கடவுள் இருக்கான் குமாரு.
என்னடா எப்பயுமே கடவுள் இருக்காரா , இல்லையானு பேசுற ஆளு, கடவுள் இருக்கான் குமாருன்னு பதிவு போட்டுருக்கேனு பாக்குறீங்களா?
காரணம் இல்லாமல் இல்லை.
திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்ட நெரிசல் குறித்தும், வசதிகள் சரிவர செய்யப்படாதது குறித்தும் நாம் சில சமயம் எழுதியிருந்தாலும், அங்கே பௌர்ணமிக்கு பௌர்ணமி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு கடற்கரையில் தங்கிக் கூத்தடித்து, கடலை கலக்கி, மல ஜலம் கழித்து திருச்செந்தூரின் கடற்கரையை நாசமாக்கியதைப் பற்றி மனம் நொந்து போய் எழுதியிருந்தோம்.
அது நாளடைவில் சரியாகி விடும் என்ற நம்பிக்கையே இல்லாமல் ஆகி, மாத மாதம் கூட்டம் அதிகரித்ததே ஒழிய அந்த கடற்கரையில் தங்கும் கலாச்சாரம் ஒழிந்த பாடில்லை.
வந்தோமா, கடவுளை கையெடுத்துக் கும்பிட்டு மனதார வேண்டினோமா, வீடுகளுக்குப் போனோமா, பிள்ளைகுட்டிகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினோமா என்று இல்லாமல் அந்த ஜோசியக்காரன் சொன்னான், இந்த சாமியார் சொன்னான் என்று ஆரம்பத்தில் பத்து நூறு என்று ஆரம்பித்த இந்தக் கலாச்சாரம், நாளடைவில் கடலைய்யே கதிகலங்கச் செய்யும் அளவிற்கு உயர்ந்தது .
கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு விரதமிருந்து மாலை அணிவது போல , வானத்தில் வட்ட நிலாவைப் பார்த்து விட்டால் போதும், புளியோதரையைக் கட்டிக்கொண்டு போர்வைகளை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவது.
பக்தி என்பதற்கும், மூடநம்பிக்கை என்பதற்கும் வித்தியாசம் தெரியாமலே மக்கள் ஒருவரைப் பார்த்து இன்னொருவர் ஆட்டு மந்தைகளைப் போல செய்ய ஆரம்பித்து விட்டனர்.
கடற்கரையில ராத்திரி தங்கினவன் பெரிய ஆளா வருவான் எனில் அங்கே பிச்சை எடுப்பவர்கள் வருடம் 365 நாளும் அங்கே தானே தங்குகிறார்கள்?
அவர்கள் ஏன் பெரிய ஆளாகவில்லை.
இதைச்சொன்னால் நம்மை வேறு மாதிரி சித்தரிப்பார்கள்.
இவர்களைத் திருத்த கடவுளால் மட்டும் தான் முடியும் என்ற சூழல் உருவானது.
அதனால் முருகன் கடுப்பாகி இந்த முடிவை எடுத்து விட்டார் போல.
இனிமேல் பாதுகாப்பு காரணங்களுக்காக, திருச்செந்தூர் கடலில் இரவு பத்து மணியலிருந்து காலை 4 மணி வரை யாரும் தங்க அனுமதியில்லை என்று ஒரு செய்தி வந்திருக்கிறது.
இப்போது தான் என் மனதிலிருக்கும் பாரமே இறங்கியது.
அப்பாடா இனி இந்த திடீர் பக்தர்கள் தொல்லை இல்லை.
ஒருவழியாக திருச்செந்தூர் கடலுக்கு விமோட்சனம் கிடைத்து விட்டது.
இத்தனை நாளா முருகா இந்த காரியத்தை நிகழ்த்துவதற்கு?
எப்படியோ எனது பலநாள் புலம்பல் உனது காதுகளுக்கு எட்டியிருக்கிறது.
வெற்றிவேல் வீரவேல்!





