நமது பக்கத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தோம், அரசு அதிகாரிகளுக்குக் கடிவாளம் அவசியம் என்று.
அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, சாதாரணமாக அரசுப் பணி செய்யும் அனைவருக்கும் அந்தக் கடிவாளம் அவசியம்.
சில வாரங்களுக்கு முன்பு நான் சந்தித்த மோசமான பேருந்து பயணத்தைப் பற்றியும், அது சம்பந்தமாக முதல்வர் பிரிவில் நான் அளித்த புகார் பற்றியும் எழுதியிருந்தேன். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து சரகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது.
“தெரியாம செஞ்சுட்டாங்க சார், நான் கண்டிச்சிருதேன்” என்று எளிதாக சொல்லவிட்டார்கள். அதற்கு மேல் நானும் எதுவும் எதிர்பார்க்கவில்லை.
முதல்வர் பிரிவிலிருந்து எனக்கு ஒரு பதில் கடிதமும் வந்தது. சம்பந்தப்பட்ட புகாரின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று.
இந்த நடவடிக்கை என்பது தவறு செய்த அந்த நபர்களை கடுகளவும் பாதித்திருக்காது.
அதனால் தான் இது மாதிரியான தவறுகள் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.
நேற்றைய முன்தினம் ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை பேருந்தை நிறத்தி ஏற்றாமல் ஓட விட்டு அலைக்கழித்திருக்கிறார்.
அந்த மாணவி பொதுத்தேர்வுக்காகத் தயாராகி பள்ளி செல்கையிலே இப்படிப்பட்ட மன உளைச்சலையும், பதட்டத்தையும் ஏற்படுத்தினால் அந்த மாணவியின் மனநிலை என்ன ஆகியிருக்கும். படித்துத் தயாராகி அமைதியாகத் தேர்வுக்குப் போக வேண்டிய மாணவியை இப்படி அலைக்கழிக்க அந்த மனிதருக்கு எப்படி மனசு வந்தது.
இதே தனது பிள்ளைக்கு ஒருவன் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்திருந்தால் அதைச்செய்வாரா?
இந்த அரசு வேலையில் அமர்ந்து விட்டாலே பொதுமக்களை கிள்ளுக்கீரையாகப் பார்க்கும் மனநிலை சிலருக்கு வந்து விடுகிறதோ?
அப்படியான மனநிலையை எப்படி மாற்றுவது?
தண்டனைகளில் கடுமையான மாற்றங்கள் இல்லாமல் அது மாறாதல்லவா?
இந்த மாணவியை அலைக்கழித்ததற்காக அந்தப் பேருந்தின் தற்காலிக நடத்துனர், பணி நீக்கமாம், ஓட்டுநர் பணியிடை நீக்கமாம்.
என்னாங்க சார் உங்க நியாயம்? ஓட்டுநருக்குத் தானே நியாயமா கடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டும்?
அவர் அரசுப் பணியில் நிரந்தர ஊழியர் என்பதால் அவருக்கு இந்த தண்டனை தான் கிடைக்கும் என்பது தெரிந்ததே. நன்றாக வீட்டில் தின்று கொழுத்து விட்டு மீண்டும் வந்து இதைத்தான் செய்யப் போகிறார்.
அடுத்தமுறை படமெடுத்து மாட்டிக் கொள்ளும் வரை இதை அவர் செய்யமாட்டார் என்பது என்ன நிச்சயம்?
இந்த மாதிரியான பைத்தியக்காரர்களை பாரபட்சமில்லாமல் தண்டித்தால் தான் மக்களுக்கு அரசின் சலுகைகள் ஒழுங்காக சென்றடையும்.
ஆதங்கத்துடன் நினைவுகள்