ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசை நடத்தும் கட்சிக்காரர்கள், தமிழ்நாட்டில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினார்கள்.
காஷ்மீரில் நிகழ்ந்த படுகொலையை நிகழ்த்திய தீவிரவாதிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டமாம்.
அடப்பாவிகளா! அப்ப கொரோனா ல மக்கள் இறந்து போனா கொரோனாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவாங்க போல.
இது மாதிரி ஒரு சினிமாவுல, நோய்க்கு எதிரான போராட்டம்னு RJ பாலாஜி நகைச்சுவை செஞ்சிருப்பாரு.
அதேமாதிரி தான் இருக்கு இவனுங்க செஞ்சது. உண்மையிலேயே இந்தப்போராட்டம் என்ன கோரிக்கையோட இருந்திருக்கனும்னா, பாதுகாப்பு சரியாகத் தராமல், மக்கள் உயிர் பலியாகக் காரணமாக இருந்த ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று தானே இருந்திருக்க வேண்டும்?
இதில் இன்னொரு கோரிக்கை வேறு.
ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டினரை வெளியேற்ற வேண்டுமாம்.
எப்படி ஊடுருவ முடியும்? எல்லையில் பாதுகாப்பு சரியாக இல்லாவிட்டாலோ , கடல் வழியில் பாதுகாப்பு சரியாக இல்லாவிட்டாலோ அல்லது விமான நிலையங்களில் சோதனைகள் சரியாக செய்யப்படாமல் விட்டாலோ தான் ஊடுருவ முடியும்! இதற்கும் அவர்கள் அரசாங்கத்தை தான் கண்டிக்க வேண்டும்.
இவர்கள் தான் என்ன செய்கிறோம் என்பதே அறியாமல் தனது சொந்த கட்சி நடத்தும் அரசுக்கு எதிராகத் தான் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்த்தி இருக்கிறார்கள்.
ஒருவேளை யாராவது அட்மின் தந்த யோசனையாக இருக்குமோ என்னவோ!
இவர்கள் செய்தது போதாதென்று நமது ஒன்றிய அரசு செய்யும் காரியங்கள் மனதில் சுமையை ஏற்படுத்துகின்றன.
ஏதோ ஒரு சில தீவிரவாதிகள் செய்த தவறுக்காக அந்த நாட்டின் அப்பாவி பொதுஜனம் பாதிக்கும் விதமாக தண்ணீர் தருவதை நிறுத்தி வைத்தது, அவர்கள் மீது போர் தொடுக்க ஆயத்தமாகும் விதமாக காரியங்களைச் செய்வது சரியல்ல.
உண்மையிலேயே அந்தத் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசில் சிலர் ஆதரவு அளித்திருக்கலாம், அடைக்லம் தந்திருக்கலாம்.
அதற்காக ஒட்டுமொத்த அப்பாவி மக்களையும் தண்டிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?
உளவுப்பிரிவு உட்பட பல பிரிவுகளும் இருக்கின்றனவே, அதை வைத்து தவறு செய்தது யார் என்பதைக் கண்டறிந்து அவர்களை கொடூரமாக தண்டிக்கலாமே?
அதைவிடுத்து, மூட்டைப் பூச்சிக்காக வீட்டைக் கொளுத்திய கதையாக ஒட்டுமொத்த நாட்டின் மீதும் போர் தொடுக்கும் ஆயத்த முயற்சிகள் தவறு.
மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகத் தான் வரும் என்று அறியப்படுகிறது.. இதோ அதற்கான அறிகுறிகள் ஆரம்பம்.
தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பதற்காக ஒரு மொத்த நாட்டையும் தண்டிப்பது ஒரு போதும் சரியல்ல.
நல்ல முடிவு பிறந்தால் நல்லது.