Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இப்படியும் ஏமாறலாமா?

சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து மக்களை அடிமையாக்குவதோடு அல்லாமல் முட்டாள்களாகவும் மாற்றி மோசடி செய்து அவர்களை ஏமாற்றும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

ஆர்குட், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப் இவையெல்லாம் ஆரம்பிக்கப்பட்ட கால கட்டத்தில் மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்காக மட்டுமே இருந்தன.

நமது ஓய்வு நேரத்தில் சில நிமிடங்கள் இதில் ஒதுக்கினோம்.
இப்போது அந்த நிலை மாறி இவற்றைப் பார்ப்பதில் இருந்து சில நேரம் ஒதுங்கி இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

அளவைத் தாண்டிய அறவியல் வளர்ச்சியும், அலைபேசி வசதி மற்றும் தொலை தொடர்பில் ஏற்பட்ட அதிகமான வளர்ச்சியுமே நம்மை இவைகளுக்கு இவைகளுக்கு அடிமைகளாக்கி விட்டன.

தொடர்ச்சியான உபயோகம், அதிகப்படியாக காணொளிகளைக் காண்பது என்று இணையத்தில் மக்கள் மூழ்கிப் போகத் துவங்கிய உடனே, இதைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் சம்பாதிக்கும் கும்பலும் உருவாகி விட்டது.

மேலும் காணொளிகள் பிரபலமானால் இணைய பக்கத்தில் இருந்து பணம் வரும் என்ற செய்தி பரவ பரவ அதிகப்படியான மக்கள் காணொளிகளை உருவாக்கி பிரபலமாவதை ஒரு தொழிலாகவே செய்யத் துவங்கிவிட்டனர்.
இந்தக் கலாச்சாரம் கண்ட தொடர்ச்சியான வளர்ச்சி உலகளாவ அதிகப்படியான மக்களைப் பார்வையாளர்களாகவும் மாற்றியது.

அப்படியான சூழலில் தான், இந்த விதத்தில் ஏமாற்றும் யுக்திகளும் துவங்கின.

உங்களைக் கைது செய்துள்ளோம், உங்கள் பெயரில் பார்சல் வந்துள்ளது என்ற ரீதியாகவும், அலைபேசிகளை ஹாக் செய்து பணம் பறிக்கும் கும்பல் அல்லாமல், இணையத்தில் பிரபலமாகி தனது பார்வையாளர்களிடம், பிரபலங்களிடம் ஏதாவது பரிதாபமான கதைகளைச் சொல்லி பணம் பறிக்கும் கும்பலும் பெருகித் தான் விட்டது.

அப்படி சமீபத்தில் வெளியான ஒரு திடுக்கிடும் தகவல், ஒரு பதினைந்து வயதான சிறுவன் செய்த மோசடி.

அந்தச் சிறுவன் தனது இணையப் பக்கம் பிரபலமாவதற்காக, விடிய விடிய உப்பின் மீது முட்டி போடுவது உட்பட பல விஷயங்களைச் செய்து அதைப் படமெடுத்துப் பதிவிட்டிருக்கிறான்.

அதை ஒன்று முதல் ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்துள்ளனர்.

அவனது தாயோ, தந்தையோ, அண்ணனோ , அக்காவோ, உறவினரோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ, அவனிடம் உனக்கு எதுக்குடா இந்த வெட்டிப் பொழப்பு.
அதுவும் பதினைந்து வயதில் பள்ளிக்குச் சென்று ஒழுங்காகப் படிக்காவிட்டால், எதிர்காலம் என்ன ஆகும்?

ஒழுங்காகப் படி இதெல்லாம் வேண்டாம் என்று மண்டையில் தட்டி சொல்லவில்லை போல.

மேலும் அவனது காணொளிகளைப் பார்த்தால், யாரோ ஒரு விவரமான பெரிய வயதுக்ககாரர் அவனைப் பின்னிருந்து இயக்குகிறார் என்பது தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது.

நல்ல தரமான வீடியோக்கள், சரியான கத்தரிப்பு , அதோடு பின்னனி இசையும் கூட வருகிறது.

இதை தனியாகப் பதினைந்து வயது சிறுவனால் செய்ய முடியாது.

சரி அது அவன் தலையெழுத்து எக்கேடோ கெட்டு ஒழியட்டும் என்று விடுமாறும் இல்லை அவன் கதை.

தன்னை மக்கள் வெகுவாக ரசிக்கத் துவங்கிய பிறகு, பகுதி நேர வேலை, வீட்டிலிருந்தே வேலை என்றெல்லாம் பேசி, காணோளி பதிவிட்டு, 1000 போட்டா 17000, 2000 போட்டா 30000 என்றெல்லாம் கதை விட்டு சில மக்களை முட்டாளாக்கிப் பல லட்சம் ரூபாய் சம்பாதித்திருக்கிறான்.

இதோடு அல்லாமல் சிலரிடம், எங்க அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லி அழுது பணம் வசூலித்திருக்கிறான்.

இதையெல்லாம் செய்து பணம் வசூலித்த அவன், அதே தாயாரையும் அழைத்துக் கொண்டு மஹிந்த்ரா விற்பனைக் கூடத்திற்குச் சென்று ஒரு தார் ரகக் காரை பதிவு செய்திருக்கிறான். இதை அதே பக்கத்தில் பதிவிட்டு ஹாய் பேமிளிஸ் இனி நாம வீடியோ போடுறது இந்தக் கார்ல தான் என்று அவனிடம் ஏமாந்தவர்களை சீண்டும் விதமாக காணொளியும் போடுகிறான்.

இதுவரை பொறுத்திருந்த ஏமாளிகள், இவன் நம்ம பணம் எல்லாம் திவால் ஆகிவிட்டது என்று சொன்னானே, அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு சொல்லியல்லவா பணம் வாங்கினான் என்று கொதித்துத் தொடர்ச்சியாக இவன் ஒரு மோசடிப் பேர்வழி என்று பதில் பதிவிடத் துவங்கினார்கள்.

சிலர், நான் எப்படி ஏமாந்தேன் என்று கூட காணொளிப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒரு பதினைந்து வயது சிறுவன் தனது தாயாருக்கு உடம்பு சரியில்லை என்று கேட்ட போது பாவம் எனப் பணம் கொடுத்தவர்களை ஒன்றும் சொல்வதற்கில்லை.
பாவம் அவர்கள் நல்லவர்கள்.

ஆனால் 1000 ரூ தந்தால் 17000 தருகிறேன் என்று கூறிய அவனிடம் பணத்தாசையில் மாட்டிக் கொண்டு , 1000 ரூ கட்டிப் பிறகு வராத பணத்திற்கு 3200 ரூ வரிப்பணமும் கட்டிய முட்டாள்களை என்னவென்று சொல்வது?

இந்த இணையமும் காணொளிகளும், மக்களை அடிமையாக்கி மூளையை மழுங்கச் செய்து முட்டாள்களாக்கி வைத்திருப்பது உண்மைதான்.

இதெல்லாம் வெளியான பிறகும் கூட அந்தச் சிறுவன், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறி தெள்ளத் தெளிவான பேச்சோடு பின்னனியில் பாடலோடு ஒரு காணொளி போடுகிறான்.

அதையும் ஒன்றரை லட்சம் மக்கள் பார்த்து விரும்பியுள்ளனர்.

நாடும் நாட்டு மக்களும்…..

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.