Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மனிதநேயத்திற்கு தண்டனையா?

மாயமாகப் போகும் மனிதநேயத்தையும் அன்பையும் கேள்வி கேட்டு இன்னும் காணாமல் போக்குகிறது நமது சட்டமைப்பு.

சமீபத்தில் தெருநாய்கள் கட்டுப்பாடு சம்பந்தமான வழக்கு வாதம் உச்சநீதிமன்றத்தில் வந்திருந்த போது தெருநாய்கள் கட்டுப்பாடுகளைப் பற்றி உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு சில கேள்விகளை எழுப்பியிருப்பது வரவேற்கத்தக்கது.

தெருநாய் கடித்து யாருக்காவது பிரச்சினைகள் வரும்பட்சத்தில், அதாவது ரேபிஸ் தடுப்பூசி போடாமல் விடப்பட்ட தெருநாய்களால் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் மாநில அரசுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறது உச்சநீதிமன்றம்.

ஒரு மாநில அரசு இதனை சரியான முறையில் கையாள வேண்டும் என்பது உண்மைதான்.
நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி நிர்வாக அமைப்புக்கான வேலைகளில் இதுவும் ஒரு முக்கியமான வேலை தான்.
தெருநாய்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது அவர்களின் மெத்தனமான போக்கு.

இந்தக் கருத்து வரவேற்க்கத்தக்கது , ஏற்புடையது.
இதோடு சேர்த்து இன்னொரு கருத்தையும் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.நெருநாய்கள் யாரையாவது கடிக்கும் பட்சத்தில் அந்த நாய்களுக்கு உணவளிப்பவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது.

இந்தக் கருத்து சிறிய முரண்பாடாகவே தோன்றுகிறது.

தெருநாய்களின் பாதுகாவலர்கள், அவைகளை முகாமில் அடைக்கக் கூடாது, தெருக்களிலேயே சுதந்திரமாக விட வேண்டும், எத்தனை குட்டி போட்டாலும் பரவாயில்லை, மனிதர்களை விடத் தெருநாய்கள் எண்ணிக்கையில் அதிகரித்தால் பரவாயில்லை என்ற போராடும் அமைப்புகளைக் கண்டித்துப் போராட்டம் செய்யும் ஆட்கள் ஆளுக்கு 4 தெருநாய்களை எடுத்து முறையாக வீட்டில் வளருங்கள் என்று நீதிமன்றம் கண்டித்திருந்தால் பரவாயில்லை.
ஆனால் அப்படி ஒரு கண்டிப்பு வந்ததாகத் தெரியவில்லை.

அதை விடுத்து பாவம், தன்னை நோக்கிப் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு நிற்கும் தெருநாயைக்கண்டு அய்யோ பாவம் பசி போல என்று நினைத்து உணவளிக்கும் மனிதாபிமான மனம் கொண்டவர்களை பலிகடா ஆக்குவது நியாயமா?

இப்படித்தான் சில காலம் முன்பு வரை விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றி ஆளை பாடாய்படுத்தினார்கள்.அதனாலேயே பலரும் விபத்தைக் கண்டால் கண்டும் காணாமலும் போய்க் கொண்டிருந்தார்கள்.

பிறகு அதற்கான தனி அறிக்கை விட்டுதான் இப்போதெல்லாம் மக்கள் விபத்தில் சிக்கியவரை முன்வந்து காப்பாற்றுகின்றனர்.

இப்போது இந்தத் தெருநாய் விவகாரத்தில், பல தெருநாய்கள் மனிதர்களோடு அன்பு பாவித்துப் பழகுவதே, அவர்களில் சிலர் தங்களின் மீது காட்டும் அன்பினால் தான்.

ஒருவேளை மனித இனத்திடமிருந்து தங்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்ற நிலை வரும்பட்சத்தில், நாய்கள் எப்படி மாறும் என்றால், சில சுற்றுலா தளங்களில், மனிதர்களிடமிருந்து உணவுகளைப் பறித்து உண்ணும் குரங்குகளைப் போல மாறும். குரங்குகளுக்குக் கைகள் இருப்பதால் கைகளால் பறித்து விடுகின்றன?

நாய்கள் என்ன செய்யும்?

பல்லால் தான் கடிக்கும்.

தெருநாய்கள் மீதான நடவடிக்கை தவறென்ற வாதம் இல்லை இது.

அந்த நடவடிக்கை நியாயமானதாகவும் , புத்திசாலித்தனமான செயலாகவும் இருக்க வேண்டும்.

அப்பாவி மக்களை பலிகடா ஆக்குவதை விடுத்துத் தங்களை நாய்க் காப்பாளர்கள், மிருகக் காப்பாளர்கள் என்று கூறிக் கொள்ளும் சில அமைப்புகளை அந்த நாய்களுக்கான பொறுப்பை எடுக்கச் சொல்லி வற்புறுத்தினால் சிறப்பு.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.