அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே, நண்பனே!
அன்று போல் இந்த நாள் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே ?என்று சிவாஜி கணேசனில் துவங்கி இன்று எஸ்.ஜே.சூர்யா வரை, வாழ்வில் பெரும்பாலானோர் வாழ்வின் கடந்த காலத்தை தான் இனிமை என்று சொல்வது எந்த விதத்திலும் மறுக்க முடியாத 100 சதவீத உண்மை.
இந்த உலகில் உள்ள மனிதர்களிடம் திடீரென கடவுள் வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் பெரும்பாலானோரின் பதில் , மீண்டும் குழந்தைப் பருவத்தை அடைய வேண்டும்
என்பதாகத் தான் இருக்கும்.
ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றைய சூழலில் எத்தனையோ காரணிகள் , காரணங்கள் மகிழ்ச்சியை வழங்க இருந்தாலும், மனம் ஏனோ இறுதியில் வெறுயமையைத் தாண்டி தான் பயணிக்கிறது.
இந்த நாளில் நம்மோடு தொழில்நுடபமும், இணையமும், சமூக வலைதளங்களும் , தகவல்களும் கொட்டிக் கிடக்கின்றன.
உலகமே நம் கையில் தான்.
எதை வேண்டுமானாலும் நொடியில் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் அன்று அப்படி இல்லை. ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள சில மெடக்கெடல்கள் இருந்தன.
உதாரணமாக குறுக்கெழுத்துப் புதிர் போட்டி.
சில வார்த்தைகளை கொடுக்கப்பட்ட சில தகவல்களை வைத்துக் கண்டறிந்து அதை எழுதி நிரப்புதல். இது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே வார இதழில் வரும் ஒன்று.
அதில் ஒரு சில வாரம் ஒரு சில வார்த்தைகளைக் கண்டறிய இயலாமல் மறுநாள் பள்ளிக்கூடம் சென்று தமிழாசிரியரிடம் கேட்டெல்லாம் விடை அறிந்து கொண்டிருக்கிறோம்.
அதைப்போல சூத்திரங்கள் எல்லாம் புத்தகத்திலும், ஆங்கில வார்த்தைகளை டிக்சனிரியிலும் தேடும் வழக்கம் வழக்கொழிந்து விட்டது.
எல்லாம் எளிதில் கிடைப்பது ஒருபுறம் மகிழ்ச்சி தான் என்றாலும், கிடைக்கும் பொருள் எளிதாகக் கிடைத்து விடுவதால் அந்தப் பொருளுக்கும் மதிப்பில்லை, மனிதர்களுக்கும் மதிப்பில்லை.
இன்னும் கொஞ்ச நாளில் இயந்திரங்களே இதய அறுவை சிகிச்சை வரை வெற்றிகரமாக செய்து முடிக்கும் காலம் வரும்
அப்படி வரும் காலத்தில் , பலபேர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு உயர்வாக மதிக்கப்பட்ட மருத்துவ படிப்பு மதிப்பிழந்து நிற்கும்.
நாம் ஒவ்வொன்றாகப் பெற பெற ஒவ்வொன்றாக இழந்து வருகிறோம்.
குறிப்பாக மனிதமதிப்பை அறவே இழந்து வருவது மிக யதார்த்தமாகி விட்டது.
அந்த நாளில் கதை சொன்ன தாத்தா பாட்டிகள் இன்று இல்லை. தாலாட்டு இல்லை. தாய்மார்களுக்குத் தாலாட்டு என்பது என்னவென்பதே மறந்து விட்டது.
மொபைல் போன் அந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது.
வாழ்வை வழிநடத்த வேண்டிய தந்தை வில்லனாகி நிற்கிறார்.
செடி ஏன் பச்சையா இருக்கு ? என்று அப்பாவியாகக் கேட்கும் குழந்தைத் தனமும் இல்லை, அதற்கு பதில்சொல்ல வேண்டிய அவசியம் தகப்பன்மார்களுக்கும் இல்லை…
எல்லாமே செல்போன் செல்போன்..இது மனித மனங்களுக்கு இடையில் பெரிய இடைவெளியை உருவாக்கி உறவுகளில் விரிசலை உருவாக்கி வைத்திருக்கிறது.
வாழ்த்து மடல் அனுப்பி, கிடைத்ததா என்று கேட்டறிந்து மகிழும் மகிழ்ச்சி எல்லாம் இப்போது இல்லை.
பார்வேர்டு மெசேஜ் அனுப்பி விட்டு ப்ளூடிக் வந்த பிறகும் கூட பதில் வரவில்லை என்று கோபப்படும் சூழல் தான் இன்று இருக்கிறது.
எல்லாம் அன்புமயமாக இருந்த காலம் மாறி எல்லாம் தொழில்நுட்பமயமாகி , மாய வலையில் ஆனந்தக் கூத்தாடி வாழ்கிறோம்.
இது உண்மையான மகிழ்ச்சியல்ல…
உண்மையிலேயே அந்த நாட்கள் போல இந்த நாட்கள் இல்லை தான்.
ஏங்கித் தவித்தாலும் திரும்ப வாரா நாட்கள் அவை.



