ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தார். அவரிடம் இரண்டு மாடுகள் இருந்தன.
அந்த இரண்டு மாடுகளையும் வண்டியில் பூட்டி ஊர்களைச் சுற்றி உப்பு வியாபாரம் செய்து அவர் பிழைத்து வந்தார்.
அந்த இரண்டு மாடுகளும் அவர் வீட்டுத் தொழுவத்தில் ஒன்றாகவே கட்டப்பட்டிருக்கும். வேலையும் இரண்டு மாடுகளும் ஒரே மாதிரி தான் செய்யும்.
ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் ஒன்று உண்டு.
ஒரு மாடு ஆரம்பத்திலிருந்தே அவரிடம் இருந்தது. அதன் மீதி பிரியம் அதிகம்.முதலில் அந்த மாட்டை வைத்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றி தான் இந்தளவிற்கு வளர்ந்து இன்று இன்னொரு மாடு வாங்கியிருக்கிறார்.
இன்றைய சூழலில் அவரிடம் இரண்டு மாடுகள் இல்லாவிட்டால் , அவரால் இந்த வியாபாரத்தைத் தொடர இயலாது. ஏனென்றால் இன்றைய அளவில் வியாபாரம் செய்யத் தேவையான அளவை இழுக்க இரண்டு மாடுகள் தேவை.
அப்படியிருந்தும் கூட அவர் முதல் மாட்டின் மீது காட்டும் பரிவையும் பாசத்தையும் இரண்டாவது மாட்டின் மீது காட்டுவதில்லை.
ஏன் வைக்கோல் வைக்கும் அளவில் கூட முதல் மாட்டிற்கு அதிகம் , இரண்டாவது மாட்டிற்குக் குறைவு.
இது தவறு என்பதை அந்த வியாபாரி உணரவில்லை.
இன்றைய சூழலில் இரண்டு மாடுகளும் ஒரே வேலையைத் தான் செய்கின்றன.
இரண்டும் இல்லாவிட்டால் நம் கதை கந்தல் என்பதை அறிந்திருந்தும் முதல் மாட்டிற்கு ஒரு மாதிரி இரண்டாவது மாட்டிற்கு ஒரு மாதிரி நடந்து கொண்டார்.
இதை கவனித்த இரண்டாவது மாடு கோபமடைந்து வண்டி ஓடும் போது ஒரு நாள் உழட்டி விட்டது.
அப்போதும் கூட அந்த வியாபாரி இரண்டாவது மாட்டின் தேவை என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் அதை மட்டம் தட்டி அதன் மீது கோபம் கொண்டாரே ஒழிய, இரண்டு மாடுகளும் சம அளவில் வேலை செய்யும் காரணத்தால், இரண்டையும் சமமாக நடத்த வேண்டும் என்பது அவருக்குப் புரியவில்லை.
இதேதான் இன்றைய அரசாங்கத்தின் நிலையும்.
மாடுகளுக்கே சம வேலைக்கு சம ஊதியம் எனும் போது மனிதர்களுக்கு?
இரண்டு கண்களும் ஒரே பார்வைத் திறனைக் கொண்டிருக்கும் போது ஒன்றில் வெண்ணெய் , மற்றொன்றில் சுண்ணாம்பு வைப்பது எந்த விதத்தில் நியாயம்?
முன்பு செவிலியர்கள், இப்போது இடைநிலை ஆசிரியர்கள்.
பணியில் ஒரே ஒரு நாள் முன்பு இணைந்தவர்களுக்கு ஒரு ஊதியமும், மறுநாள் இணைந்தவர்களுக்கு வேறு ஊதியமும் வழங்குவது எந்த விதத்தில் நியாயம்?
செலவுக் குறைப்பு என்பதற்காக தொகுப்பு ஊதிய ஊழியர்களை மிகத் தாழ்ந்த நிலையில் அவர்கள் வருந்தும் விதமாகக் கையாள்வது அரசாங்கத்திற்கு அழகா?
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கருத்து ஓங்கட்டும்.
மனிதர்களுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வு ஒழியட்டும்.




