Categories
சினிமா

வா வாத்தியார்- திரை விமர்சனம்.

பொங்கலுக்கு எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான படம் வெளிவராத காரணத்நால், அவசர கதியில் வா வாத்தியார் என்ற கார்த்தியின் நடிப்பில் உருவான படம் வெளியிடப்பட்டது.

படம் கடந்த டிசம்பர் மாதமே கிறிஸ்துமஸ் வெளியீடாக வர இருந்த நிலையில் தள்ளிப் போய், இப்போது இதுதான் வாய்ப்பு என்று அவசர கதியில் வெளியிட்டிருக்கிறார்கள்.

படம் வெளியிட்டது மட்டும் அவசர கதி என்று சொல்ல இயலாது, படமே அவசர கதியில் எடுக்கப்பட்டது போலத்தான் உள்ளது.

கார்த்தி அவர்களுக்கு வேறு சினிமா வாய்ப்பே இல்லாதது போலவும், நலன் குமாரசாமிக்கு வேறு கதையே கிடைக்காதது போலவும், எப்படியாச்சும் இந்தக் கதையை படமாக எடுத்து ஏதோ ஒரு விடுமுறையில் ஓட்டி குறைந்தபட்சம் லாபத்தை ஈட்டி விடலாம் என்று நினைத்து எடுத்து வைத்ததைப் போல உள்ளது.

இப்படி ஒரு கதையில் நடிக்க, கார்த்தி போன்ற ஒரு நடிகர் எப்படி ஒப்புக்கொண்டார் என்பதும், தரமான இயக்குனரான நலன் குமாரசாமி இப்படி ஒரு படத்தை எப்படி யோசித்தார் என்பதுமே புதிராகத்தான் உள்ளது.

ஒரு தவறான காவல்துறை அதிகாரி மனம் திருந்தி தான் ஆதரவு தந்து கொண்டிருந்த வில்லனைப் பந்தாடும் கதை.
புளித்து சலித்த கதை.

கேப்டன், ராகவா லாரன்ஸ் , விஷால், விஜய் என்று பலரும் நடித்து நமக்கு சலிப்புத் தட்டிய ஒரு கதை.
காட்சியமைப்புகள் அந்நியன் மற்றும் சந்திரமுகி படங்களில் வந்த காட்சி அமைப்புகளை அரைத்து உப்புமா கிண்டியவை.

இதில் எம்.ஜி.ஆர் என்ற ஆளுமையைத் திணித்து நானும் படம் எடுக்கிறேன் பேர்வழி, பொங்கல் விடுமுறையில் எப்படியோ நீங்கள் ஒரு படம் பார்த்து தானே ஆக வேண்டும், அதனால் இந்தப்படத்தை வந்துபார்த்து நொந்து செல்லுங்கள் என்று எடுத்து வைத்திருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு அலெக்ஸ்பாண்டியன் என்ற கார்த்திக் படம் என்று நினைக்கிறேன்.
ஏதோ ஒரு பண்டிகைக்குத் தான் வந்தது. ஆல் இன் ஆல் அழகு ராஜா என்றொரு படமும் வந்தது.அதுவும் பண்டிகை காலப் படம் தான் என்று நினைக்கிறேன்.

ஒருவேளை கார்த்தி மீண்டும் அதுபோன்றதொரு படத்தைத் தர விரும்பி இந்தப் படத்தில் நடித்தாரோ தெரியவில்லை.

அந்தப்படங்களிலாவது சந்தானம் சற்று நம்மை சிரிக்க வைத்திருப்பார்.
இந்தப்படத்தில் நாம் செலவழித்த பணத்தை நினைத்து நம்மை நாமே பார்த்து சிரித்துக் கொண்டால் தான் உண்டு.

நல்ல ஒரு படம் பார்த்து ரசித்து மகிழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தப் படத்திற்குப் போவது நல்ல முடிவல்ல…

ஏதோ பொங்கல் விடுமுறைக்கு ஒரு பெரிய நடிகர் படத்தை பார்த்து பொழுதைக் கழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் போகலாம்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.