2026 பொங்கலுக்கு என்னனவோ எதிர்பார்ப்புகள் இருந்த சினிமா ரசிகர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி படங்கள் வெளியாகாமல், ஒரு பெரிய படத்தின் வெளியீடு பிரச்சினை காரணமாக எதிர்பாராமல் இரண்டு படங்கள் வெளியானது.
வெளியான பராசக்தி படமும் கூட மிகப்பெரிய அளவில் வெற்றி என்ற பெருமையை அடைந்ததா என்றால் முழுமையாக என்று சொல்லிவிட இயலாது.
அந்தப்படம் விஜய் அவர்களின் படத்திற்குப் போட்டி என்று விஜய் ரசிகர்கள் கோபம் கொண்டு சிலர் படத்தைப் புறக்கணிக்கிறேன் என்று கிளம்பியதாலும், அரசியல் காரணங்களாலும் அந்தப்படம் சிறிய பின்னடைவைச் சந்தித்தது.
சில வகை ரசிகர்களைக் கவரவில்லை.
அதன்பிறகு திடீரென களமிறங்கிய வா வாத்தியார் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
நடிகர் கார்த்திக் மற்றும் நலன் குமாரசாமி இணைவில் வெளியான படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை.
ஏமாற்றமே மிச்சம்.
இதனிடையே நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படமானது எதிர்பார்ப்புமின்றி பொங்கல் வெளியீடெ என்று அறிவிக்கப்பட்டு வெளியானது.
நடிகர் ஜீவாவின் சமீபத்திய தோல்விகளை மனதில் கொண்டு மக்கள் இந்தப் படத்தை அவ்வளவு ஆர்வமாக எதிர்பார்க்கவில்லை.
ஆனால் இது மலையாளத்தில் Falimy என்ற நல்ல படத்தின் இயக்குனர் இயக்கிய படம் என்ற காரணத்தால், அந்தப்படம் பற்றி அறிந்த சிலர் இதை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
இறுதியில் பொங்கல் வெற்றியாளராக அமைந்த படம் இதுவே!
ரொம்ப நாளைக்குப் பிறகு நடிகர் ஜீவாவின் துறுதுறு நடிப்பில் ஒரு நல்ல படம்.
இளவரசு , தம்பி இராமையா மற்றும் பிற நடிகர்களின் படை சூழ படம் சிறப்பாக வந்துள்ளது. வெளியான முதல் நாளைக் காட்டிலும் அடுத்தடுத்த நாட்களில் இந்தப்படத்தை நோக்கிப் படையெடுக்கும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
முன்பகை கொண்டுள்ள பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்களான இளவரசு மற்றும் தம்பி இராமையா வீட்டில் ஒருசேர நிகழும் கல்யாண ஏற்பாடு மற்றும் சாவு ஆகியவற்றால் ஏற்படும் குழப்பங்களையும், ஊர் பஞ்சாயத்துத் தலைவரான ஜீவா அதைத் தீர்த்து வைக்கப் படும் பாடு, அதன் தொடர்ச்சியாக நிகழும் சில ஜாலியான மற்றும் அசம்பாவிதமான சம்பவங்களின் தொகுப்பே படம்.
குடும்பத்தோடு கண்டு மகிழ அருமையான படம்.
படத்தில் கதாநாயகி டூயட் என்றெல்லாம் நம்மை சோதிக்காமல் நேடியாக கதை துவங்கி கதையை மையப்படுத்தியே காட்சிகள் அமைந்தது சிறப்பு.
பெண்ணுக்கு மாப்பிள்ளையாக வரும் கதாபாத்திரமும் மார்த்தாண்டந்தச் சார்ந்த அவரது குடும்பமும் நம்மை சிரிக்க வைக்கிறது.
அவர்களின் பேச்சு மொழியே நம்மை ஈர்க்கிறது.
படத்தின் முதல் பாதி விறுவிறுவென சில சிரிப்புக் காட்சிகளோடு நகர்கிறது.
இரண்டாவது பாதியில் சில அடிதடிக் காட்சிகளும், ஒரு சில சோகக் காட்சிகளும் வந்தாலும் கூட, கதையில் நம்மை லயிக்க வைத்து விடுவதால் படம் நகர்வது சலிக்கவில்லை.
கதாநாயகனுக்காக படமும் காட்சிகளும் இல்லாமல் கதையின் நாயகனாக அசத்தலான நடிப்பைத் தந்திருக்கும் ஜீவா இனியும் பல வெற்றிகளைக் குவிக்க மக்கள் மனதார வாழ்த்துகிறார்கள்.



