ரேஷனில் பொருள் வாங்க மக்கள் வரத்தேவையில்லை.
நடமாடும் ரேஷன் வருகிறது.
மருந்து வாங்க மருத்துவமனைக்கு மக்கள் வரத்தேவையில்லை.
மருந்துகள் வீடு தேடி வருகிறது.
பல அரசு சார்ந்த துறை ரீதியான வேலைகளை இணையதளத்திலேயே முடித்துக் கொள்ளலாம்.
இப்படி பல விஷயங்களுக்காக மக்களை அலைய விடாமல் எல்லாம் இல்லம் தேடி பல விஷயங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதைத்தாண்டி மக்களும் உணவு மளிகை என்று பல விஷயத்தையும் வீட்டில் இருந்தபடியே இணையத்தில் பதிவிட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள்.
சினிமாவும் கூட முன்புபோல திரையரங்குளுக்குச் சென்று தான் பார்க்க வேண்டும் என்ற அவசியம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
ஓடிடி தளங்களில் படம் வெளியாகி ஒரு மாதத்திற்குள்ளாகவே வெளியிடப்படுவதால் பெரும்பாலான மக்கள் சினிமாவையும் வீட்டில் இருந்தபடியே தான் ரசிக்கின்றனர்.
இப்படி எல்லாம் வீட்டிற்குள்ளேயே கிடைத்து விடுகிறது.
இத்தகைய கால கட்டத்தில் ஆறுதலுக்காக அவர்களை பேருந்தில் ஏற்றி ஏழெட்டு மணி நேரம் பயணம் செய்ய வைத்து தான் இருக்கும் இடத்திற்கு அழைத்து வரவழைப்பது நாகரீகமான செயலாகவோ மரியாதையான செயலாகவோ தெரியவில்லை.
அனிதாவின் மரணத்திற்கு எப்படி நேரில் சென்று திரு.விஜய் அவர்கள் ஆறுதல் கூறினாரோ அதுதான் முறை.
அதுதான் அந்த இறந்த ஆத்மாவிற்கான மரியாதை.
20 லட்சம் பணம் கொடுத்துவிட்டதால் துக்கம் இல்லாமல் போய்விடாது.
இறந்து போன உறவு இல்லை என்றாகி விடாது.
அவர்களை இவர் நேரில் சென்று தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறுவது தான் முறையே தவிர இது ஒரு புத்திசாலித்தனமான செயல் அல்ல.
இப்போது அவருக்கு அனுமதி கிடைக்காவிட்டால் என்ன?
இப்போதே சந்தித்தாக வேண்டும் என்ற கெடு யார் வைத்தது?
பொறுமையாக அனுமதி கிடைத்த பிறகு சந்தித்திருக்கலாமே?
தவிர இவர்களைக் கூட்டமாக ஒரு பேருந்தில் ஏற்றி ஒரு விடுதியில் தங்க வைக்கிறார்களே இது என்ன கேளிக்கை நிகழ்வா அல்லது வெற்றிக்கான பரிசளிப்பா?
பத்தாவது பனிரெண்டாவது வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை அவர்களது பெற்றோரைக் கூட்டமாக அழைப்பது நியாயம்.
அவர்கள் வரும்போதும் அமர்ந்திருக்கும் போதும் ஒருவரோடு ஒருவர் மகிழ்ச்சியாக உறவாடிக்கொண்டு பேசிக்கொள்வார்கள்
உங்க பையன் எந்த பள்ளிக்கூடம் எவ்வளவு மதிப்பெண் என்ற ரீதியில்.
ஆனால் இந்தக் கூட்டம் பேருந்தில் ஒன்றாகப் பயணிக்கும் போது சக குடும்பத்தைக் கண்கொண்டு காண முடியுமா?
அவர்களைப் பார்க்கும் போது இவர்களுக்கு தனது மகன்/மகள் இறந்து போன துக்கம் தானே நினைவில் வந்து முள்ளாகக் குத்தும்?
அவர்களுக்குள் பேசிக் கொள்ள இயலுமா?
உங்க வீட்ல யாரு இறந்தாங்க?
எப்படி இறந்தாங்க?
உங்களுக்கு வங்கிக் கணக்குல 20 லட்சம் பணம் வந்துருச்சா?
இப்படியா பேசி உறவாடிக் கொள்வார்கள்?
சரி விஜய் தான் இவர்களை சந்தித்த முதல் நொடி என்ன கேப்பார்?
என்னங்க பயணம் எல்லாம் வசதியா இருந்துச்சா?
இல்ல அலுப்பா இருந்தா அப்புறமா வந்து
ஆறுதல் சொல்லவா?
என்னங்க ஒரு அடிப்படை அறிவு கூடவா இல்லாமல் இத்தகைய பெரிய கட்சியை நடத்தி இவர் முதல்வராக முடியும்?
ஹெலிகாப்டரில் வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட்ட முதல்வர்களையே விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நமது சமுதாயத்தில் இப்படி இறந்தவர்களின் குடும்பத்தைப் பேருந்தில் ஏற்றிச் சென்று விடுதியில் தங்க வைத்து ஆறுதல் சொல்வதெல்லாம் என்ன ரகத்தில் சேர்ப்பது?
கூவத்தூர் கூற்றுக்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம்?
பணம் கொடுத்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதைப் போலவே இங்கேயும் அப்பாவி ஜனத்தைப் பணத்தால் அடித்து விடுதிக்கு அழைத்து விலைக்கு வாங்குவதைப்போன்ற நிகழ்வு தான் நடைபெறுகிறது.
இன்னும் ஆரம்பிக்கவே இல்லாத அரசியல் கட்சிக்கு இதெல்லாம் பேரிழுக்கு!




