அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
இது பொருட்பாலில் மருந்து என்ற அதிகாரத்தில் இருக்கும் திருக்குறள்.
944 ஆவது குறளாக இருக்கும் இதன் பொருள்,
முன் உண்ட உணவு செரித்ததா என்பதை அறிந்து , நன்கு பசி எடுத்த பிறகு , நமது உடலுக்கு ஏற்றவாறான உணவைத் தேர்வு செய்து உண்ண வேண்டும் என்பது பொருள்.
உணவே மருந்து என்பது நமது பண்பாடு.
அதையே தான் இரண்டாயிரத்து ஐம்பத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரும் கூறியுள்ளார்.
பசித்தும் உண்ண வேண்டும் என்பதே இயற்கையின் நியதி.
ஓரறிவு படைத்த ஜீவன்கள் துவங்கி ஐந்தறிவு படைத்த மிருகங்கள் வரை அந்த இயற்கையின் நியதியிலிருந்து இன்னும் கூட மாறாமல் தான் வாழ்கின்றன.
எந்தப் புலியும் , கரடியும் மூன்று வேளை உண்ணுவதில்லை, ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு லிட்டர் நீர் அருந்துவதும் இல்லை.
ஆனால் மனித இனமோ இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறி , தினமும் மூன்று வேளை உணவு, அதுவும் இத்தனை மணிக்கு உண்பது நல்லது, இத்தனை லிட்டர் தண்ணீர் என்று கூறி , அந்த உணவைத் தயாரிக்க, பசுமைப் புரட்சி , மரபணுமாற்றம் என்று ஏதேதோ செய்து இயற்கை சமநிலையை சீரழித்து இன்று உண்ணும் உணவு விஷமாகி , வாழும் வாழ்க்கை முறையும் சீரழிந்து ஆரோக்கியத்தை இழந்து நிற்கிறது.
உடற்பருமன் என்பது இப்போது மிகவும் கவனிக்கத்தக்கப் பேசுபொருளாகி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் அளவிற்கு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நமது தேசத்தில் மட்டும் சுமார் 44 கோடி பேர் உடற்பருமன் பிரச்சினையை கொண்டிருக்கின்றனர்.
இதைத்தாண்டி வயிறு பெருத்து தொந்தி வயிறு, வயிற்றைச் சுற்றி கொழுப்பு , கெட்ட கொலஸ்ட்ரால் அது சம்பந்தப்பட்ட இதய நோய்கள் என்று உடல் உபாதைகள் பலவற்றையும் கோடிக்கணக்கான மக்கள் கொண்டிருக்கின்றனர்
இதற்கெல்லாம் நாம் உண்ணும் உணவுப் பழக்கமும், இன்றைய உணவுமுறைகளும், திணிக்கப்பட்ட உடலுக்கு, தட்வெப்ப சூழலுக்கு ஏற்பில்லாத உணவுகளும் தான் காரணம்.
அதைத்தாண்டி பழைய கால வாழ்க்கைமுறையை ஒப்படும்போது நமக்குப் போதிய உடலுழைப்பு இல்லை என்பது நூறு சதவீத உண்மை.
குறைந்தபட்சம் உணவகங்களுக்குச் சென்று உணவை வாங்கிக் கொண்டிருந்த நடைமுறையும் கூட மாறி , வீட்டிற்கே உணவு கொண்டு வந்து தரப்படும் கலாச்சாரம் பெருகி நிற்கிறது.
இது சில கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பாதிப்பதற்காக நமது வாழ்க்கை முறையில் செய்த மாற்றம்.
நடைபயிற்சி சைக்கிள் பயணமாகி, பிறகு இயந்திரமயமான உலகில் பக்கத்திலிருக்கும் கடைக்கே இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும் நிலைக்கு ஆளாகிவிட்டோம்.
இது போதாதென்று அடிப்படைத் தேவைக்கு வீட்டை விட்டு பத்து அடி கூட எடுத்து வைத்து வெளியே வர வேண்டாம், வீட்டு வாசலிலேயே மளிகை சாமான் முதல் மசாலா வரை அனைத்தையும் தருகிறோம் என்று பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கிளம்பி நிற்கின்றன.
இயந்திரமயமான காலத்தில் பழைய நடைமுறை போல , வாழ்வது முழுதாக சாத்தியமில்லை தான்.ஆனால் நாம் செய்யும் வேலை, வாழும் வாழ்க்கைமுறையைக் கணக்கில் கொண்டு ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்துத் தேவையான உணவுகளைத் தேவையான அளவில் உண்பதால் உடலின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க முடியும்.
வேறு சில காரணங்களால் உடற்பருமன் பிரச்சினை இருப்பவர்கள் அதனை குறைந்தபட்ச செலவில் மருத்துவரீதியாக அணுகி தீர்வு காண முயற்சிக்கலாம்.
போலியான விளம்பரங்களை நம்பி உடல் எடைக்குறைப்பு என்று கூறி பணத்தை வாரி இரைத்து ஏமாற வேண்டாம்.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான அம்பானி அவர்களின் மகன் நினைத்திருந்தால் பணத்தை வாரி இரைத்து இந்தத் தொழில்நுட்பங்களை வைத்து உடல் எடையைக் குறைத்திருக்க முடியாதா என்ன?
ஆனால் அவர் தேர்வு செய்தது உடற்பயிற்சியையும் நடைபயிற்சியையும் தான்.
அம்பானியிடம் பணம் வாங்கிவிட்டு உடல் எடை குறையாவிட்டால் பதில் சொல்லி ஆக வேண்டுமே?
அதனால் இந்த போலி கார்ப்பரேட்டுகள் அம்பானி மகனின் உடல் எடையைக் குறைக்காது.
கேள்வி கேட்க முடியாத பிள்ளைப்பூச்சிகளான
நடுத்தர மக்களின் பணத்தை தான் பிடுங்கும்.
உடல் ஆரோக்கியம் என்பது முக்கியம் தான்.
அதை இயற்கையான முறையில் விலங்குகளைப் போல, இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம்.
பணத்தை இரைக்க வேண்டிய அவசியமில்லை.
உணவே மருந்து என்பதை ஒருமுறை நினைவில் கொண்டு , உடல்நலத்தைப் பேணுவோம்.
வாழும் வரை ஆரோக்கியமாக வாழ்வோம்!





