Categories
அரசியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டம்.
இந்த திட்டத்தைப் பற்றி பல நேர்மறை மற்றும் எதிர்மறை பேச்சுகளும் விமர்சனங்களும் இருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தினால் எந்தவொரு முழுமையான பயனும் இல்லை, மேலும் இந்த நூறு நாள் வேலைத் திட்டம் காரணமாக விவசாயக் கூலிக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாகிப் போனது என்ற பல விமர்சனங்களும் இருந்தது. இது விமர்சனம் மட்டுமே அல்ல. உண்மையும் கூட.

ஒரு புறம் பாமர ஏழை மக்களுக்கு வேலைவாயப்பும் ஊதியமும் கிடைக்கிறது என்பது உண்மையானாலும் கூட, உயிரைக் கொடுத்து உழைக்கும் வர்க்கம் ஒருபுறமிருக்க, நூறு நாள்வேலைத்திட்டம் என்ற பெயரில் மரத்தடி நிழலில் ஓய்வெடுத்து ஊர்க்கதை பேசிவிட்டு ஊதியத்தை வாங்கிச் செல்லும் சில ஆட்கள் மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்கிறார்கள் என்ற வருத்தமும், இதன் காரணமாகவே விவசாயக்கூலிக்கு ஆள் கிடைக்கவில்லை என்ற பிரச்சினையும் கவனிக்கத்தக்கது.

இதை கவனித்த மத்திய அரசு இதற்கான மூல காரணமான ஊழலை சரிசெய்ய ஒரு முயற்சியை மேற்கொண்டது.

அதாவது இந்த வேலைக்கான ஊதியம் முழுமையாக பயனாளர்களைச் சென்றடையாமல், ஒரு பங்கு பணத்தை அரசு அதிகாரிகள் எடுத்துக் கொண்டு மீதி பணத்தையே இதன் பயனாளர்களுக்குத் தருகிறார்கள் என்ற மோசடியைக் களைவதற்காக இந்த திட்டத்திற்கான ஊதியம் நேரடியாகப் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ஒரு நல்ல தீர்வை முன்னெடுத்தது.

ஆனால் அதன்பிறகும் இந்த ஊழல் பிரச்சினை ஓயவில்லை.
நூறு நாள் வேலைவாயப்புப் பயனாளராக இணைப்பதற்கு முன்கூட்டியே லஞ்சம் பெறப்படுகிறது என்ற ரீதியில் புதுவிதமாக இந்த மோசடி தொடர்ந்தது.

இப்படி லஞ்சத்தில் ஊறித் திளைத்த காரணத்தினால் அந்த நூறு நாள் வேலைத்திட்ட அலுவலர்கள் , மேற்பார்வையாளர்கள் அந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றிய பணியாளர்களை பராமரித்து வேலையை வாங்க இயலவில்லை என்பது உண்மைதான்.

வேலை செய் என்று கெடுபிடி செய்யும் அளவிற்கு அந்த திட்டத்தை மேற்பார்வை செய்தவர்களும் யோக்கியர்களாக இல்லை.

இதனாலேயே இந்தத் திட்டம் பெரிதளவில் விமர்சனத்திற்கெ உள்ளானதும், அதில் ஒரு திருத்தம் வர வேண்டும் என்று பலதரப்பும் எதிர்பார்த்ததும் உண்மையே.

மத்திய அரசு இப்பொது இந்தத் திட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது! அது எப்படியானது பார்க்கலாமா?

முதலில் பெயர் மாற்றம்.

மகாத்மா காந்தியின் பெயரிலிருந்து இந்த திட்டம் புதிய ஊரக வேலைவாயப்புத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

மகாத்மா காந்தியின் மீது இவர்களுக்கு என்ன வெறுப்போ?

மேலும் கண்ணாடியைத் திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும் என்ற ரீதியில், பெயர் மாற்றத்தால் என்ன நிகழ்ந்து விடப் போகிறது?

இன்னொரு பெரிய ஏமாற்று வேலை என்னவென்றால், இந்த திட்டத்திற்கான நிதி 100 சதவீதமும் இது வரை மத்திய அரசாங்கத்தாலேயே தான் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த சில வருடங்களாக அதைப் படிப்படியாகக் குறைத்து வந்ததோடு அல்லாமல் இந்த புதிய மசோதா மூலமாக இந்த திட்டத்திற்கான பங்களிப்பை 60 – 40 சதவீதம் என மாற்றியிருப்பது மாநில அரசுகளின் மீதான அதிகப்படியான சுமை.

ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களைக் கொண்டிருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இது அதிகப்படியான சுமை.

மத்திய அரசு முழுமையாக எந்த திட்டத்தையும் செய்யாது என்று எப்படி சொல்ல முடியும்?

நமது வரிப்பங்கு அங்கேயும் தானே செல்கிறது? மக்களுக்கான நலத்திட்டங்களிலிருந்து மத்திய அரசு நழுவிக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்?

தேசத்தந்தையின் ஆசைப்படி உருவான திட்டத்திலிருந்து அவரது பெயரை நீக்கியதோடு அல்லாமல், அமைதியாக மாநில அரசுகளின் மீது திட்டத்திற்கான நிதிச்சுமையை தூக்கி வைப்பது முழு அயோக்கியத்தனம்.

பெரும்பான்மை அவர்கள் பக்கம் இருப்பதால் இந்த விஷயத்தில் எதிர்கட்சிகளால் கூச்சலிட மட்டுமே முடிந்தது.

வாக்களிக்கும் மக்கள் உணர வேண்டும்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.