Categories
அரசியல் கருத்து சினிமா

பராசக்தி- திரை விமர்சனம்!

பொங்கல் படங்களில் எதிர்பார்க்ப்பட்ட படங்களில் ஒன்று வெளிவராமல் போனது.
இன்னொரு படம் வெளிவந்து பல நேர்மறை மற்றும் எதர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது

2026 பொங்கல் வெளியீடான பராசக்தி பற்றிய பதிவு தான் இது.

இதனோடு வந்திருக்க வேண்டிய இன்னொரு படம் வராமல் போனதாலும், எங்கள் தலைவர் படத்துக்கே நீ போட்டியா என்று ஆரம்பத்தில் இருந்தே கூட இந்தப்படத்திற்கு ஒரு கடுமையான எதிர்ப்பும் எதிர்மறை விமர்சனமும் இருந்தது.

அந்த எதிர்ப்பும் , எதிர்மறை விமர்சனமும், அதனோடு படம் பேசிய கருத்துக்கு எதிரான கூட்டமும் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு எதிரான கட்சியினரும், ஆட்களும் என இத்தனை கூட்டமும் இந்தப் படத்திற்கு ஒரு எதிர்மறையான விமர்சனத்தை வைக்கின்ற காரணத்தால், இந்தப் படத்தின் மீது ஒரு சின்ன சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அது தேவையே இல்லை.

தாராளமாகப் படத்தை அனைவரும் சென்று ரசிக்கலாம்.

அதிலும் குறிப்பாக நமது வராலற்றைப் பதிவு செய்துள்ள தரமான படம் என்ற வகையில் இந்தப்படக்குழுவை மனமாரப் பாராட்டலாம்.

படத்தின் முன்னோட்டம் பார்த்தே புரிந்து கொள்ளலாம், படத்தின் கதை இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் பற்றியது என்று.
அதில் சிவகார்த்திகேயன் போராளி என்றும், ஜெயம் ரவி அரசு அதிகாரி அதாவது போராளிகளை ஒழிக்க வரும் அதிகாரி என்பதும் புரிந்து விட்டது.

அந்தக் கதை எப்படி திரைக்கதையானது, அதர்வா எவ்வளவு பங்களித்திருக்கிறார், நடிகை ஸ்ரீலீலா என்ன செய்திருக்கிறார், அந்தக்காலத்தில் இந்தித் திணிப்பு எப்படி ஆரம்பித்தது, என்னென்ன நடந்தது என்பதை நேர்த்தியாக படமாக்கியதில் வெற்றி பெற்றிருக்கிறார் சுதா கொங்கரா.

சுயசரிதை எடுப்பதில் வல்லவர் என்பதை நாம் ஏற்கனேவே அறிவோம், இப்போது வரலாற்றுப் படத்தையும் சிறப்பாக எடுத்துத் தன்னை மீண்டும் நிரூபித்துக் கொண்டுள்ளார்.
நாம ஜெயச்சுட்டோம் மாறா என்று மார்தட்டிக் கொள்ளலாம் அந்தப் படக்குழு.

இந்தித் திணிப்பு எப்படி மெதுவாக ஆரம்பித்தது என்பதை முதல்பாதியிலும், அந்தத் திணிப்பிற்கு எதிராக எப்படியெல்லால் கடுமையான போராட்டங்கள் நடந்தது என்பதை இரண்டாம் பாதியிலும் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு கட்சிதான் இந்தி எதிர்ப்புக்கு முக்கியக் காரணம், அந்தக் கட்சிதான் இந்தியை எதர்த்துப் போராடி இந்தி திணிப்பைத் தடுத்தது என்று பரவலாக நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் மாணவர்களே முதலில் இதனால் பாதிக்கப்பட்டு போராட்டத்தைத் துவங்கி பிறகு அந்தக் கட்சி அதனை வளர்த்தெடுத்தது என்று வரலாற்றைப் பதிவு செய்துள்ளனர்.
இன்றைய தனத்தில் மீண்டும் கல்விக்கொள்கை மாற்றங்கள், மும்மொழிக் கொள்கை என்ற ரீதியில் அரசியல் இருக்கும்பட்சத்தில் மும்மொழியின் உண்மையான முகம் என்ன? இந்தி அலுவல் மொழி, ஆட்சி மொழி என மாறும் பட்சத்தில் அதன் விளைவுகள் என்ன என்பதை உணர்த்தும் படம்.

இந்தப் படம் ஜனரஞ்சகமாக இல்லை, சினிமா ரசிகர்களுக்குப் பிடிக்காது என்ற விமர்சனம் எல்லாம் சும்மா. அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய நல்ல திரைப்படம்.

கதையின் நாயகர்கள்,, நாயகி சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி, ப்ருதிவிராஜன், ஸ்ரீலீலா போன்றோர் இந்தப் படத்திற்குத் தேவையானதைக் கட்சிதமாக செய்துள்ளனர்.
1955-67 கால கட்டங்களாலான மதுரை மற்றும் சிதம்பரம் , சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆகியவை மிக நேர்த்தியாகக் காட்சியாக்கப்பட்டுள்ளன.

ரயில் , பேருந்து , கடைத்தெரு , ப்ளைமௌத் கார், கார வீடுகள் , ரேடியோ பெட்டிகள் , மாப்பிள்ளை விநாயகர் சோடா என்று 60 களின் வாழ்க்கையை அழகாக நம் கண்முன்னே நிறுத்தியதில் படக்குழுக்களுக்கு பாராட்டுகள்.

இடைவேளை காட்சி அதகளம்.
க்ளைமாக்ஸ் காட்சியில் நட்புக்காக வரும் மற்ற மாநில நடிகர்களின் காட்சியில் விசில் பறக்கிறது.
மொத்தத்தில் தேவையான அரசியலை அளவோடு, நல்ல திரைக்கதை அமைத்து எல்லாரும் ரசிக்கும்படியாக உருவாக்கிய படக்குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுகள்.

பாடல்கள் மனதை ஒட்டவில்லை மேலும் பொறுமையை சோதித்தது என்றாலும் 100 படமாக இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ் பிண்ணனி இசையில் மிரட்டி விட்டார்.
படத்தின் முதல்பாதியின் நீளம் கொஞ்சம் அதிகம் என்பதை உணரமுடிகிறது.

சிறிது கத்தரித்திருக்கலாமோ என்ற எண்ணத்தைத்தவிர படத்தில் பெரிய குறைகள் ஒன்றுமில்லை.

போலியான எதிர்மறை விமர்சனங்கள் நல்ல சினிமாவை பாதிப்பதை நாம் அனுமதிக்கக்கூடாது.
சினிமாவில் அரசியல் பேசியிருக்கின்ற காரணத்திற்காக , சினிமாவை அரசியலாக்கி அதன் மீது வன்மத்தைக் கக்குவது தவறு.
மேலும் அரசியல் காரணங்களுக்காக தடைபட்ட சினிமாவின் ரசிகர்கள், இந்தப் படத்தின் மீது எதிர்ப்பைக் காட்டுவதும் முட்டாள்தனம்.

தனது நாயகனின் படத்தோடு இந்தப்படமும் வெளியாகிறது என்பதற்காக எல்லாம் ஒரு நல்ல படத்தின் மீது எதிர்மறை விமர்சனம் வைப்பதும் தவறு. அப்படி போட்டியே போடக்கூடாத அளவிற்கு விதிகள் இல்லையே?
அவரும் ஒரு காலத்தில் ஒரு பெரிய நடிகரிடம் கூரைக்கும்பிடு போட்டு பிறகு அவரையே எதிர்த்தவர் தானே?

மொத்தத்தில் நமது பழைய வரலாறை அழகாகப் பதிவிட்டிருக்கும் படத்தை கண்டிப்பாக ஒரு நல்ல சினிமா ரசிகராகவும், நமது பூர்வீக வரலாறு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

மண்டும் திணிப்பு, அதிகார துஷ்பிரயோகம்,நடக்கும் பட்சத்தில் நமது முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நாம் ஒருமுறை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதை சொல்லும் படம்.

இப்போது இருக்கும் நிலையில், அவனவன் படித்து முடித்து நிம்மதியாக வேலை வாழ்க்கை என்று இருக்கும் பட்சத்தில், இந்தப் போராட்டம் எல்லாம் எதற்கு? இது மாதிரியான படம் எதற்கு என்று பேசும் ஆட்களுக்கு, அந்தப் படிப்பு இவ்வளவு எளிதாக எப்படிக் கிடைத்தது என்பதை உணர்த்தும் படம்.

பராசக்தி – தீ.🔥

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.