உண்மை சுடுமெனில்? பொய் சொல்வது தவறில்லையே?
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
என்ற வள்ளுவனின் வாக்கைக் கருத்தில் கொள்ளலாமே!
சில நேரங்களில் உண்மையை விட பொய் சிறப்பு என்பதை விளக்கும் குறள் தானே இது?
திருக்குறளையே எத்தனை முறை தான் உதாரணமாகச் சொல்வது என்றால், வேறு சிலவற்றை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாமே!
கண்ணு உனக்கென்னடா ராசா? நீ பாக்க ராசா மாதிரி இருக்க என்று தன் பிள்ளைகளைப் பார்த்து சொல்லும் பெற்றோர்களின் கூற்று பல இடங்களில் பொய் தானே? அந்தப்பிள்ளை ராசா மாதிரி இருக்கோ இல்லையோ, ஆனால் அந்த வார்த்தை அதனுள் ஒரு தன்னம்பிக்கையை வளர்க்குமல்லவா?
சினிமா வை உதாரணமாகக் கொண்டால்…
நானும் ரௌடிதான் படத்தில்
விஜய் சேதுபதி, நயன்தாரா அப்பா இறந்ததை மறைத்து, நயன்தாராவிடம் பொய் சொல்லி சிரிக்க வைக்கும் காட்சிகள்.
சரிதானே?
ஆம்… பல இடங்களில் உண்மையை உரக்க சொல்வது யார் மனதையாவது காயப்படுத்தினால், அதைத் தவிர்ப்பதே சிறப்பு என்று தோன்றுகிறதல்லவா? ஆனால் பொய் நீடிக்காது.
சூழலில் காயத்திற்கு மருந்தாகும்.
அபூர்வ சகோதர்ர்கள் படத்தில் ஸ்ரீவித்யா கமல்ஹாசன் அவர்களைப் பார்த்து சொல்லும் அந்த வசனம்!
“என் புள்ள மாதிரி குள்ளமாவோ, ஊனமாவோ…”
அந்த இடத்தில் குட்டி கமல் கண்கலங்கும் காட்சியைக் கண்டால் அழாதவருக்கும் அழுகை வரும்.
ஆம் பெற்ற தாயே ஒரு சூழ்நிலையில் பிள்ளையை குறை சொல்வது.
அது குறை அல்ல உண்மைதான்.
அவர் குள்ளம் என்பது உண்மை…ஆனால் அந்த உண்மையை ஒருமுறை சொல்லிக்காட்டி ஆக வேண்டிய அவசியம் இல்லையல்லவா?
அதன் தாக்கம் அவரை எப்படி மாற்றும் என்பதை நாம் பார்த்திருப்போமல்லவா?
நான் நல்லவன் என்ற வாக்கியத்தை விட அவன் அயோக்கியன் என்பது இப்போது பலரால் அடிக்கடி உபயோகிக்கப்படுகிறது. பெருமைக்காக.
ஆனால் உண்மையிலேயே யாராவது நம்மை இழிவுபடுத்தினால் தாங்க இயலாது.
ஒருவன் எதற்கும் லாயக்கு இல்லை என்றால் அது அவன் பிரச்சினை.
அதை சொல்லி புண்ணியமென்ன? நாம் அதைச்சொல்லி அவர்கள் மன சங்கடத்திற்கு ஆளாக வேண்டாமே?
மாறாக
முடிந்தால் அவனைத் திருத்தலாம்! பக்குவமாக எடுத்துச் சொல்லி. அதற்கெல்லாம் நேரமில்லை என்றால் விட்டுவிடலாம்.
அதை விடுத்து சொல்லிக்காட்ட வேண்டாம்.
உண்மையாகவே இருந்தாலும், அது தீமை செய்யுமெனில் அதைத் தவிர்க்கலாமே?
உண்மை சுடும்…
சூடு வைப்பவனுக்கு வலி அல்ல… சூடு படுபவனைக் கொஞ்சம் கருத்தில் கொள்ளலாமே?