Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இளம் தலைமுறையின் சீரழிவைத் தடுக்க!

90 களில் பிறந்த குழந்தைகள், 90 களில் குழந்தைப் பருவத்தைக் கடந்தவர்கள் தனது 13 வயதில் , அதாவது 8 ஆவது வகுப்புப் பயின்ற காலத்தில் அதிகபட்சம் செய்த சேட்டைகள் , டியூஷனுக்குத் தாமதமாக வருவது, பள்ளிக்கூடத்திற்குத் தாமதமாக வருவது, பெஞ்சில் தாளமிடுவது என இவ்வளவு தான்.
கொஞ்சம் பருவமடைந்து விவரமடைந்த சிலர், தன் வயதை ஒட்டிய பருவமடைந்த பிள்ளைகளை ஓரக்கண்களால் பார்ப்பது உண்டு.

இவ்வளவு தான் 90 களின் கால கட்ட குழந்தைகளின் வாழ்க்கை முறை.

பாக்கெட்டில் சீப்பு வைத்திருந்தால் கூட அடி விழும்.
அப்படியிருந்தது வாழ்க்கையும், ஒழுக்கமும்.

தீபாவளி பண்டிகைக்கு ஏதோ ஒரு வசதியான வீட்டுக் குழந்தை வெடிக்கும் பட்டாசுகளை மற்றவர்களும் சுற்றி இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டாடி மகிழ்ந்த காலம் அது.

குழந்தைகள் உண்மையிலேயே குழந்தைகளாக இருந்த காலம்.

ஆனால் இன்று?

இன்று ஒரு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

கிராமமும் நகரமும் அல்லாத பேரூராட்சி ஆகிய எங்கள் ஊரில் ஒரு 13 வயது சிறுவன், பூட்டியிருந்த உணவகத்தின் கதவை கள்ளத்தனமாகத் திறந்து, கல்லாவை உடைத்து அதிலிருந்த பணம் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாவைத் திருடியிருக்கிறான்.

இந்தக் காட்சிகள் அந்த உணவகத்தை ஒட்டிய பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது.

அதே வயதில் எங்கள் காலத்தில் பள்ளிக்கூடம் செல்லும் எங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் செலவுக்குத் தருவதே அரிது.

20 ரூபாய் எல்லாம் எப்போதாவது ஊருக்கு வரும் தாத்தா பாட்டி கொடுத்தால் தான் உண்டு.

அதே வயதில் இருக்கும் இந்தச் சிறுவன் கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாயை திருடியிருக்கிறான் என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சி?

முதலில் கடையின் பூட்டை உடைத்துத் திருட எவ்வளவு தைரியம் வேண்டும்.
வயதான ஆண்களுக்கே இல்லாத அந்த தைரியம் 13 வயதுச் சிறுவனுக்கு எங்கிருந்து வந்தது?

சமீபத்தில் சமூக வலைதளத்தில் பிரபலமான சிறுவன் பலரை பண ஆசை காட்டி ஏமாற்றியது.

திருத்தணி சம்பவத்தில் அதிக வயதில்லாத நான்கு வாலிபர்கள் கஞ்சா போதையில் ஒருவரைத் தாக்கியது என்று சிறவர்கள் இப்போது இந்த மாதிரியாகச் சீரழிவதற்குக் காரணம் சமூக வலைதளங்களும் என்பது 100 சதவீதம் உண்மை.

இன்றைய இளைய தலைமுறை அலைபேசியிலும் சமூக வலைத்தளங்களிலும் வயதுக்கு மீறிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு அதைத் தான் செய்வதில் தவறொன்றுமில்லை என்ற தவறான மனப்போக்குடன், யாருக்கும் அடங்காமல், யாரைப் பற்றியும் அக்கறையோ கவலையோ இல்லாமல் தனக்குப் பிடித்தவாறு வாழ்கிறேன், விருப்பம் போலச் செய்கிறேன் என்று சீரழிவுப் பாதையை நோக்கி நகர்கிறார்கள்.
இதனைத் தடுக்கும் வழி, அவர்களை சமூக வலைதளங்களைப் பயன்படுத்த விடாமல் தடுப்பது தான்.

சில வலைதளங்கள் , நீங்கள் வயதில் இளையவரா என்று உபயோகிப்பவரிடமே கேட்டுவிட்டு , ஆம் என்ற பதிலை மட்டுமே வைத்துக் கொண்டு பயன்படத் தொடங்கி விடுகிறது.

இதை சிறார்களும் தவறான வயதைப் பதிப்பித்து எளிதாக உபயோகித்து விடுகின்றனர்.

இதைத் தடுக்க அரசாங்கம் கடுமையான நடைமுறைகளைச் செய்தாலொழிய இது மாறாது.

ஆஸ்திரேலியா மற்றும் சில நாடுகளில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறார்கள்.

அதே திட்டத்தை நமது அண்டை மாநிலமான ஆந்திரவும் செயல்படுத்த யோசனை செய்தி கொண்டிருப்பது மிகப்பெரிய வரவேற்ப்புக்குரியது.

ஆனால் இதை அறிவுப்பூர்வமாக உண்மையிலேயே சிறுவர்கள் சமூக வலைதளங்களை உபயோகிக்கா வண்ணம் செய்ய வேண்டும்.

கைரேகை அல்லது முக அங்கீகாரம் இல்லாமல் சமூக வலைதளங்களை உபயோகிக்க இயலாத வண்ணம் வடிவமைக்கப்பட வேண்டும்.

நல்ல மாற்றம் பிறக்க வேண்டும்

ஆந்திராவில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல , ஒட்டு மொத்த உலகமும் இதைச் செய்ய வேண்டும்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.