சமூக வலைதளங்களின் தாக்கம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.
இன்று குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அலைபேசி மற்றும் சமூக வலைதள உபயோகங்கள் இல்லாத நபர்களாக இருப்பது அரிதாகி விட்டது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு அநியாயமான உயிரிழப்பு இந்த சமூக வலைதள காணொளி காரணமாக நிகழ்ந்ததை அறிந்து வருந்தி முடிப்பதற்குள் நேற்று இன்னொரு செய்தி நெஞ்சை உலுக்கியது.
உடம்பைக் குறைக்க வேண்டுமெனக் கருதி வெண்காரம் என்ற பொருளை அளவு தெரியாமல் உட்கொண்டு ஒரு கல்லூரி மாணவியின் உயிர் அநியாயமாகப் பிரிந்திருக்கிறது.
முன்பெல்லாம் உடலைத் தேற்றுவதற்கும், உடல் மெலிவதற்கும் இதுதான் மருந்து, இதுதான் உணவு என்று வீட்டிலிருந்த நமநு தாத்தா பாட்டி சொல்லிக் கொடுத்ததைச் செய்து கொண்டிருந்தோம்
அதிகபட்சம், நமக்குத் தெரிந்த அக்கம் பக்கத்தினரிடமோ அல்லது மருத்துவரிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டு ஆரோக்கியமான முறையில் வாழ்ந்திருந்தோம்.
கூடவே உறவாடி, அருகிலேயே வாழும் ஆட்கள் தங்களுக்கு ஒரு விஷயத்தில் 100 சதவாத அறிவும் , அனுபவமும் இல்லாமல் அதை நமக்குப் பரிந்துரைக்க மாட்டார்கள்.
அதையும் தாண்டி நம் கூடவே இருந்து நம்மை கவனித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு நமது உடல்வாகு அன்றாட நடைமுறை எல்லாம் தெரியும்.
அதனால் அவர்கள் இதை இப்படி இவ்வளவு என்று கணித்து நமக்குத் தெளிவாக சொல்லிக் கொடுத்து நடைமுறைப்படுத்தானர்கள்.
இன்றைய காலகட்டத்தில் பல வலைதளங்களும் நல்லது செய்கிறேன், பயிற்சி தருகிறேன், உடலை வலிமைப்படுத்துகிறேன் முன்னேற்றுகிறேன் என்று கிளம்பியிருப்பது சமுதாயத்தின் உள்ள அக்கறையின் பேரில் அல்ல.
தான் பணம் சம்பாதிக்க இது நல்ல வழி என்பதற்கு!
அப்படி சம்பாத்தியத்தை குறிக்கோளாகக் கொண்ட முகம் தெரியாத ஆட்கள் நமக்கு நல்லது தான் சொல்வார்கள் என்று 100 சதவீதம் நம்புவது புத்திசாலித்தனம் அல்ல..
நமது தாத்தா பாட்டியிடமோ, அக்கம் பக்கத்தினரிடமோ, இருந்த நம் மீதான அக்கறை இந்த சமூக வலைதளப் பக்கங்களுக்குக் கிடையாது.
அவர்களின் நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமே.
இந்த வெண்காரம் என்பது போராக்ஸ் எனப்படும் வேதியியில் தனிமம் .
இதன் வேதியியல் சூத்திரம் Na2H20B4017 .
இந்த வெண்காரம் பல வகையில் பயன்படுகிறது.
குங்குமம் தயாரிப்பதற்கு பயன்படுகிறது.
தங்க நகை செய்வதற்கு தண்ணீரில் கரைத்து இருக்கும் பிடிக்கும் பொருளாகப் பயன்படுகிறது.
பூச்சிக் கொல்லியாகக் கூடப் பயன்படுகிறது.
இப்படி இருக்கும் ஒரு பொருள் எப்படி உணவுப் பொருளாக அதுவும் உடல் எடையைக் குறைக்கும் பொருளாக ஆனதென்ற அடிப்படை விளக்கம் ஏதேனும் அந்த சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டதா, எந்த அளவில் இதை உட்கொள்ள வேண்டும் என்ற தெளிவான அறிவிப்பு வெளியிடப்பட்டதா என்பதெல்லாம் விளங்கவில்லை.
எப்படி இருந்தாலும் கல்லூரி பயிலும் அந்த மாணவி ஒரு முறை இணையத்தில் அந்தப்பொருளைப் பற்றிய தகவலைத் தேடிப் படித்திருந்தால் இன்று இந்த கண்ணீர் தேவையில்லை.
எதையுமே கண்மூடித்தனமாக நம்புவது மூடத்தனம்.
சிந்தித்து செயல்படுவோம்.


