காந்தா- துல்கர் சல்மான், சமுத்திரக்கனி மற்றும் ராணா நடிப்பில் இந்த வாரம் வெளியான பழைய பாணியிலான புதுப்படம்.
சினிமா பின்புலத்தை, அதிலும் 1960 களின் சினிமா உலகத்தைப் பிண்ணனியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட திரைப்படம்.
நமக்கெல்லாம் பரீட்சயமில்லாத மிகச்சிறப்பான வித்தியாசமான கதை என்பது இல்லாவிட்டாலும், இது மாதிரியான படங்கள் அடிக்கடி வருவதில்லை.
எப்போதாவது தான் வருகிறது என்பதால் , மற்ற படங்களிலிருந்து சிறிது வேறுபட்டு நிற்கிறது.
நல்ல சினிமாவை ஆத்மார்த்தமாகத் தர நினைக்கும் கதாசிரியரும், இயக்குநருமான சமுத்திரக்கனிக்கும், அவர் பார்த்து வளர்த்து விட்டு , சினிமா உலகில் பெரிய ஆளாக வளர்ந்து பணம், பெயர் , புகழ் என்பதில் உச்சியை அடைந்த நடிப்பு சக்ரவர்த்தியான துல்கர் சல்மானுக்கும் இடையிலான ஒரு திரைப்படம் இருவருக்கும் இடையிலான சில உரசல்களால் பாதியில் நின்று விடுகிறது.
அந்தப்படம் சில காலத்திற்குப் பிறகு மீண்டும், தொடரப்படுகிறது.
அந்தப் படத்தைத் தொடரும் பட்சத்திலும் இருவருக்குமான உறவு என்பது சரியானதாக இல்லை.
படத்தின் நடிகர் தனக்கு பிடித்த பாணியில் காட்சிகளை நடிப்பதும், இயக்குநர் அவருக்கு பிடித்த வகையில் நடிக்கச் சொல்லி வற்புறுத்துவதும், இவர்களுக்கு இடையில் இணை இயக்குனர் முதல். லைட்மேன் வரை மொத்த ஊழியர்களும் மாட்டிக் கொண்டு அவதிப்படுவதும் , படத்தின் நாயகி இயக்குனரின் சிஷ்யையாக இருக்கும் காரணத்தால் நடிகருக்கு எதிராக இயக்குனரின் வழியில் தனது நடிப்பைத் தொடர்வதும் என காட்சிகள் , ஒரு திரைப்படம் உருவாகும் விதத்தைப்பற்றி மிக மெதுவாக நகர்கிறது.
ஒரு சந்தர்ப்பத்தில் நாயகி நாயகனின் மீது காதல் கொள்ள, இயக்குனருக்கு அவளின் மீதும் மிகப்பெரிய வெறுப்பு ஏற்படுகிறது.
இதன்பிறகு நாயகி ஒரு சூழலில் கொல்லப்பட ,அந்தக் கொலை நிகழ்ந்த இடத்தில் இயக்குனர் இருக்க, கொலைப்பழி அவர்மீது விழுகிறது.
ஆனால் உண்மையான குற்றவாளி யார் என்பதை விசாரிக்க வரும் அதகளமான போலீஸ் அதிகாரி ராணா தனது சிறப்பான பாணியில் அனைவரையும் விசாரித்து உண்மையான கொலைக் குற்றவாளியைக் கண்டறிகிறார்.
இந்தப் பகுதி அதாவது இடைவேளைக்குப் பிறகு வரும் விசாரணைக் காட்சிகள் சிறிது வேகமாகவே நகர்கின்றன. யார் அந்தக் கொலையை செய்திருப்பார் ? ஏன் ? என்ற காட்சிகள் ஓரளவு வேகமாக நகர்ந்தாலும் பொதுவான மசாலா மற்றும் பரபரப்பான காட்சி அமைப்புகள் கொண்ட படங்களை விரும்பும் ஆட்களுக்கான படமல்ல.
சினிமா காட்சிகளின் யதார்த்தம், நடிப்பின் ஆழம், காட்சி அமைப்பகளின் நேர்த்தி ஆகியவற்றை ரசிக்கத் தெரிந்த ஆட்களுக்கு இது நேர்த்தியான படம் தான்.
ஆனால் மற்றவர்களுக்கு இது பொறுமையை சோதிக்கும் படமாகத் தான் இருக்கும்.
நடிகர்களின் நடிப்பு பாராட்டுக்குரியது.
ஒரு நல்ல முயற்சி.
காந்தா சினிமா ரசிகர்களின் மனம் கவரும் படம்.


