திரௌபதி-2 .
திரௌபதி படம் உருவாக்கிய சர்ச்சை போல இந்தப்படம் பெரிய சர்ச்சைகளை உருவாக்க வாய்ப்புகள் இல்லை என்றாலும், எல்லோரும் மனதார இதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.
ஏனென்றால் இது சுல்தானியர்கள் அதாவது இஸ்லாமிய மன்னர்கள் இந்திய நாட்டில் குடியேறி ஆட்சி செய்த போது இங்குள்ள மக்களிடம் எப்படி வரி வசூல் செய்தார்கள், பெரும்பாலானவர்களை எப்படி தனது மார்க்கத்திற்கு மாற்றினார்கள் என்பதை விளக்கி , அதை எதிர்த்துப் போராடிய ஒரு தமிழ்நாட்டு் மன்னரின் வரலாற்றைத் தழுவி எடுத்த படம்.
ஹொய்சால மன்னரான வல்லாள மன்னரைப் பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட கதை.
அந்த மன்னரின் ஒரு பிரிவு சிறப்புப்படையின் தளபதியாக கதையின் நாயகன்.
அந்த மன்னரின் படைத்தளபதியாக மட்டுமல்லாமல் ஒரு சிறிய பாளையத்தின் அரசனுமாக இருக்கிறார்.
இவர்கள் காலகட்டத்தில் வந்த சுல்தானியர்களை இவர்கள் எப்படிக் கையாண்டார்கள் என்பதே முழுப்படமும்.
இதில் மிகப்பெரிய அளவில் முகம் சுழிப்பதற்கோ அல்லது இவர் மத துவேஷம் பேசுகிறார் என்று சமூக வரைதளங்களில் பரப்புவதற்கோ எதுவும் இல்லை.
இருப்பது உண்மைதான்.
தசாவதாரம் படத்தில் எப்படி சைவ வைணவ மக்களிடையிலான பிரிவினையும் , கடவுள் திணிப்பும் காட்டப்பட்டதோ அதைப்போலத்தான் இந்தப்படத்தில் இஸ்லாமிய மார்க்கம் எப்படி இந்தியாவில் புகுத்தப்பட்டது என்பதைப் பேசியிருக்கிறார்கள்.
இஸ்லாமிய மன்னர்கள் என்னென்ன வரி வசூலித்தார்கள் அவர்கள் மக்களை எப்படி மதம் மாற்றினார்கள் என்பதை நாம் பாடப் புத்தகங்களில் கூட படித்திருக்கிறோம்.
அதனால் இந்தப்படம் மத துவேஷம் பேசுகிறது என்ற கருத்துகள் அர்த்தமற்றது.
14 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மையான சம்பவங்கள் தான் படத்தின் மையக்கரு.
வல்லாள மன்னராக நட்ராஜ். வயோதிக ஒப்பனைக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
நடிப்பில் அவருடைய பங்கைத் தந்து விட்டார்.
கதையின் நாயகன் ரிச்சர்டு ரிஷி , சண்டைக் காட்சிகளில் நல்ல ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார்.
வாள் சண்டைகள் நல்ல பயிற்சிகளுடன் யதார்த்தத்தை மீறிய சினிமாத்தனமில்லாமல் ஆர்ப்பட்டமில்லாத ஆக்ரோஷமான காட்சிகளாக அமைந்தது பாராட்டத்தக்கது.
திரைக்கதை என்று பார்த்தால் முதல் பாதியில் கதையின் நாயகன் உருவாகும் கதை. அவன் பிறப்பிலிருந்து படைத்தளபதி மற்றும் பாளைய மன்னனாக முடிசூடும் வரை காட்டிப் பிறகு சுல்தானியர்களை எதிர்க்கும் போராட்டத்தில் வள்ளால மன்னர் உயிர் துறந்து, கதாநாயகன் அவர்களை எதிர்க்கத் துணியும் தருணத்தை இடைவேளைக் காட்சியாக அமைத்திருக்கிறார்கள்.
சுல்தானியர்களின் அட்டூழயங்கள் பற்றி நாம் சில இந்திப்படங்கள் பார்த்து வைத்திருந்தால் அவற்றை மீண்டும் பார்ப்பது போன்ற ஒரு சின்ன தொய்வு வரலாம்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் ஒரு நடனக்காட்சி போல இதிலும் ஒரு காட்சி உண்டு.
எல்லா மக்களையும் அதி கவராது.
இரண்டாவது பாதியில் கதாநாயகன் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை எப்படி முடித்தார் என்பதே மீதிக்கதை.
மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமோ, மிக அதிகமான தொகையோ செலவழிக்காமல்,தரமான ஒரு படைப்பைத் தந்த்தற்கு முதலில் பாராட்டுகள்.
வரலாற்றுப் படங்கள் என்று பல படங்கள் அதிக செலவில் வந்து நமது மனதைத் திருப்தி படுத்தவில்லை. அதையெல்லாம் ஒப்பிட்டும் போது, குறைந்த செலவில் திருப்திகரமான படமாக இதை அமைத்த அணிக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.
கதாநாயகி சில இடங்களில் செயற்கையாக நடித்தது போன்ற தோற்றமும், கதாநாயகன் சில இடங்களில் முகபாவனையை சரிவர வெளிப்படுத்தாதவாறு அமைந்ததைத் தவிர மற்ற நடிகர்களின் பங்களிப்பு நலம்.
வரலாற்று உண்மை படமாகியிருக்கிறது.
அதை ஒரு சார்பாக மத துவேஷமாகப் பார்க்காமல் சினிமா என்ற ரீதியில் பார்க்க வேண்டும் என்பது தான் சினிமா ரசிகர்களுக்கான வேண்டுகோள்.
ஒரு சினிமாவாக இது குறைந்த செலவில் பெரிய நடிகர்கள் இல்லாவிட்டாலும் நல்ல படைப்பு தான்.


