இன்றைய சமூக வலைத்தளங்களிலும் , வாட்ஸ் அப் செய்திகளிலும் ஒரு விஷயத்தைப் பரவலாகப் பார்க்க முடிந்தது .
அரசாங்கம் மாணவர்களுக்காக அளித்த மடிக்கணினியில் உள்ள முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி மற்றும் இன்றைய முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் புகைப்படங்களை , அசிட்டோன் அல்லது தின்னர் கொண்டு அளித்து அதை மகிழ்ச்சியாக காணொளிப் பதிவு செய்து அதைப் பரவச் செய்திருக்கிறார்கள்.
சிலர் அதன் முன்புறம் மற்றும் பின்புறத்தில் பல்வேறு வண்ணங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டி அதை மறைத்திருக்கின்றனர்.
இதை விளம்பரப்படுத்தி ஒரு தொழிலாகவும் ஆக்கிவிட்டார்கள்.
இந்த விஷயம் சரியா? தவறா?
இவர்கள் இப்படிச் செய்வது முறையா? என்று ஆராய்ந்தோமேயானால் ஒவ்வொருவரின் பார்வையில் இது ஒவ்வொரு விதமானதாக இருக்கும்.
மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் மடிக்கணினியில் இவர்களின் படம் எதற்கு என்று கூட சிலர் கேட்கலாம்.
ஆனால் காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் வழக்கமான ஒரு விஷயம் தான் இது.
இதில் இந்தக்கட்சி அந்தக் கட்சி, மாநிலக் கட்சி , மத்தியக் கட்சி என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சியின் தலைவர், முதல்வராக இருக்கும் பிரதிநிதி ஆகியோரின் படங்களை உதவித் திட்டம் செய்யப்படும் பொருட்களின் மீது விளம்பரப்படுத்துவது இயல்பு தான்.
இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மின்விசிறி, மிக்சர் கிரைண்டர் ஆகியவை இன்னமும் கூட நமது வீடுகளில் இருக்கத்தான் செய்கின்றன.
மத்திய அரசின் எந்தத் திட்டங்களானாலும் சரி அதில் பிரதமர் திரு.மோடி அவர்களின் புகைப்படம் மிகப் பெரிதாகவும் திட்டம் பற்றிய தகவல்கள் அதை விடச் சிறிதாகவுமே இருக்கின்றன.
இப்படி இன்றைய காலகட்டத்தில் அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்காக நல்ல திட்டங்களைக் கொண்டு வரும் போது அந்தந்த ஆட்சியாளர்களின் புகைப்படம் அல்லது காணொளி பதிவிட்டு விளம்பரப்படுத்தி மக்களிடம் அதைத் தொடர்ச்சியாக நினைவுபடுத்த வேண்டியது கட்டாயமாகி இருக்கிறது.
அரசியல் சூழ்நிலை அது மாதிரியானதாக இருக்கிறது.
மேலும் பல லட்சம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாநிலத்தின் முதல்வராக மக்கள் பிரதிநிதியாகத் திகழும் ஒருவர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கானவரும் தான்.
அவரது புகைப்படத்தை அழிப்பது என்பது தனிப்பட்ட முறையில் அவர் மீதான காழ்ப்புணர்ச்சியில் செய்தாலும் கூட, அதை மறைமுகமாகச் செய்துவிட்டு சத்தமில்லாமல் அந்த மடிக்கணினியை நல்லபடியாக உபயோகித்திருக்கலாம்.
அதை விடுத்து இப்படி அந்தப் புகைப்படங்களை அழிப்பதை காணொளி எடுத்துப் பரப்பி விடுவது , அரசியல் காழ்ப்புணர்வு போலத்தான் தெரிகிறது.
ஒரு அரசியல் கட்சியை இன்னொரு அரசியல் கட்சி விமர்சிக்கலாம், எதிர்க்கலாம்.
அவர்களே கூட இப்படிப் புகைப்படங்களை அழித்துக் கேவலப்படுத்துவது தவறு.
அப்படியிருக்க பயனாளியான அந்த நபர்கள் இப்படிச் செய்வது மிகத் தவறு தான்.
ஒருவேளை அவர்களுக்கு அவ்வளவு காழ்ப்புணர்ச்சி இருக்கும் பட்சத்தில், பொதுவெளியில் இந்த மடிக்கணினி எனக்கு வேண்டாம் என்று அதை நிராகரித்து இந்த அரசாங்கத்தை அவமானப்படுத்தி இருக்கலாம்.
அதை விடுத்து, அரசாங்க திட்டத்தின் பயனை அனுபவித்துக் கொண்டே, அரசாங்கப் பிரதிநிதியான முதல்வரின் படத்தை அழிப்பது தவறு.
அரசியல் கட்சிகளும் மாற வேண்டும். விளம்பரத்தில் குறியாக இல்லாமல் உண்மையிலேயே நல்ல திட்டங்களை சத்தமில்லாமல் மக்களுக்காக செய்ய வேண்டும்.



