அம்பேத்கர் பிறந்த இடம் தான் போர்பந்தர் என்று மனைவி சொன்னாலும் அதுதவறு என்று சொல்லக்கூட தைரியம் இல்லாத ஆண் வர்க்கம்.
ஒருவேளை அது தவறு என்று சொன்னால் அவன் ஆண் திமிர் பிடித்தவன், ஆணாதிக்கவாதி என்ற ரீதியில் கூட பட்டம் கட்டப்படுவான் என்ற பரிதாபமான செய்தியைப் படமாகத் தந்தது தான் இந்த
ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்திருந்தாலும் கூட, நல்ல படம் என்ற பெயரெடுத்து இன்றளவிலும் கூட ஓரளவிற்கு நியாயமான கூட்டத்தோடு திரையரங்குகள் இருப்பது இதன் வெற்றியை பரைசாற்றுகிறது.
பெண்ணியம் என்பது தன்னை யாரும் எதற்கும் கேள்வி கேட்கக் கூடாது, தான் யாருக்கும் கட்டுப்படவே மாட்டேன், எனக்குப் பிடித்த உடை ( சூழலைக் கண்டுகொள்ளாமல் ) அணிவேன், ணெல்போனே கதி என்று கிடந்து வீட்டு வேலைகளைச் செய்ய கணவனின் சொற்ப சம்பளத்தில் வீட்டு வேலையாள் வைப்பேன் , கணவனை மதிக்க மாட்டேன், புகையை உள்ளே இழுக்கத் தெரியாவிட்டாலும் ஒரு கெத்துக்காக புகை பிடிப்பேன், மது அருந்துவேன், இத்தனையும் பெரியாரும், அம்பேத்காரும் எங்களுக்காகப் பெற்றுத் தந்த உரிமை என்று வாழத் துடிக்கும் ஒரு பெண்.
அந்தப் பெண்ணின் அப்பா கடுமையான ஆணாதிக்கவாதி, அதனால் அப்பா வீட்டில் வாழும் போது வாயைத் திறந்து எதிர்த்துப் பேசினாலோ அல்லது தன் இஷ்டத்திற்கு வாழ்ந்தாலோ சோத்துக்கு சிங்கி தான் என்பது தெரிந்த காரணத்தால் அங்கே இருக்கும் வரை அடக்க ஒடுக்கமாக வாழ்ந்து விட்டு, ஒரு ஏமாளி புருஷன் கிடைத்த பிறகு தான் வாழ நினைத்த வாழ்வை வாழும் பெண்.
அந்தப் பெண்ணை மணந்த கணவன்.
ஆரம்பத்தில் அவளை அவள் போக்கில் விட்டுவிட்டு, பிறகு அதுவே அவனுக்குப் பெரிய தலைவலியாக மாறி நிற்கும் போது ஒரு கட்டத்தில் வெடித்து வார்த்தையை விட, அந்தப் பெண்ணுக்கும் இவனுக்கும் பிரச்சினை வெடிக்க, இருவரும் விவாகரத்துக்குப் போய் நிற்கிறார்கள்.
விவாகரத்து வாங்கி புருஷன்கிட்ட ஜீவனாம்சம் வாங்கி ஜாலியா நினைச்ச மாதிரி எவனுக்கும் அடங்காம வாழலாம் என்ற அவளது தோழியான வக்கீலின் பேச்சைக் கேட்டு விவாகரத்து மற்றும் ஜீவனாம்சத்திற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறாள்
அவளது கணவன் அவளோடு வாழநினைத்து ஒரு வக்கீலைப் பிடிக்க அந்தப் பெண் வக்கீலுக்கும் இந்த ஆண் வக்கீலுக்கும் ஒரு பழைய கதை இருக்கிறது.
இருவரும் போராடி இந்த ஜோடி இணைந்ததா, பிரிந்ததா என்பதை மிக அழகாக , ஜனரஞ்சகமாக, ஆங்காங்கே நகைச்ணுவை கலந்து நல்ல படமாகத் தந்திருக்கிறது இந்த அணி.
பல வசனங்கள் அருமை.
குறிப்பாக பெண்ணியம் பற்றி ஒரு பெண் போராளி பேசுவதும், வீட்டு வேலைக்காரம்மா பெண்கள் படும் அவஸ்தைகள் பற்றி பேசுவதும், இந்தக்காலத்தில் இரு தரப்பும் தெரிந்து கொள்ள வேண்டிய யதார்த்தம்.
நீதிமன்றத்தில் விக்னேஷ் அவர்களின் இறுதி வாதக்காட்சி ஒவ்வொரு கணவன் மனைவியும் காண வேண்டிய காட்சி.
மொத்தத்தில் இன்றைய இளம் ஜோடிகளுக்கான பாடம்.


