பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மிகப்பெரிய மனக்கசப்பு நமக்கும் நமது பங்காளி நாடான பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை நிகழ்த்தி பாகிஸ்தானில் இருந்த பல்வேறு தீவிரவாத முகாம்களை அழித்தது நமது இந்திய அரசு.
அதோடு நில்லாமல் நதிநீரில் பங்கு தர முடியாது என்ற ரீதியில் பாகிஸ்தானில் வசிக்கும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கும் விதமாகப் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பாகிஸ்தானிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காகக் கூட இந்தியாவிற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இந்திய அரசு பாகிஸ்தானிய மக்களின் நுழைவு இசைவை ரத்து செய்தது.
தீவிரவாதிகளின் செயலுக்குப் பாவம் பொதுமக்கள் என்ன செய்ய இயலும்.
நாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் குழைத்து நட்புறவை உடைக்கும் எண்ணம் கொண்ட தீவிரவாதிகளின் எண்ணம் நிறைவேறும் விதமாகவே நாமும் நடந்து கொண்டோம்.
இராணுவ வீரர்கள் மட்டுமல்ல, நமது கிரிக்கெட் வீரர்கள் கூட பாகிஸ்தானை விரோத கண்ணோட்டத்தில் தான் அணுகினர்.
பாகிஸ்தானிய வீரர்களோடு கைகுலுக்கத் தவறியதோடு, பாகிஸ்தானிய நிர்வாகஸ்தரிடமிருந்து கோப்பையை வாங்க மாட்டோம் என்று தவிர்த்து கோப்பை இல்லாமலே வெற்றிக் கொண்டாட்டத்தை நிகழ்த்தினார்கள்.
பலரும் பாகிஸ்தானின் மீது மிகுந்த வன்மத்துடனே இருந்தனர்.
இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இந்த வாரம் ஒரு நல்ல சம்பவம் நிகழ்ந்தேறியிருக்கிறது
நமது நாட்டைச் சார்ந்த 2100 சீக்கிய மதத்தினர் , பாகிஸ்தானில் இருக்கும் சீக்கிய மதத்தலைவரின் பிறப்பிடத்திற்கும், சில முக்கியமான குருத்துவாரக்களுக்கும் பத்து நாள் ஆன்மீக பயணமாகச் சென்றிருக்கின்றனர்.
இந்த இடங்களெல்லாம் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் அமைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து விண்ணப்பித்திருந்த 2150 யாத்ரீகர்களுக்கும் நுழைவு இசைவை வழங்கிய பாகிஸ்தான் அரசு எல்லையில் அவர்களுக்கு நல்ல வரவேற்பையும், பயணத்திப் போது நல்ல பாதுகாப்பையும் வழங்கியிருக்கிறது.
இது இரு நாடுகளுக்கு இடையிலான ஒரு நல்லிணக்கத்திற்கான நல்ல துவக்கம்.
ஆனால் இந்தப் பயணத்தில் இந்து மக்கள் புறக்கணிக்கப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டார்கள் என்ற ஒரு கசப்பான செய்தியும் உண்டு.
சரி இதைப் பெரிதுபடுத்தாமல், 2100 பேரை அனுமதித்து அவர்களை நல்ல விதமாக வரவேற்று பாதுகாப்புடன் பயண ஏற்பாடுகளைச் செய்த அவர்களை மனமாரப் பாராட்டி இப்படியே இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை வளர்த்தால் நல்லது.
ஏற்கனவே பொருளாதாரச் சீரழிவுகள், இயற்கைச் சீற்றங்கள், உலக வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் மனித இனம் படாத பாடு படும் போது இப்படி மதத்தின் பெயராலும், நாடுகளுக்கு இடையிலும் சண்டை அவசியம் தானா?
பரவட்டும் நல்லிணக்கம்!




