சாமி படத்தில் ஒரு நல்ல நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு காட்சி.
மறைந்த நடிகர் விவேக், குழந்தைகளை வைத்துக் கொண்டு பாடம் நடத்துவார்.
” சாதிகள் இல்லையடி பாப்பா” என்று அவர் சொல்வார்.
உடனே குழந்தைகள் பக்கத்தில் இருந்து,
நாயர் கடையில டீ வாங்கினேன், கோனார் தமிழ் உரையில படிக்கிறேன், செட்டியார் வூட்ல கடன் வாங்கினேன் என்று அந்தக் குழந்தைகள் சொன்ன உடனே, அவர் என்னையே சிந்திக்க வச்சுட்டேளே என்பார்.
நேற்றைய செய்தித்தாளில் ஒரு செய்தியைக் கண்டதும் எனக்கும் அப்படி ஓர் புன்னகை தான் வந்தது.
செய்தி இது தான்.
ஏழுமலையானுக்கு அனைவரும் சமம்.
கீழே தேரின் உச்சியில் சவரத் தொழிலாளிகளின் தங்கக் குடையுடன் உலா.
மனிதனுக்கு தான் சாதி மத பாகுபாடுகள் எல்லாம், ஆனால் ஏழுமலையானுக்கு அது இல்லை.
தேரின் உச்சியில் சவரத்தொழிலாளர்கள் அளித்த தங்கக் குடையின் கீழே தான் உற்சவர்கள் ஊர்வலம்.
நடை திறந்த உடன் முதல் தரிசனம் யாதவர்களுக்கு தான்.
இரவு நடை சாத்துமுன் நாவிதரின் நாதஸ்வர இசை.
ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் நடைபெறும் அஷ்டதள பாத பத்மாராதனை குண்டூரை சேரந்த ஷேக் மஸ்தான் எனும் பக்தர் அளித்த 108 தங்க புஷ்பங்களைக் கொண்டு தான் நடைபெறுகிறது.
குயவர்கள் செய்யும் மண்பானையில் தான் தீபாவளி ஆஸ்தானம் நடைபெறுகிறது.
பழங்குடி இனத்தவர்களின் குலதெய்வமாகக் கருதப்படும் ஹத்திராம் மடம் சார்பில் தான் இன்றளவிலும் வெண்ணெய் மற்றும் இதர பிரசாதங்கள் நெய்வேத்ய்ங்களாகப் படைக்கப்படுகிறது.
இப்படியாக பல சாதி மத ஆட்களால் தான் திருப்பதி ஏழுமலையானுக்கு பூஜைகள் செய்யப்ஙடுவதாக செய்தி.
அந்த நகைச்சுவை காட்சிக்கும் இந்த செய்திக்கும் என்ன வித்தியாசம்?
குயவர் மண்பானை செய்யாமல் குமாஸ்தாவா செய்வார்?
இந்தத் தங்குடைக்கான பணம் சவரத் தொழிலாளர்களால் தரப்படும்.உற்சவர் அதன்கீழே பயணிப்பார்.
ஆனால் சவரத்தொழிலாளிகள் உற்சவரைத் தொட முடியாதல்லவா?
யாதவர் குலத்தினருக்கு முதல் தரிசனம் ஏனென்றால் அவர்களிடமிருந்து கடவுளின் பெயரைச் சொல்லி பால், தயிரை கபளீகரம் செய்யத்தானே?
108 தங்க புஷ்பங்களை ஷேக் மஸ்தானிடம் வாங்கியது சரி, இன்று ஒரு இஸ்லாமியரை கோவிலுக்குள் அனுமதிப்பார்களா?
பழங்குடி மக்கள் செய்த நெய்வேத்யமல்ல.
அவர்கள் தெய்மாக மதிக்கும் மடத்திலிருந்து தான் வருகிறது.
இதெல்லாம் சரி , சிறிது காலத்திற்கு முன்பு திருப்பதி லட்டு பிரசாதம் செய்ய சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை.
தென்கலை/ வடகலை பிராமணர்கள் தான் தேவை என்று செய்தி .
இது என்ன கதையோ தெரியவில்லை
மற்ற சாதிக்காரர்கள் பிசைந்தால் லட்டு ருசிக்காதோ?
சாதி் பாகுபாடுகள் இல்லாமல் அனைவரும் கல்வி கற்று கார்ப்பரேட்டுகளின் அடிமைகளாக வேலை செய்து கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் யாதவருக்கு முதல் தரிசனம் குயவர் மண்பாண்டத்தில் தீபாவளி பிரசாதம் என்று சாதிகளைக் குறிப்பிடவதே பாகுபாடு என்பதை உணரும் காலம் வரும் வரை சாதிப்பிரிவினைகள் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?
எப்போது ஓயும் இந்த சாதிக்குறியீடுகள்?