நாம் வாழும் வாழ்வு எப்படி இருக்க வேண்டும்?
இது எல்லோரின் மனதினுள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான கேள்வி.
இதற்கு பதில் என்னவாக இருக்குமென்றால், சந்தோஷமாக வாழ வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும், மன நிறைவோடு வாழ வேண்டும், பணம் செல்வாக்குடன் வாழ வேண்டும், ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், பிறருக்கு உபயோகமாக வாழ வேண்டும், புகழோடு வாழ வேண்டும், பிரபலமாக வாழ வேண்டும் என்று பலவிதமான பதில்களும் வரலாம்.
ஒவ்வொன்றும் வேறு வேறு மனநிலை கொண்ட பலரின் பதில்கள்.
அவரவர் வாழ்க்கையை வாழும் முறை அவரவரின் விருப்பம்.
ஆனால் எல்லோருக்கும் விரும்பியவாறு வாழ்க்கை அமைந்து விடுவதில்லை.
சிலரது வாழ்வில் முயற்சியில்லாமலே எளிதில் வெற்றி கிடைக்கலாம்.
சிலரது வாழ்வு கடைசி வரை வெற்றி பெற்ற சந்தோஷத்தைப் பெற முடியாமலே முடிந்து போகலாம்.
எது எப்படியானாலும் சரி, நம் வாழ்வு நம் கையில் தான்.
வெற்றி பெற்றவனே வாழத்தகுந்தவன் தோல்வியுற்றவன் அனைவரும் தகுதியற்றவன் என்பதெல்லாம் போலி .
இங்கு பலபேர் தோற்றால் தான் ஒருவன் வெல்ல முடியும்.
கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி வென்றுது.
தென்னாப்பிரிக்க அணி தோற்றதா?
இல்லை கடைசி வரை முயன்றது. அந்த அணியின் தோல்வி கூடப் பலரின் மனதில் ஒரு பாதிப்பை உருவாக்கியது.
இதுதான் உண்மை.
நாம் இங்கே வெல்வது தோல்வது என்பது முடிவல்ல.
நமது அடையாளத்தைப் பதிப்பது தான் முக்கியம்.
இப்படி ஒருவன் இருந்தான், இப்படியெல்லாம் முயற்சி செய்தான் என்று நம்மைப் பற்றிய நினைவுகளை நாம் விட்டுச் செல்வது என்பது சிறப்பு.
இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் என்றாலே இனிமை தான்.
இன்றளவும் காலத்தால் நிலைத்து நிற்கும் பல இனிய பாடல்கள் இருக்கின்றன.
ஆனால் அதில் ஒரு சிறப்பான பாடல் என்பது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த சகலகலா வல்லவன் என்ற உலகநாயகனின் படத்தில் வரும் இளமை இதோ இதோ பாடல்.
அந்தப்பாடலில் என்ன சிறப்பு?
இசையா? நடனமா?
வேறேதேனும் மெனக்கெடல்களா?
அதாவது இருவர் படத்தில் வரும் ஹல்லோ மிஸ்டர் எதிர்கட்சி என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் முதன் முதலாக ராக் வகை இசையில் அமைத்திருந்தார் என்பர்.
அப்படியெல்லாம் இளையராஜா இந்தப் பாடலுக்கு மெனக்கெட்டதாகத் தெரியவில்லை.
ஒரு நட்சத்திர விடுதியில் மேடைப் பாடலாக ஒலிக்கும் பாடல் வகை தான்.
இதிலும் கமலஹாசனும் அவரது தங்கையாக நடித்தவரும் போட்டிருந்த மாறுவேஷத்தை நாம் இப்போது கேலி செய்வோம்.
அப்படியெல்லாம் இருந்தும் கூட, 40 ஆண்டுகளைக் கடந்து இன்றளவிலும் கூட , புத்தாண்டு என்றாலே இந்தப்பாடல் கொண்டு தான் துவங்குகிறோம்.
AI தொழில்நுட்பம் வந்தபிறகும் கூட இந்தப்பாடலின் மவுசு குறைவதே இல்லை..
இது இளையராஜாவின் இசையால் வந்த பெருமையோ அல்லது வாலியின் பாடல் வரிகளால் வந்த பெருமையோ அல்லது எஸ்பிபியின் குரலால் வந்த பெருமையோ அல்ல.
ஹாய் எவரிபடி , விஷ் யூ ஹாப்பி நியூ இயர் என்ற அந்த வார்த்தைகள் தான் மூலாதாரம்.
அந்த வார்த்தைகள் இல்லாவிட்டால் இந்தப் பாடலுக்கு இப்படி ஒரு சிறப்பு இருந்திருக்குமா?
இதுவும் இளையராஜா இசையில் வாலி எழுத்தில் பாலு குரலில் ஒரு நல்ல பாடலின் வரிசையில் இருந்திருக்கும்.
இப்படி 40 ஆண்டுகள் கழித்தும் கோவில் ரேடியோக்களிலும், சர்ச்களிலும், பப்களிலும் பார்களிலும் பள்ளி கல்லூரி விடுதிகளிலும் பெரியவர் சிறியவர் கமல் ரசிகர், ரஜினி ரசிகர் என்று பாரபட்சமில்லாமல் இந்தப் பாடலை நாம் ரசிக்கக் காரணம் அந்த சின்ன வரிகள் தானே?
அது அந்தப் பாடலில் அமைந்த விதம் தானே?
அது கொடுக்கும் அந்த அளவில்லா உற்சாகம் தானே?
இதுதான் நல்ல வாழ்வின் நமது வெற்றியின் நியதி, சூட்சமம்.
இளையராஜா போல, வாலி போல, பாலசுப்ரமணியன் போல கடுமையாக உண்மையாக உழைப்பதோடு இது மாதிரியான சின்ன சின்ன வித்தியாசமான விஷயங்களைத் தள்ளிப்போடாமல் தவிர்க்காமல் அவ்வப்போது செய்வது என்றாவது நம்மை உச்சகட்டத்தில் கொண்டு போய் நிறுத்தலாம்.அது எந்தக் காரியத்தால் எப்போது நடக்கும் என்றெல்லாம் யாராலும் கணிக்க இயலாது.
கடைசி வரை நிகழாமல் கூட இருக்கலாம்.
ஆனால் மூச்சிருக்கும் வரை முயற்சி நின்றுவிடக்கூடாது.
வென்று காட்டுவோம் அல்லது முயன்றே சாவோம்.
வீணாக இருந்து வீழ்ந்தோம் என்பது மட்டும் நமக்கான அடையாளமாக இருந்து விட வேண்டாம்.
Once again wishing you happy new year



