Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

இன்னும் இருக்கிறது ஜாதிய வன்மம்

இன்றைய நவீன காலகட்டத்தில் இதெல்லாம் யார் பாக்குறாங்க என்று நாம் எளிதாகக் கடந்து விடும் ஜாதி ஏற்றத்தாழ்வு கண்ணோட்டம் என்பது இன்னும் மாறவில்லை என்பதை ஆணியில் அடித்தாற் போல நிரூபித்திருக்கிறது இன்றைய நடப்பு.

சமீபத்திய நீயா நானா என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கிராமத்தில் பிறந்து நகரத்து மாப்பிள்ளையைத் தேடும் பெண்கள், அவர்களுக்கு எதிராக கிராமத்து மாப்பிள்ளையின் தாயார் என்ற தலைப்பில் வாங்குவாதம் நிகழ்ந்தது.

அதில் ஒரு தாயார், எதிரணியில் அமர்ந்திருந்த ஒரு இளைய பெண்ணைக் குறிப்பிட்டு, அந்தப்பெண் ஒப்புக் கொண்டால் நிச்சயம் தனது மகனுக்கு உடனடியாகத் திருமணம் செய்து வைப்பேன் என்று சொல்லியவர் அந்தப் பெண் தான் பட்டியல் இனத்தைச் சார்ந்த பெண் என்பதைக் குறிப்பிட்ட உடனே, நான் என் கணவரைக் கேட்க வேண்டும் என்று பின்வாங்கிய சம்பவம் பரபரப்பானது.

இன்றளவிலும் கூட ஜாதி என்பது நமக்குள் ஏதோ ஒரு ஓரமாக இருக்கிறது என்பதை உணர்த்தியது அந்தக் குறிப்பிட்ட நொடி. அது மட்டுமில்லாமல், அந்தப் பெண்ணைத்தேடித் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் அவரைப் பேட்டி கண்டிருந்தார்கள்.

தான் சின்ன வயதிலிருந்து, கல்லூரி மற்றும் வேலை தேடிச் சென்ற இடம் வரை ஜாதியின் பெயரால் எவ்வாறெல்லாம் ஒதுக்கப்பட்டு வெட்கப்பட்டு கூனிக் குறுகி நின்றேன் என்பதைப் பேசியிருந்தார்.

சொல்லப்போனால் ஜாதியின் பெயரைக் கேட்டு ஒதுக்கி வைக்கும் மக்கள் தான் கூனிக் குறுக வேண்டும்.

ஆனால் அவர்கள் அவ்வாறல்லாமல் தைரியமாக இதைச் செய்வதும், பட்டியலினத்தைச் சார்ந்த மக்கள் திரும்பத் திரும்ப அவர்களின் ஜாதி பெயரைச் சொல்லி ஒதுக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இது இவ்வாறு இருக்கிறது என்று எடுத்துக்கூறும் சினிமா இயக்குனர்கள் சிலரும், ஜாதி வெறியர்கள், ஜாதி வெறியைத் தூண்டுகிறார்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

நான் இவ்வாறு கஷ்டப்பட்டேன், இன்னும் கஷ்டப்படுகிறேன் என்பதைக் கூடப் பொதுப்படையாகச் சொல்வது இங்கே தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கப்படுகிறது.

அந்தப்பெண் பேசும் போது, தான் இதை எடுத்துக்கூறினால் உடனடியாக இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசி மட்டம்தட்டத் துவங்குகிறார்கள் என்று கூறியிருந்தார். அந்தப்பெண் அப்படி அந்த இட ஒதுக்கீட்டை வைத்து ஜில்லா கலெக்டரெல்லாம் ஆகவில்லை. ஏதோ ஒரு பட்டப்படிப்பை முடித்து, தன்னால் இயன்ற குறைந்தபட்ச ஊதியம் வாங்குபவர் போலத்தான் தெரிகிறார்.

அப்படியிருக்க, இந்த இட ஒதுக்கீடு வன்மத்தை இவரிடமும் பேசியிருக்கிறார்கள்.
இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இந்த வன்மத்தைக் கக்குவார்களோ?

மொத்தத்தில் இங்கே ஜாதிப் பிரச்சனை என்பது சாதாரணமாக மாறாது. தொடர்ந்து இதற்கு எதிராகப் பேசிக் கொண்டே இருப்போம்.

அந்தப் பெண் குறிப்பிடுகையில், தான் தனது கிராமத்தில் இருந்ததை விட நகரங்களில் மன நிம்மதியோடு இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட பகுதியின் பெயரை வைத்து இங்கே இந்த சாதிக்காரன் தான் இருக்கிறான் என்பதைக் கண்டறிய இயலாத அளவிற்கு மக்கள் குழுமி வாழ்ந்து தனது சாதியத்தை மறந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
உண்மைதான், கிராமங்களின் அளவிற்கு, வீடு வாடகை விடும் முன் சாதி என்ன என்று கேள்வி எழுவதில்லை, தெருவுக்கு நீ வரக்கூடாது, நீ என்ன ஆளு என்றெல்லாம் கேட்கப்படுகிற கேள்விகள், நகரத்தில் கூட்டத்தோடு கூட்டமாகக் காணாமல் போய்விட்டது.

கல்வி நமக்களித்த முன்னேற்றத்தில் இன்றைய சூழலில் நகரத்தில் நாம் வீடு தேடும் போது, ஐடி ல ஒர்க் பண்றீங்களா? இல்ல எங்க ஒர்க் பண்றீங்க? என்ற ரீதியில் தான் கேள்விகள் வருகிறது.

இன்னும் கூட சில கிராமங்களில் பட்டியலினத்தைச் சார்ந்த சமூகத்தினருக்கு வீடு வாடகைக்கு விடப்படுவது இல்லை. சொல்லப்போனால் அவர்கள் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வாழ்கின்றனர். அந்தப் பகுதியைக் காலனி எனக் குறிப்பிடுவதும் வழக்கம்.

அந்தப் பெண் மனவேதனையோடு ஏன் அது காலனி என்று குறிப்பிடப்பட வேண்டும் என்று பேச, தமிழக அரசு காலனி என்ற வார்த்தை இனி நீக்கப்படுகிறது என்று சாட்டையை சுழற்றி சமூக நீதிக்காக ஒரு அடி முன்னெடுத்த வைக்க, நாமும் கைதட்டிக் கொண்டாடி சாதியப் பிரிவினைக்கு எதிரான பாதையில் அடி எடுத்து வைப்போம்.