சமீப காலமாக இளைஞர்களின் போக்கு மிக மோசமாக மாறி இருப்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர முடிகிறது.
சமீபத்திய சில செய்திகளின் மூலமாக இதை அறிந்திர முடிகிறது.
எங்கள் ஊர் மிகச் சாதாரணமான சிறிய ஊர்தான்.மக்கள் மிக அதிகம் என்பதெல்லாம் இல்லை.
தோராயமாக இவர் இன்னார் என்று அறிந்து கொள்ளும் ரகம் தான்.
அப்படியான ஊரில் , காவல் நிலையத்தின் அருகிலேயே பட்டப்பகலில் இருசக்கர வாகனம் ஒன்றில் பயணித்திருந்த மூன்று இளைஞர்கள் , நெடுஞ்சாலையில் வந்த காரை மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தைப் பிடுங்கிக் கொண்டு காரையும் கடத்தியுள்ளனர்.
அந்த வாகன ஓட்டுனர் உஷாராகி காவல் நிலையத்தில் புகார் அளித்த உடனே காவலர்கள் அந்த வாகனத்தைத் துரத்திப் பிடித்து, மூவரையும் கைது செய்துள்ளனர்.
மூவரும் இருபது வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.
குடிபோதையில் இதை செய்திருக்கிறார்கள்.
இதேபோல, சமீபத்தில் சென்னை மேடவாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் அதி விரைவாகச் சென்ற இரண்டு இளைஞர்களை காவலர் ஒருவர் பிடித்து சோதித்த போது அவர்கள் கத்தி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதைவிட மோசமான ஜீரணிக்க இயலாத செயல், ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை ஒருதலைக்காதல் செய்த ஒரு இளைஞர் கத்தியால் குத்திக் கொன்ற வெறிச்செயல்.
இளைஞர்களிடையே இந்த கத்தி கலாச்சாரம் மிக மோசமானதாக உருவாகியிருக்கிறது.
சினிமா வில்லன்களைப் போல, கத்தி கையாளுதலை மிக எளிதான ஒன்றாக நினைத்திருக்கிறது இந்த இளைய சமுதாயம்.
மேலும் அளவுக்கு அதிகமான போதைப்பழக்கம், அந்த போதைக்கான பணத்தேடல் அவர்களைத் தடம்மாறி பயணிக்கத் தூண்டுகிறது.
பெற்றோரெ , ஆசிரியர்களைக் கண்டு பயந்து அவர்களை மதித்து அவர்களின் சொல்கேட்டு சமுதாயத்திற்கு பயந்து வாழ்ந்த ஒரு சமூகம் இன்றில்லை.
தான் என்ற அகம்பாதமும், தான் நினைத்ததை முடிக்க வேண்டும் என்ற திமிரும், தன்னைத் தடுக்க யாருமில்லை என்ற தைரியமும் இந்த இளைய சமுதாயத்தை சீரழித்து வைத்திருக்கிறது.
இப்படியே போனால் வரும் காலங்களில் வீட்டிற்கு ஒரு பொறியாளர் போல, வீட்டிற்கு ஒரு பொறுக்கி, ரௌடி உருவாகும் சூழல் வரும்.
பெற்றோர் கண்டிப்புக்கும், ஆசரியரின் பிரம்படிக்கும் பயந்து வளர்ந்த சமூகம் இப்படிச் சீரழியவில்லை.
தேவையில்லாத செல்லமும், பரிவும் அளவுகடந்த அன்பும் கூட ஆபத்து தான்
வீட்டிற்கு ஒரு பிள்ளையோ ரெண்டு பிள்ளையோ, பிள்ளைகளைக் கண்டிப்புடன் வளர்க்க வேண்டியது பெற்றோர் கடமை.
தடம் மாறும் இளைஞர்களை சரியாக வழிநடத்துவோம்.




