வருடா வருடம் இலக்குத் தொகையை நூறிலிருந்து நூற்றைம்பது கோடி அதிகம் வைத்து அதிலிருந்து வருமானத்தைப் பெருக்க தான் இங்கே திட்டங்கள் வகுக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கிறது, பணவீக்கம் குறைகிறது ,தனிநபர் வருமானம் அதிகரிக்கிறது ஏழ்மை ஒழிகிறது என்றால் பெருமைப்படலாம்.
அரசாங்கத்தைப் பாராட்டலாம்.

போன தீபாவளியை ஒப்பிடும்போது இந்த தீபாவளிக்கு 350 கோடி லாபம் மதுவில் அதிகரித்திருக்கிறது என்பது நாம் எத்தகைய கேவலமான நிலையில் இருக்கிறோம் என்பதைத் தான் உணர்த்துகிறது.

போன வருடத்திலிருந்து இந்த வருடம் இத்தகைய வளர்ச்சி ஏற்படக் காரணம் புதிதாக எத்தனை குடிகாரர்கள் மன்னிக்கவும், மதுப்பிரியர்கள் உருவானார்களோ, ஏற்கனவே மதுவின் மீது பிரியமாக இருந்தவர்கள் இந்த முறை அளவு கடந்த பிரியத்தை அள்ளித் தெளித்தார்களோ?

இது சமுதாயத்திற்கு நல்லதல்ல..கொண்டாடப்பட வேண்டிய விஷயமும் அல்ல.

மது விற்பனை குறைந்தது.
மது வெறுப்பாளர்கள் அதிகரித்தார்கள் என்பதே நல்ல சமுதாய வளர்ச்சிக்கு அடையாளம்.

சரி வாங்க கட்டிங் போட்டுட்டு இதப்பத்தி பேசலாம்.😁

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.