படித்துப் பகிர்வது!
புரூஸ்லி இறந்தது எப்படி?
ஹைப்போநாட்ரீமியா என்றால் என்ன?
அதிகமாக தண்ணீர் பருகுவதால் ஆபத்து உண்டா?
தற்காலத்தில் இளையோரிடத்தில் யார் விரைவாக
அதிக குளிர்பானம் / பீர் உள்ளிட்ட திரவங்களைப் பருகுகிறார்கள் என்று போட்டிகள் நடப்பதைக் காண முடிகிறது.
இவை உயிருக்கு ஆபத்தானவை.
எப்படி வாருங்கள் புரூஸ்லீயின் மரணம் வழி பாடம் கற்போம்
டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
ஹாங்காங் நகரில் 20.7.1973 அன்று
ஹாலிவுட் அதிரடி மன்னன் புரூஸ்லீ சந்தேகத்துக்கிடமான முறையில் மரணமடைந்தார்
அவருக்கு விஷம் வைக்கப்பட்டதாகவும்
பயிற்சி செய்யும் போது தலை சுவரில் மோதி அதனால் ஏற்பட்ட மூளை ரத்தக்கசிவால் மரணம் ஏற்பட்டது
மூவர் கொண்ட குழு அவரை கொலை செய்து விட்டதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில்
தற்போது ஸ்பானிஷ் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் அவரது மரணம் குறித்து ஆராய்ச்சி செய்து
அவர் அதிகமாக தண்ணீர் பருகியதால் ஹைப்போநாட்ரீமியா ஏற்பட்டு அதன் விளைவால் மரணமடைந்திருக்கலாம் என்கின்றனர்
புரூஸ்லீ அவர்கள் இறந்த அன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்
புரூஸ்லீ இறந்த அன்று காலை
மாரிஜூவானா எனும் மருந்தை உடல் வலிக்காக உட்கொண்டு விட்டு
பெட்டி டிங் பேய் எனும் அவரது நண்பரின் வீட்டிற்குச் சென்று
வரவிருக்கும் படத்தின் சில காட்சிகளை நடித்துப் பயிற்சி செய்கிறார்.
இரவு 7.30 மணிக்கு தலை சுற்றல் , குமட்டல் , தலைவலி ஏற்படவே
தலைவலி மாத்திரையான “EQUAGESIC” மாத்திரையை டிங் பேய் அவருக்கு வாங்கிக் கொடுக்கிறார்
அதை உட்கொண்டு சற்று நேரம் ஓய்வெடுத்த புரூஸ்லீயை 9.30 மணிக்கு சென்று பார்க்கிறார்
ஆள் மயங்கிக்கிடக்கிறார்
மருத்துவர் வரவழைக்கப்படுகிறார்
அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லப்பட்டு
இறுதி கட்ட முயற்சிகள் செய்யப்படுகின்றன
எனினும் சிகிச்சை பலனின்றி ப்ரூஸ்லி மரணமடைகிறார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில்
விஷமோ / வேறு வெளி/உள் காயங்களோ இல்லை
ஆனால் அவரது மூளை நார்மலாக இருக்க வேண்டிய எடையை விட சற்றுக் கூடுதலாக இருந்தது. அவரது மூளை 1575கிராம் இருந்தது.
சாதாரணமாக நமது மூளை 1200-1300 கிராம் எடை கொண்டது.
உடனே அவரது மரணத்திற்கான காரணம் ஈக்விஜெசிக் மாத்திரையை உட்கொண்டதால் ஏற்பட்ட அலர்ஜியினால் மூளையில் நீர் சுரந்து(CEREBRAL EDEMA) இறந்து விட்டார் என்று எழுதப்பட்டு விட்டது.
ஆனால் அதற்கு முன்பாக மே மாதத்திலும் இதே போன்று
தலைவலி, வாந்தி, மயக்கம், கிறுகிறுப்பு போன்றவற்றால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
புரூஸ்லீ இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்து
திரவ டயட் முறையை கடைபிடித்து வந்ததாகத் தெரிகிறது
உணவாக தண்ணீர் / கேரட் மற்றும் ஆப்பிள் ஜூஸ் மட்டும் உட்கொள்வதை பழக்கமாக வைத்திருந்திருக்கிறார்
அவரது உடல் வலி காரணமாக அதை சரி செய்யும் முகமாக கோகெய்ன் உட்கொள்ளும் பழக்கமும் இருந்தமையால் அடிக்கடி தாகமெடுத்துக் கொண்டே இருக்கும்
எனவே தண்ணீரை அளவுக்கதிகமாக குடித்திருக்கிறார்
அத்துடன் வலி நிவாரணி மாத்திரையை உட்கொள்ளவும் சிறுநீரகம் சிறிது ஸ்தம்பித்து தண்ணீரை வெளியேற்ற இயலாமல் போயிருக்கும்
இதன் விளைவாக உடலில் அதிக நீர் சேர்ந்து இருக்கிறது
நமது உடலில் தண்ணீரின் அளவு கூடும் போது ரத்தத்தில் உள்ள சோடியம் உப்பின் அளவு குறையும்.
சோடியம் அளவு நார்மலாக 135-140 mEq/L இருக்க வேண்டும்
ஆனால்
அளவுக்கு அதிகமாக தண்ணீரை குறைவான கால இடைவெளியில் பருகும் போது சிறுநீரகங்கள் ஸ்தம்பிக்கின்றன
தண்ணீரை வெளியேற்ற இயலாமல் வேலைநிறுத்தம் செய்கின்றன
இப்போது தண்ணீர் கூடுவதால் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவு குறையும்
எனவே செல்களுக்கு வெளியே இருக்கும் நீரானது செல்களுக்குள் செல்லும்.
இதனால் செல்கள் வீக்கமடையும்.
மூளையில் இருக்கும் நியூரான்கள் வீக்கமடையும்.
மூளை வீங்கும். இதனால் வலிப்பு ஏற்படும் . தலை சுற்றும். கோமா ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும்.
இது போன்ற நிலையை
“ACUTE HYPONATREMIA” என்று அழைக்கிறோம்
சாதாரணமாக நமது சிறுநீரகங்கள் ஒரு மணிநேரத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீரை சுத்தம் செய்து வெளியேற்றும் சக்தி பெற்றவை
ஒரு நாளைக்கு 20-25 லிட்டர் வரை வெளியேற்றும் சக்தி பெற்றவை.
ஆயினும் ஒரே நேரத்தில் நான்கு ஐந்து ஆறு லிட்டர் என தண்ணீரை லபக் லபக் என்று பருகினால் சிறுநீரகங்கள் ஸ்தம்பிக்கும்
ரத்தத்தில் சோடியம் அளவுகள் குறையும்.
இதனால் தலை வலி , தலை சுற்றல் , வாந்தி , மயக்கம் போன்றவை ஏற்படும் என்ற விழிப்புணர்வு தேவை
அதற்காகவே இந்தப் பதிவு
இதே போன்ற ஒரு நிகழ்வை
ஒரு கேஸ் ரிப்போர்ட்டாக பதிந்துள்ளார்கள்
24 வயதுடைய நான்கு வாரமே ஆன குழந்தையின் தாய் ஒருத்தி
20 மணிநேரம் தண்ணீர் உணவு அருந்தாத விரதத்தில்(DRY FASTING) ஈடுபடுகிறாள்.
விரத நேரத்திலும் தான் ஈன்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறாள்.
விரதத்தை முடிக்கும் நேரத்தில்
பால் சுரப்பு குறைவாக இருக்கவே
4 லிட்டர் தண்ணீரை அருந்துகிறாள்.
சற்று நேரத்தில் தலைவலி ஏற்படுகிறது.
அதற்கு தலைவலி மாத்திரை ஒன்றை உட்கொள்கிறாள்
உடனே தலைசுற்றல் ஏற்படுகிறது / தலைவலி இன்னும் அதிகமாகிறது
அதிர்ஷ்டவசமாக
மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு ஹைப்போநேட்ரீமியா கண்டறியப்பட்டு முறையாக மருத்துவம் பார்த்து மீள்கிறாள்
ஒருவேளை புரூஸ்லீ போன்று கண்டுகொள்ளாமல் தூங்கி இருந்தால் இறந்திருக்கக் கூடும்.
இதில் நாம் அறிவது யாதெனில்
அதீத உடல் உழைப்பு / மாரத்தான் ரன்னிங்/ ஜிம் வொர்க் அவுட்டுகளுக்குப் பின்
வெறும் நீரை மட்டும் பல லிட்டர்கள் குடிப்பது ஆபத்தானது.
கட்டாயம் சோடியம் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்த எலக்ட்ரோலைட் திரவத்தை உட்கொள்ள வேண்டும்
அப்படி அதிக திரவம் பருக வேண்டிய சூழ்நிலை வந்தால்
நீரில் ஓ ஆர் எஸ் கலந்து பருக வேண்டும். எக்காரணம் கொண்டும் வெறும் நீரை பல லிட்டர்கள் ஒரே நேரத்தில் பருகுதல் தவறு.
தண்ணீரை அளவுடன் பருக வேண்டும்.
ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகினாலும் முறையான இடைவெளிவிட்டு பருக வேண்டும்.
நான் பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்
காலை எழுந்ததும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பேன்
வேலை முடித்து வந்ததும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பேன் என்று கூறுவார்கள்
இது ஆபத்து நண்பர்களே
சிலர் லேசான வயிற்றுப் போக்குக்கு கூட எலக்ட்ரோலைட் நிறைந்த ஓ.ஆர்.எஸ் திரவத்தை நீருடன் கலக்கிப் பருகாமல் வெறும் நீரை பல லிட்டர் பருகுவார்கள்.
இதுவும் ஆபத்தில் கொண்டு உய்க்கும் செயலாகும்.
சிறுநீரக கோளாறு
கல்லீரல் கோளாறு
இதய நோய் இருப்பவர்கள்
தண்ணீரை அளவுடன் மருத்துவர் பரிந்துரையில் பருக வேண்டும்.
இவர்கள் சற்று அளவு கூடி தண்ணீரைப் பருகினாலும் ஆபத்து நேரிடும் வாய்ப்பு உண்டு.
ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்தலாம்?
அவ்வாறு சரியாக வரையறுக்க முடியாது.
சிறுநீர் கழித்தல் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறையாவது நடக்க வேண்டும்.
சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாக/ சிவப்பு நிறமாக ஆகக்கூடாது.அது சரியான நீர்ச்சத்து இல்லை என்பதைக் காட்டுகிறது.
வெளிர்மஞ்சள்(STRAW COLOURED URINE) நிறத்தில் சிறுநீர் இருப்பதே சரியான நிறமாகும்.
வியர்வை அதிகமாக வெளியேறும் வேலை செய்பவர்கள் அதற்கேற்றவாறு நீர் அருந்த வேண்டும்
பத்து கிலோ வரை எடையுள்ள குழந்தைகளுக்கு 100ml/kg/day
எனவே பத்து கிலோ எடை இருந்தால் ஒரு லிட்டர் ஒரு நாளைக்கு வரும்
பத்து கிலோ முதல் இருபது கிலோ வரை எடை இருந்தால்
1000 ml + 50ml/kg/day ( அடுத்த பத்து கிலோவை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும்)
எனவே இருபது கிலோ குழந்தை என்றால்
1000 + (50×10) = 1500 மில்லி / நாளைக்கு
இருபது கிலோவுக்கு மேல் இருந்தால்
முதல் இருபது கிலோவுக்கு 1500 ml + மீதமிருக்கும் கிலோவுக்கு 20ml/kg/day
குழந்தை 25 கிலோ இருந்தால்
1500 + (5 × 20) = 1750 மில்லி/ ஒரு நாளைக்கு தேவைப்படும்
30 கிலோ அதற்கு மேல் இருப்பவர்களுக்கு தோராயமாக அவர்களது உடல் எடையை × 0.033 யால் பெருக்கினால் அவர்கள் கட்டாயமாக பருக வேண்டிய நீரின் அளவு தெரியும்.
மேற்கூறியவை எல்லாம் தோராயமாக கட்டாயம் தேவைப்படும் அளவுகள் .
இதற்கு மிகுதியாகவும் தேவைப்படும் நேரங்களில் கால சூழ்நிலையைப் பொருத்துப் பருகலாம். தவறில்லை.
சிறுநீரகக் கோளாறு
கல்லீரல் கோளாறு
இதய கோளாறு இருப்பவர்கள் கட்டாயம் எவ்வளவு நீர் பருக வேண்டும் என்பதை மருத்துவர் முடிவு செய்தவாறு பின்பற்ற வேண்டும்.
எக்காரணம் கொண்டும் ஒரே நேரத்தில் பல லிட்டர் நீரை போட்டிக்காகவோ ஜாலிக்காகவோ குடித்து வீணாக உயிருடன் விளையாடாதீர்கள்.
அளவுக்கு மிஞ்சினால் நீரும் நஞ்சே
ப்ரூஸ்லி இறக்கும் போது அவருக்கு வயது – 32 மட்டுமே
அனைவரும் இந்த விசயத்தில் அலர்ட்டாக இருப்போம்
நன்றி
ஆதாரங்கள்
1.https://academic.oup.com/ckj/article/15/6/1196/6549578
2.https://www.sciencedirect.com/science/article/pii/S2376060521000286
3.https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1770067/
4.https://www.ncbi.nlm.nih.gov/books/NBK537231/
5.https://www.tribuneindia.com/news/world/bruce-lee-may-have-died-from-drinking-too-much-water-claims-research-453547
டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை





