உலகத்தைக் கண்டு எத்தனையோ முறை நாம் சலித்துக் கொள்கிறோம்.
நமது அன்றாட வாழ்வில் பல முறை பலருடனும் முறைத்துக் கொள்வதோ, திட்டுவதோ, சாபமிடுவதோ என நமது அனுபவங்கள் பல கசப்பாகவே இருக்கின்றன.
ஆனாலும் அதையும் தாண்டி,
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யுமா மழை
என்ற குறளுக்கு ஏற்ப, நாம் பல நல்லவர்களையும் அவ்வப்போது பார்க்கத் தான் செய்கிறோம்.
நல்லவர்கள் என்பது கேப்டன் விஜயகாந்த் போல பலருக்கு அன்னமிட்டு தலைவனாக வாழ்வது மட்டுமல்ல.
நமது தினசரி பணத்தேடலில் , ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் அன்றாடம் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த சின்ன சின்ன உதவிகளும் நம்மை நல்லவர்களாகப் பிரதிபலிக்கும்.
ஒவ்வொருவரும் இப்படியான சிறு சிறு காரியங்களைச் செய்து, உலகை அக்கறையோடு வழிநடத்தினாலே அனைவருக்கும் உலகமே இனிதாக அமையும்.
கதை 1:
சரி அந்த கதைக்கு வரலாம்.
வழக்கம் போல வராத பதட்டத்தை நமது மக்கள் உருவாக்கி விட்டார்கள்.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் என்றாலும், பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என்பது இல்லை என்றாலும், இருப்பது போல சூழ்நிலை உருவாகி விட்டதை நாம் அறிவோம்.
பலரும் தமது வண்டிகளில் , தண்ணீர் கேன்களில் , முடிந்தால் ட்ரம்களிலும் கூட பெட்ரோலை நிரப்ப வரிசை கட்டி காத்திருப்பதை நாம் அனுபவித்திருக்கிறோம்.
அப்படி ஒரு வரிசையில் நானும் மாட்டிக்கொண்டேன்.
வேலை செய்யும் உயரதிகாரியிடம் பெட்ரோல் கிடைக்காவிட்டால் பணியை வீட்டிலிருந்து செய்யலாமா என்று கேட்டதற்கு பஸ் ல வாங்க என்று தடாலடியாக பதிலளித்த காரணத்தினால், நாமும் வண்டியில் பெட்ரோலை நிரப்பி விடலாம் என்று அதே பதட்டக்கூட்டத்தில் இணைந்து விட்டேன்.
சரியான கூட்டம்.
ஒவ்வொருவரும், ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு எப்படியாவது நாம் பெட்ரோல் போட்டு விட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நின்றிருந்தனர்.
ஒரு சில மிக நல்லவர்கள் , வண்டியோடு நின்றால் கூட்டத்தில் அரை மணி நேரம் நிற்க வேண்டும் என்ற காரணத்தினால், வண்டியை மெதுவாக ஓரம்கட்டி விட்டு விறுவிறுவென பெட்ரோல் பங்கிற்குள் நடந்து வந்து வரிசையை மீறி வந்த 5-10 நிமிடத்தில் பாட்டிலில் நிரப்பிக்கொண்டு வண்டியில் சென்று ஊற்றிக் கொண்டார்கள்.
அப்படியிருக்க, அந்த வரிசையில் ஒருவரின் வண்டி ஏதோ கோளாறாகி நிற்க, இருந்த 150 பேரில் யாருமே அவரைக் கண்டுகொள்ளாத போது, அங்கிருந்த ஒரு நல்லவர் தனது வண்டியிலிருந்த உதிரி பாக டப்பாவைத் திறந்து அந்த வண்டியை சென்று சரி செய்து கொடுத்தார்..
நீ வக்கனையா எழுத மட்டும் தான் செய்வியா? உதவி செய்ய மாட்டியா என்று கேட்க வேண்டாம்.
நான் இருந்த இடத்திலிருந்து அந்த இடம் சற்று தள்ளி இருந்தது.
இது நடந்து முடியும் வரை என்ன நிகழ்ந்தது என்பதே புரியவில்லை.
புரிந்திருந்தால் என்னாலான சின்ன முயற்சியை செய்திருப்பேன்.
கதை 2:
இது தஞ்சாவூரில் நடந்தது. எனது நண்பர்களோடு சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்றிருந்தேன்.
நண்பர்கள் நல்ல வசதி படைத்தவர்கள் .
அதில் ஒருவரது காரில் தான் பயணம் செய்தோம்.
சரியாக தஞ்சை உள்ளே நுழைந்த சில நிமிடத்தில் ஒரு சாலையில், ஒரு பழைய ஆம்னி கார் ஒன்று சாலையின் இடையில் குறுக்கு மறுக்காக நின்றிருந்தது.
அந்த வண்டியில் ஏதோ மக்கர் போல. அந்த வண்டியின் ஓட்டுனர் அதைக் கிளப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறார், வண்டி கிளம்பவில்லை.
நாங்கள் எங்களது காரை சற்று சிரமப்பட்டு ஓட்டி தான் அந்த காரைக் கடக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் அது சாலையின் மத்தியில் குறுக்காக மாட்டிக் கொண்டிருந்தது.
நாங்கள் சென்ற காரை எனது நண்பன் இயக்க, அந்த வண்டியின் உரிமையாளாரான நண்பன் இடது புற இருக்கையில் அமர்ந்திருந்தான்.
இந்த பழுதான வண்டியைக் கடந்த உடனே , வண்டிய ஓரமா நிறுத்து என்று சொல்லிவிட்டு விறுவிறுவென அந்த பழுதான வண்டி பக்கம் நடந்தான்
நான் அவனைத் தடுத்து, எங்கடா போற, பாவம்டா ஏதோ ரிப்பேர் போல, வண்டி ஸ்டார்ட் ஆனதும் எடுத்துருவான்டா என்று சொல்ல, சொல்ல, டேய் வண்டி நடுரோட்டுல நிக்குது பாரு என்று சொல்லிக் கொண்டே சென்றான்.
அந்த வண்டி ஓட்டுனரிடம் இவன் போய் நின்றதும், அவரும் சற்றே தயக்கத்துடன், சார் இந்தா ஆளு வந்துட்டாங்க சார் இப்ப எடுத்துருவேன் என்று சொன்னார்.
சரிங்க வண்டி நடுரோட்டுல நிக்குது, நான் தள்ளி விடுறேன், ஓரமா நிப்பாட்டி ஸ்டார்ட் பண்ணுங்க என்று இவன் சொன்னதும் , அவனுக்கும் அதிர்ச்சி எனக்கும் அதிர்ச்சி.
இவன் போற தோரணையப் பாத்தா சண்ட போடப்போறானு நான் நினைத்தது போலவே தான் அந்த ஓட்டுனரும் நினைத்திருக்கிறார்.
இவன் வண்டியைத் தள்ளுகிறேன் என்று சொன்னதற்கு அவர் மறுப்பும் தெரிவித்தார்.
என் ப்ரெண்ட் பக்கத்துல வந்துட்டான், நீங்க போங்க என்று அவர் மறுத்த போதிலும் எனது நண்பன் பரவால ஸ்டியரிங்க புடிங்க என்று அந்த வண்டியைத் தள்ளிவிட்டு வந்து காரில் அமர்ந்தான்.
அந்த ஓட்டுனரும் அவரது நண்பரும் இவனிடம் வந்து ரொம்ப ரொம்ப நன்றிங்க என்று இரண்டு மூன்று முறை தொடர்ச்சியாக சொன்னார்கள்.
நான் எனது பாணியிலே அவனைப் பாராட்டினேன்.
டேய் இன்னைக்கு இந்த கார்காரன் அவனுக்குத் தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் போயி சொல்லுவான்.
நம்ம வண்டி ரிப்பேர் ஆகி நின்னப்ப BMW GT கார் ல இருந்து ஒருத்தரு இறங்கி வந்து கார தள்ளிவிட்டாருனு.
உன்னைய போட்டோ எடுத்திருந்தாலும் எடுத்துருப்பான்.
ஸ்டேட்டஸ் ல எல்லாம் வெச்சாலும் வெப்பான். என்று சொல்லி கேலி செய்துகொண்டிருந்தேன்.
வெள்ளை சட்ட போட்ட BMW GT ஓனரு ரோட்டுல இறங்கி ரிப்பேர் ஆன கார தள்ளுறாரானு அதிர்ச்சி ஆகியிருப்பான் என்று தொடர்ச்சியாக கேலி செய்து கொண்டிருந்தேன்.
அந்த BMW GT ன் விலை 70 லட்சம் வரை இருக்கலாம்.
இது பணத்தின் பெருமை பற்றி அல்ல. குணத்தின் பெருமை பற்றியது…
பணம் எவ்வளவு இருந்தாலும் நல்ல குணத்தோடு மற்றவர்களுக்கு அதிலும் யாரென்றே தெரியாதவர்களுக்கு அவர்களது கடினமான நேரத்தில் கை கொடுப்பதென்பது ஒரு மிகப்பெரிய பாராட்டுக்குரிய செயல் தான்.
நம்மில் பலரும் வடிவேலு பாணியில் எட்டணா இருந்தா எட்டூரு என் பாட்டக் கேட்கும் என்ற ரீதியில் நாம் உண்டு நமது வேலை உண்டு நமது நல்வாழ்க்கை உண்டு என்று சமூக சிந்தனையும் அக்கறையும் இல்லாமல் வாழும்பட்சத்தில் இது போன்ற பாராட்டுக்குரிய ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நாம் ஒவ்வொருவரும் சிறிது சமூக அக்கறையோடு வாழ்ந்தால் உலகம் இனியது தான்.



