மனிதர்கள் மிருகமாகலாம், ஆனால் ஒருபோதும் மிருகங்கள் மனிதனாக முடியவே முடியாது.
ஏனென்றால் அவற்றிற்கு ஆறாம் அறிவு கிடையாது.
அவைகளுக்கு நாகரீகம் தெரியாது.
விஞ்ஞான வளர்ச்சி புரியாது. அதை உபயோகிக்கும் முறைகள் பற்றியும் தெரியாது.
மிருகங்கள் தனது சுபாவத்திலிருந்து தன்னை மாற்றிக் கொள்வது கடினம்.
ஒரு அழகான மானைப் பார்த்தால் சிங்கம் ரசிக்குமா? அல்லது புசிக்குமா? இயற்கையின் படைப்பு மான்களைப் புசிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை சிங்கங்கள் .
அப்படியே தான் இன்றளவிலும் தனது இயல்பு நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றன.
ஆனால் மனிதர்கள் அப்படியல்ல. ஆரம்பகாலத்தில் மிருகங்களைப் போல நாகரீகமல்லாத நிலையிலிருந்து மாறி இன்று நவநாகரீகமான வளர்ச்சியையும் , விஞ்ஞானத்தில் வானை முட்டும் சாதனையையும் படைத்திருக்கிறார்கள்.
இது மனிதனின் ஆறாம் அறிவால் சாத்தியமானது.
மிருகங்கள் என்றால் எல்லாமே ஒரே குணம் கொண்டவை தான்.
சிங்கத்தைக் கண்டால் மான்கள் தெறித்து ஓடிவிடும்.
சிங்கம் பாசமாகப் பழகும் என்று மான்கள் ஒருபோதும் நம்புவதில்லை.
மனிதர்கள் அப்படியல்ல. பார்க்க ஒரு தினுசு, பழக வேறொரு தினுசு.
வேட்டையாடி இறை உண்டு வாழ்ந்த மனிதன் ஒரு புறம் வானை முட்டும் சாதனைகளைப் படைக்கும் அளவிற்கு வளர்ந்திருந்தாலும் கூட, இன்றும் கூட சில மனிதர்கள் மிருகங்களைக் காட்டிலும் மோசமானவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
எந்த ஆறாம் அறிவும் விஞ்ஞாமும் மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்தியதோ, அதே வளர்ச்சியும் அறிவும், அறிவியலும் சில சமயங்களில் மனிதனை மிருகங்களைக் காட்டிலும் மோசமானவைகளாக மாற்றுவது மறுக்க முடியாத உண்மை.
சமீபத்தில் திருத்தணி ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த சம்பவம் , மனிதருள் எத்தனை மிருக குணம் ஒழிந்து கொண்டிருக்கிறது என்பதைத் தான் காட்டுகிறது.
போதையில் பாதைமாறிப் போகும் பல இளைஞர்கள் இந்த நாட்டில் இருப்பது நமக்குப் பரீட்சயம் தான்.
போதையில் பெற்ற தாயைக்கூடக் கொன்று குவிக்கும் கொடூரன்களும், சிறுமியைக் கற்பழிக்கும் காமுகர்களும் எனப் பல ரகங்களில் மிருகங்களைக் காட்டிலும் கொடிய ரகத்தில் மனிதர்கள் உண்டு.
மிருகங்கள் கொடியவை என்பது இயற்கையின் நியதி.
தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான் உண்பதற்காக மட்டுமே பிற மிருகங்களை வேட்டையாடும் குணமுடையவை.
ஆனால் மனித இனமோ அதைவிடக் கேவலம்.
பொன்னுக்கும், பொருளுக்கும் , காமத்திற்கும் சக மனிதர்களைத் துன்புறுத்தி மகிழும் கேடுகெட்ட இனம் நம் இனம்.
இப்படி பல காரணங்களுக்காக என்பதைத் தாண்டி, காரணமே இல்லாமல், அலைபேசியில் இணையதளத்தில் மகிழ்ந்து பரப்பும் ரீல்ஸ்களில் தங்களை பெரிய ஆளாக கெத்தாகக் காட்டிக் கொள்வதற்காக பிழைப்புத் தேடி பல்லாயிரம் கிமீ தாண்டி வந்து வாடிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞரை சரமாரியாக ஆயுதங்களால் தாக்கி அதைப் படமெடுத்து இணையத்தில் பகிரும் அளவிற்கு மூன்று சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்திருக்கிறார்கள்.
பணம், பொருள் என்பதைத் தாண்டி கேவலம் இப்படி ரீல்ஸ்க்காக ஒரு உயிரைத் துன்புறுத்தும் அளவிற்கு மனிதம் செத்து விட்டது.போதை கண்ணை மறைத்து விட்டது.
வெறும் 17,16 வயது இளைஞர்கள் கஞ்சா அடித்து , கத்தி அரிவாளைக் கையிலெடுக்கும் வரை அவர்களைச் சுற்றி இருந்த குடும்பத்தினரும், நண்பர்களும், என்ன செய்து கொண்டிருந்தனரோ?
நமக்கென்ன வந்தது? நமக்கேன் வம்பு என்று வளரும் தலைமுறையை இப்படி தறுதலைகளாக வளர வீட்டால் பின்னாளில் நாடே சுடுகாடாகத் தான் இருக்கும்.
இந்தக் கொடூர செயலைச் செய்த அந்த இளைஞர்களை தண்டிக்கும் விதமே இனி இந்த மாதிரியான குற்றங்களைத் தடுக்க வேண்டும்.
அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்ட அவரது பெற்றோரையும் , உறவினரையும் நீதிமன்றம் இழுத்தடித்து அலைக்கழிக்க வேண்டும்..
மனதிற்கு ஒரே ஆறுதல், அந்த வடமாநில இளைஞர் உயிரோடு வந்துவிட்டார் என்பது மட்டுமே!


