கொலை என்பது திட்டமிட்டு, ஒருவரைத் துப்பாக்கி வைத்து சுடுவதும், அல்லது கத்தி வைத்துக் கிழிப்பதும் மட்டுமல்ல.
ஒரு சுமாரான போக்குவரத்து இருக்கும் சாலையில் 20 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி வைத்து விட்டு அதை மறிக்காமல், மாற்று வழிப்பதாகைகள் வைக்காமல் அந்தப்பள்ளத்தில் அந்த வழியாகப் பயணித்த ஒரு குடும்பத்தில் இருவர் விழுந்து இறந்தால், அதுவும் கொலை என்று தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
ஆமாம் இது விபத்து தான்.
ஆனால் அந்த விபத்து நிகழக் காரணம் என்ன தெரியுமா?
ஒரே ஒரு வழிமறிப்பும், மாற்றுப் பாதைக்கான பதாகையும் இல்லாதது தான். உயிர்களை மதிக்காத அந்த கட்டுமான நிறுவனத்தின் அலட்சியம் தான் காரணம்.
திருப்பூர் அருகே ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலை வழித்தடத்தில் ஏதோ கட்டுமான வேலை நடக்க, அங்கு 20 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டப்பட்டிருந்திருக்கிறது.
ஆனால் அந்தப்பள்ளம் அங்கு இருப்பது அறியாமல் இரவில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு தம்பதியினரும் அவர்களது குழந்தையும் பள்ளத்தில் விழுந்திருக்கின்றனர்.
இரவு நேரம் யாரும் இல்லாத காரணத்தாலும், 20 அடி பள்ளத்திலிருந்து மேலே வர வழியில்லாத காரணத்தாலும், விடிய விடிய அந்தப் பள்ளத்திலேயே கிடந்து தவித்திருக்கின்றனர்.
மறுநாள் காலை அந்த வழியாகச் சென்ற சிலர் பார்த்து மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க, தாயும், தகப்பனும் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்து விட, குழந்தை உயிருக்குப் போராடி வருகிறது. தொடர்ந்து சிகிச்சை நடைபெறுவதாகத் தகவல்.
இந்த சூழலில் இறந்து போன அந்த இருவருக்கும் 3 லட்சம் நிவாரணத் தொகையை அரசாங்கம் வழங்கியிருக்கிறது. கொழுப்பு எடுத்து, போதைக்காக கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்த குடிகாரர்களுக்கு 10 லட்சம் நிவாரணம்.
ஏதோ ஒரு இத்துப்போன கட்டுமான நிறுவனம் வேண்டுமென்றே அலட்சியத்தால் செய்த தவறால் பலியான உயிர்களுக்கு 3 லட்சம் நிவாரணமாம்.
அந்த கட்டுமான நிறுவனத்தின் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு தண்டனை தரப்பட வேண்டும்.
அவர்களது சொத்து பறிமுதல் செய்யப்பட்டு இறந்துபோன இந்தக் குடும்பத்தில் மீதமிருக்கும் குழந்தைக்கு வழங்கப்பட்டு, அது வயது வரும் வரை ஒழுங்காக வளர்க்கப்படுகிறதா என்பது அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட வேண்டும்.
கேவலம் பணத்திற்காகத் தானே இந்த அலட்சியம், இந்த உயிரிழப்பு. அந்தப்பணத்தை அந்த நிறுவனத்திடமிருந்து முற்றிலும் பறிக்க வேண்டும்.
ஆனால் நடைமுறையில் இந்த 3 லட்சம் தொகையை அந்தக் குழந்தையின் சொந்தக்காரன் எவனாவது வாங்கிக்கொண்டு குழந்தைக்கு நான் பொறுப்பு என்று கூறி அதையும் ஒழுங்காக வளர்க்காமல் நட்டாத்தில் விடுவார்கள்.
இது சாதாரண விபத்தாகவே முடிந்து விடும்.
இன்னும் தொடர்கதையாக இது போன்ற சம்பவங்கள் தொடரும்.
கட்டிமுடிக்காத பாலத்தில் கார் ஏறி உயிர்கள் பலியானதற்கே நாம் கூகுள் மேப்பை குறை சொன்னோமே?
நம் சமுதாயத்திலா நியாயம் கிடைக்கப்போகிறது?