Categories
கருத்து

பொறுப்பு வேண்டாமா? பிரபலங்களே!

சமீபத்தில் தினசரி ஒன்றில் ஒரு தலையங்கம் கண்டு வியந்தேன்.

ஆந்திர மாநிலத்தில் பொறுப்பில்லாமல் விளம்பரங்களில் நடித்து மக்களிடையே தரமில்லாத பொருட்களை சேர்த்ததற்காக சில பிரபலங்களின் மீது வழக்குகள் பதியப்பட்டதாக ஒரு செய்தி.

இது போல பொறுப்பில்லாத பிரபலங்களை வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்பது தான் நமது வாதமும்.

முதலில் குழந்தைகளின் உணவுப் பதார்த்தங்களில் துவங்கும் இந்த விஷயம், வாழ்வின் இறுதி வரை நாம் உபயோகிக்கும் அத்தனை பொருட்களையும் நம் விருப்பமில்லாமல் நமது தலையில் கட்டுகிறது.

விளையாட்டில் பிரபலமான தோனி பூஸ்ட் குடித்தால் நன்றாக விளையாடலாம், ஸ்டேமினா அதிகரிக்கும் என்று புழுகிவிட்டு தன் குழந்தைக்கு அங்கே இதே பூஸ்ட் கொடுத்து தான் வளர்க்கிறாரா?

உண்மையிலேயே விராட் கோலியின் மனைவி லக்ஸ்சோப் போட்டு குளிப்பதாலா இவ்வளவு பொலிவுடன் இருக்கிறார்?

இது பரவாயில்லை, வெறும் பண நஷ்டத்தோடு முடிந்து போகிறது. ஆனால் இந்தப் பிரபலங்களின் விளம்பரத்தில் மயங்கி இணைய சூதாட்டத்தில் களமாடி பலர் உயிரை இழந்திருக்கிறார்கள்.

இப்படியான அநியாயமான காரியத்திற்கு அவர்கள் துணை போன கதையாகத்தானே அமைகிறது இந்த விளம்பரங்கள்?

ஆன்லைன் ரம்மி விளையாடச் சொல்லி சரத்குமார் அவர்கள் விளம்பரம் நடித்ததற்காக அவர்மீது கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட வேண்டுமல்லவா. ஆன்லைனில் ரம்மி விளையாடச் சொல்லவிட்டு அவர் சில லட்சங்களை வாங்கிக் கொண்டு நம்மதியாக வாழ்கிறார்.

இதில் நிதி இழப்பு அபாயம் இருக்கிறது பொறுப்புடன் விளையாடுங்கள் என 30 நொடிக்கும் குறைவான நேரத்திற்குள் மின்னனு ஒலி வருகிறது. அதை கவனிக்காமல் ரம்மி ஆடி பல லட்சங்களை இழந்து அதிலிருந்து மீள முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்த கதைகளும் இருக்கிறது.

ஒரு நடிகர், அதுவும் அரசியல்கட்சி துவங்கி மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர் இப்படியா ஆன்லைன் ரம்மி ஆடச்சொல்லும் விளம்பரத்தில் நடிப்பது?

பெரும்பாலான இந்திய மக்களுக்கு செல்லப்பிள்ளையான தோனி, சென்ற ஆண்டு உலகக்கோப்பையின் போது ஓரியோ பிஸ்கட் விளம்பரத்தை வெளியிடுவதற்காக செய்த பில்டப்பில் பலருக்கும் அவர்மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டது.

தோனி மட்டுமல்ல, கிரிக்கெட்டில், சினிமாவில் ஏன் சீரியலில் பிரபலமான அனைவரும் விளம்பரத்தில் நடித்து எதையாவது விற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்தியாவின் உயர்ந்த மனிதன் அமிதாப், சுபாரி பாக்கு விளம்பரத்தில் நடிக்க வேண்டிய அவசியமென்ன?

அமிதாப் மட்டுமல்ல ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவும் தான் அந்த விமல் பாக்கு விளம்பரத்தில் நடிக்கிறது.

இப்படி இவர்கள் விளம்பரம் செய்யும் ஏதாவது ஒரு பொருளையாவது, இவர்களோ அல்லது இவர்களது குடும்பத்தினரோ நுகர்வரா? இது நமக்கு உகந்த ஒன்றா என்பதைக் கூட அறியாமாலா விளம்பரத்தில் நடிப்பார்கள்? அப்படி அவர்களுக்கு ஒவ்வாது என்றால் பொதுஜனத்திற்கு மட்டும் எப்படி அது ஏற்புடையதாகும்?

இந்த விஷயம் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, தணடிக்கத்தக்கதும் கூட.